அந்த ஏழு பேர், கதை: ராஜேஷ்குமார், முடிவு: என். ராமலஷ்மி, மூணாறு

அந்த ஏழு பேர்,  கதை: ராஜேஷ்குமார், முடிவு: என். ராமலஷ்மி, மூணாறு
ஓவியம்: தமிழ்

முற்பகல் பதினொரு மணி.

திறந்த வெளி சிறைச்சாலையின் விவசாய நிலப்பகுதியில் கைதிகள் செய்து கொண்டிருந்த விவசாயப் பணிகளை மேற்பார்வையிட்டபடி நின்றிருந்த வார்டன் ஸ்டீபன் தனக்குப் பின்னால் எழுந்த ‘ஸார்’ என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார். அஸ்ஸோஸியேட் வார்டன் ருத்ரபதி நின்றிருந்தார்.

“என்ன ருத்ரபதி?”

“ஜெயிலர் உங்களைக் கூப்பிட்டார் ஸார்.”

“அரைமணி நேரத்துக்கு முன்னாடிதானே அவர்கிட்ட பேசிட்டு இந்த ஸ்பாட்டுக்கு வந்தேன். சரி, நீங்க இங்கே இருந்து இவங்களை சூபர்வைஸ் பண்ணுங்க. நான் போயிட்டு வந்துடறேன்.”

சொன்ன ஸ்டீபன் சற்றே வேகமான நடையில் சற்றுத் தொலைவில், ஒரு பழைய கட்டிடம் அருகே தெரிந்த சிறை நிர்வாக அலுவலக அறையை நோக்கிப் போனார். இரண்டு நிமிட நடையில் அறை சமீபிக்க படிகளில் ஏறி உள்ளே நுழைந்தார்.

ஜெயிலர் சக்ரபாணி ஓய்வுபெறும் வயதை நெருங்கிக் கொண்டிருந்தாலும், முறையாய் செய்து வரும் உடற்பயிற்சியின் காரணமாக முகத்தின் முதுமையை பத்து வயது குறைத்துக் காட்டினார். டையில் குளித்திருந்த அடர்த்தியான மீசை மேலுதட்டின் மேற்பரப்பை முழுவதுமாய் ஆக்ரமிப்பு செய்திருந்தது.

சல்யூட் அடித்து தளர்ந்த ஸ்டீபனைப் பார்த்து தனக்கு முன்பாய் வெறுமையோடு இருந்த நாற்காலியைக் காட்டினார். ஸ்டீபன் தயக்கத்தோடு நாற்காலியில் உட்கார்ந்ததும் கேட்டார்.

“ஓப்பன் பிரிஸன் சூபர்வைஸிங்க்ல இருந்தீங்க போலிருக்கு?”

“ஆமா ஸார்…..எனிதிங்க் இம்பார்ட்டண்ட்?

“எஸ்…பத்து நிமிஷத்துக்கு முன்னாடி கலெக்ட்ரேட்டிலிருந்து ஒரு லெட்டர் வந்தது. கலெக்டரோட பி.ஏ அனுப்பியிருக்கார். டேக் ஏ லுக்” என்று சொன்ன சக்ரபாணி ஒரு பழுப்பு நிற கவரை எடுத்து நீட்ட, ஸ்டீபன் குழப்பமான முகத்தோடு வாங்கிப் பிரித்து, டைப் அடிக்கப்பட்டிருந்த ஆங்கில வார்த்தைகளின் மேல் தன் பார்வையை மேயவிட்டார். படிக்க படிக்கவே தமிழாக்கம் மனதுக்குள் ஓடியது.

“ஒரு முக்கியமான பாதுகாப்புப் பணி குறித்து சிறைத்துறை மேலதிகாரியின் உடனடியான பார்வைக்காக இக்கடிதம் அனுப்பப்படுகிறது. வருகிற புதன் கிழமை அன்று பதினான்காம் தேதி மாலை மூன்று மணியளவில் அரசூர் அருகே உள்ள அட்சயா பொறியியல் கல்லூரியின் வெள்ளிவிழாவில் கலந்து கொள்வதற்காக, நமது குடியரசுத் தலைவர் வருகை தரவிருக்கிறார். அவருடைய பாதுகாப்புக்காக எல்லா முன்னேற்பாடுகளையும் செய்யும் பொருட்டு நேற்று அரசு அதிகாரிகள் அளவில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு அதில், முக்கியமான விஷயமொன்று விவாதிக்கப்பட்டது. அதாவது அட்சயா பொறியியல் கல்லூரியின் பிரதான கட்டிடம் நெடுஞ்சாலையை விட்டு மூன்று கிலோமீட்டர் தூரம் தள்ளி உள்ளே கட்டப்பட்டிருக்கிறது. கல்லூரிக்குப் போக முறையான சாலை வசதியிருந்தாலும், சாலையின் இரண்டு பக்கங்களிலும் பல்வேறு வகையான மரங்கள் உயரமாகவும், அடர்த்தியாகவும் வளர்ந்து நெருக்கமாக காணப்படுகிறது.

