
-இரா. முருகன்
ராஜ்கபூர் நடனம் ஆடியபடியே முன்னால் நகர்ந்துவந்தார். கையில் குஞ்சம் தொங்கும் கழி. நான் இப்போது தலையை நீட்டவேண்டும். நீட்டி ஒரு வினாடி ப்ரேமுக்குள் வர, மொட்டைத்தலையில் லொட் என்று ஒரு தட்டு. பென்சில் மீசை வரைந்த கோஷ்டி ஆட்டக்காரர்கள் தாவிக் குதித்தார்கள்.
"கட்" அவ்வளவுதான். செட்டுக்கு வெளியே வந்து, ஆஸ்பெஸ்டாஸ் கூரை நிழலில் நின்றபோது வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்தேன்.
"க்யா டக்லு... முடிச்சாச்சா?"
ரோஷ்ணிபாய் ஓரமாகக் கால் நீட்டி உட்கார்ந்துகொண்டிருந்தாள். பக்கத்தில் துணி விரிப்பில் *குழந்தை. கால் பக்கம் உதைத்து உருட்டிவிட்ட பால்புட்டி.
உனக்கு என்ன சீன் ரோஷ்ணி?"
தலையைக் கைக்குட்டையால் துடைத்தபடி கேட்க, ரோஷ்ணி காவியேறிய பல்லைக் காட்டிச் சிரித்தாள்.
"நானா... ராஜ்கபூரோட டூயட் பாட வந்திருக்கேன்..."
முசாபர்பூரிலிருந்து பத்து வருடம் முன்னால் கிளம்பி வந்தபோது கூடக் கொண்டுவந்த கனவு அது.
உள்ளேயிருந்து யாரோ கையசைக்க, ராஜஸ்தான் பாவாடை அணிந்த நடனக்காரிகள் திமுதிமுவென்று உள்ளே ஓடினார்கள். ரோஷ்ணிபாய் வாரிச் சுருட்டி எழுந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டாள்.
''நானும் போகணும்... மடியிலே பிள்ளையோட திண்ணையிலே உட்கார்ந்து இருக்கறபோது பத்மினி ஆடிக்கிட்டு வருமாம்..."
அழ ஆரம்பித்த குழந்தை வாயில் பால்புட்டியைத் திணித்தபடி உள்ளே ஓடினாள் ரோஷ்ணிபாய்.
அதென்னமோ... ரோஷ்ணிபாயின் முகத்தில் ஒரு கைக்குழந்தைக்காரி களையிருக்கிறது போல. தட்டுப்பட்ட படம் எதுவானாலும் கையில் குழந்தை நிச்சயம்.