இப்படிப்பட்ட அமைப்பு குடியரசுத் தலைவரின் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்குமோ, என்கிற எண்ணம் டெல்லியில் உள்ள ‘பிரசிடென்ஷியல் செக்யூரிட்டி விங்’ எனப்படும் கண்காணிப்பு குழுவுக்கு ஏற்பட்டு இருக்கிறது. எனவே அந்த மரங்களின் கிளைகளை வெட்டி அகற்ற வேண்டிய பணியை சிறைத்துறையிடம் ஒப்படைக்க முடிவுசெய்து உங்களுக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளோம்.

எனவே உங்கள் சிறைச்சாலையில் உள்ள நன்னடத்தைப் பிரிவு ‘D’ கிரேடில் உள்ள கைதிகள் சிலரை அங்கே அழைத்துக்கொண்டு போய் அந்த மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றும் பணியை நாளை மாலை ஆறு மணிக்குள் முடித்துத் தரும்படி சிறைநிர்வாகத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கேட்டுக் கொள்கிறது.”

வார்டன் ஸ்டீபன் கடிதத்தைப் படித்து முடித்து விட்டு ஜெயிலர் சக்ரபாணியை ஏறிட்டபடி மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்.

“ஸார்… போன வருஷம் இதே மாதிரியான ஒரு கோரிக்கைக் கடிதத்தை கலெக்ட்ரேட் நிர்வாகம் நமக்கு அனுப்பியிருந்தது. அந்தக் கடிதத்துல கவர்னர் ஒரு பட்டமளிப்பு விழாவுக்கு போகப் போறதாகவும், அப்படி போகிற வழியில் ரோட்டோட டிவைடர்கள் அழுக்காய் இருக்கிறதால, அதுக்கு பெயிண்ட் அடிச்சு அழகுபடுத்த நன்னடத்தைப் பிரிவு ‘D’ கிரேடில் உள்ள பெயிண்ட் வொர்க் தெரிஞ்ச கைதிகள் சில பேரை அனுப்பி வையுங்கள்னு குறிப்பிட்டிருந்தாங்க. நாமும் பெயிண்ட் வேலை தெரிஞ்ச ஒரு ஆறு ‘D’ கிரேடு கைதிகளை அனுப்பி வெச்சு அந்த வேலையை முடிச்சு கொடுத்தோம்.”

“ஆமா எனக்கும் நல்லா ஞாபகமிருக்கு. ராத்திரி பத்து மணிக்கு வேலையை ஆரம்பிச்சு, விடியற்காலை நாலு மணிக்குள்ளே அந்த பெயிண்டிங் பூச்சை முடிச்சு கொடுத்தோம். கலெக்டரே நேரிடையா சிறைக்கு வந்து பாராட்டிப் போனார். இப்ப அவர் கேட்ட இந்த வேலையையும் முடிச்சு குடுத்துடலாம். ‘D’ கிரேடில் இப்ப எத்தனை கைதிகள் இருக்காங்க…?”

“ரொம்பவும் நம்பகமான கைதிகள்ன்னா ஒரு ஏழுபேரு தேறுவாங்க ஸார்…”

“அவ்வளவுதானா?”

“இருபது பேர்க்கு மேல இருப்பாங்க ஸார். ஆனா அதுல நான் ‘அப்ஸ்ர்வ்’ பண்ணி வெச்சிருக்கிற ஏழு பேரை மட்டும்தான் நம்பிக்கையோடு வெளியே கூட்டிட்டு போய் அவங்க சொன்ன வேலையை முடிச்சு குடுத்து திரும்பவும் கூட்டிட்டு வரமுடியும்…!”

“யார் அந்த ஏழு பேர்?”

“ஒன் மினிட் ஸார்” என்று சொன்ன ஸ்டீபன் தன்னுடைய செல்போனை எடுத்து அதிலிருந்த ஒரு செயலியை ‘ஆன்’ செய்துவிட்டு மெல்லிய குரலில் பெயர்களைப் படிக்க ஆரம்பித்தார்.

“சித்தோடு துரை, செங்காணி, கெளதமன், மாரிச்சாமி, குழந்தைவேலு, டேவிட் ஜாக், மேலப்பாளையம் ஹமீது. இந்த ஏழு பேரும்தான் இப்போதைக்கு ஹார்ம்லஸ் பிரிசினர்ஸ் ஸார்.”

“அதாவது ‘எஸ்கேப் ரிஸ்க்’ இல்லாத கைதிகள்ன்னு சொல்ல வர்றீங்க?”

“ஆமா ஸார்.”

“யோசனை பண்ணி சொல்லுங்க ஸ்டீபன்? பிரச்னை இல்லாமே அவங்க வேலையை செஞ்சு முடிப்பாங்களா?”

“நிச்சயமாய் ஸார்… கடந்த ஆறுமாத காலமாய் நான் பண்ணின கீன் அப்ஸர்வேஷன் ரிப்போர்ட்டின்படி அந்த ஏழு பேரையும் எந்த ஒரு ஓப்பன் கண்டிஷனுக்கும் கூட்டிப்போய் வேலை வாங்கலாம்… செக்யூர்ட்டி பர்பஸீக்கு கூட ரெண்டு வார்டன்ஸை அனுப்பினாலே போதும்.”

“சரி, அவங்க இப்ப எந்த வொர்க் ஸ்பாட்ல இருக்காங்க…?”

“ஓப்பன் பிரிசன் விவசாய நிலத்துல உரத் தெளிப்பு வேலையைப் பண்ணிட்டிருக்காங்க ஸார்.”

“ஓ.கே! இன்னும் அரைமணி நேரத்துக்குள்ளே அந்த ஏழு பேரையும் பெரிய வேப்பமரத்துக்கு கீழே அசெம்பிள் பண்ண வெச்சுட்டு எனக்குத் தகவல் கொடுங்க…”

“எஸ்… ஸார்” ஜெயிலர் சக்ரபாணிக்கு ஒரு சல்யூட்டை கொடுத்துவிட்டு அறையினின்றும் வெளியேறினார் ஸ்டீபன்.

*****

வெய்யிலின் உக்கிரத்தை வடிகட்டி, குளிர்ச்சியான நிழலைக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த அடர்த்தியான வேப்பமரத்துக்கு கீழே, ஏழு கைதிகளும் கைகளைக் கட்டியபடி பவ்யமாய் நின்றிருக்க, ஜெயிலர் அவர்களைப் பார்த்து குரலை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தார். சற்றுத்தள்ளி வார்டன் ஸ்டீபன் நேர்பார்வையோடு விறைப்புடன் நின்றிருந்தார்.

‘D’ கிரேடு பிரிவில் இருபதுக்கும் மேற்பட்ட நன்னடைத்தைக் கைதிகள் இருந்தாலும், அதிலிருந்து உங்க ஏழு பேரை மட்டும் செலக்ட் பண்ணி அரசூருக்கு அனுப்பப் போறோம்… அங்கே எது மாதிரியான வேலையைச் செய்யணும்ன்னு வார்டன் சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறேன்.”

வரிசையில் முதல் நபராய் நின்றிருந்த கைதி செங்காணி தலையாட்டினான். “வார்டன் அய்யா எல்லாத்தையும் விபரமா சொன்னார்ங்கய்யா. எங்க ஏழு பேர்க்குமே மரம் ஏறத் தெரியுங்கய்யா. சித்தோடு துரையும், மேலப்பாளையம் ஹமீதும் தர்மபுரி மாந்தோப்புகளில் ரெண்டு வருஷம் வேலை பார்த்திருக்காங்கய்யா. மாரிச்சாமியும், கெளதமனும் பாலக்காட்டுல தென்னமரம், பனமரம் ஏறி கள்ளு இறக்கி வியாபாரம் பண்ணியிருக்காங்க…”

“சரி… நாளைக்குக் காலையில ஆறு மணிக்கெல்லாம் இங்கிருந்து புறப்பட்டுடணும். அரசூர் இங்கிருந்து பதினோரு கிலோமீட்டர். ஸ்பாட்டுக்கு ஒரு இருபது நிமிஷ நேரத்துக்குள்ளே போயிடலாம். ஏழு மணிக்கெல்லாம் வேலையை ஆரம்பிச்சு, சாயந்தரம் நாலு மணிக்குள்ளே வேலையை முடிச்சுட்டு இங்கே அஞ்சு மணிக்குள்ள வந்துடணும். நீங்க ஏழு பேரும் செய்யப் போற இந்த ஒரு நாள் வேலைக்கு உங்க தண்டனைக் காலத்துல ஒரு வாரம் குறையும். அது தவிர மூணு வேளையும் நல்ல சாப்பாடும் ஆளுக்கு ஐநூறு ரூபாய் கூலியும் கிடைக்கும்…”

ஏழு பேரும் தரையில் விழுந்து கும்பிட்டார்கள். கைதி மாரிச்சாமி சொன்னான். “நீங்க இப்படிச் சொன்னது எங்களுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கய்யா…”

“அதேமாதிரி… நாங்க சந்தோஷப்படற மாதிரி உங்க வேலையும் இருக்கணும்… அங்கே வெளியாட்கள் யார்கிட்டேயும் பேசக்கூடாது. உங்களுக்கு ஏதாவது வேணுமின்னா ஹெட் வார்டன்ஸ்கிட்டே சொல்லணும். அவங்க சொல்ற பேச்சை மீறி நடக்கக் கூடாது.”

சித்தோடு துரை கைகளை உயர்த்தி கும்பிட்டான்.

“அய்யா… நாங்க இங்கே வர்றதுக்கு முந்தி நிறைய தப்பு பண்ணியிருக்கோம். ஆனா இங்கே வந்த பிறகு அந்தத் தப்பை நினைச்சு நினைச்சு அழுது எங்களை நாங்களே சுத்தம் பண்ணிகிட்டோம். இப்பெல்லாம் ஒரு சின்னப் பொய்யைக் கூட சொல்றதுக்கு நாக்கு கூசுதுங்கய்யா. நீங்க எது மாதிரியான வேலையைக் கொடுத்தாலும் சரி, அந்த வேலையை நாங்க ராத்திரி பகல்ன்னு பார்க்காமே செஞ்சு முடிக்க நாங்க தயாராய் இருக்கோம்ங்கய்யா…!”

ஜெயிலர் சக்ரபாணி ஒரு புன்முறுவலோடு தனக்கு பக்கத்தில் நின்றிருந்த வார்டன் ஸ்டீபனிடம் திரும்பினார்.

“ஸ்டீபன்.”

“ஸார்.”

“இவங்க ஏழு பேரையும் இன்னிக்கு ஒரே ப்ளாக்குல இருக்கிற செல்லில் போடுங்க. காலையில் ஆறு மணிக்கெல்லாம் குளிச்சு சாப்பிட்டு ரெடியானால்தான் அரசூர்க்கு சரியான நேரத்தில் போய்ச் சேர்ந்து, வேலையை ஆரம்பிக்க வசதியாய் இருக்கும்.”

“எஸ்… ஸார்.”

“பாதுகாப்பு பணிக்கு செக்யூர்டி கார்ட்ஸ் ரெண்டு பேர் போதுமா?”

“போதும் ஸார்.”

“யாரை அனுப்பலாம்?”

“டெப்டி வார்டன் ருத்ரபதியையும், ஹெட்வார்டன் கிருஷ்ணன் நாயரையும் அனுப்பிடலாம் ஸார்…”

“இட்ஸ் ஓ.கே… ஏற்பாடு பண்ணுங்க. நான் கலெக்டரோட பி.ஏவுக்கு மெஸேஜை அனுப்பிடறேன்.” ஜெயிலர் சொல்லிக் கொண்டே தன்னுடைய அறைக்கு நடக்க ஆரம்பித்துவிட, ஸ்டீபன் உத்யோகபூர்வமான சல்யூட் ஒன்றைக் கொடுத்துவிட்டு கைதிகளிடம் வந்து அவர்களுக்கு முன்பாய் நின்று குரலை உயர்த்தினார்.

“நாளைக்கு காலையில் அஞ்சு மணிக்கெல்லாம் எந்திரிச்சு குளிச்சு சாப்பிட்டு ஏழுபேரும் ரெடியாகி ஆறு மணிக்குள்ளே வேன்ல வந்து உட்கார்ந்துடணும். யாரும் லேட் பண்ணிடக்கூடாது.”

“சரிங்கய்யா.”

ஏழு பேரும் மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டி பவ்யமாய் தலைகளை ஆட்டினார்கள்.

*****

ல்ல தூக்கத்தில் இருந்த ஜெயிலர் சக்ரபாணி தன்னுடைய செல்போன் வைபரேஷனில் உதறும் சத்தம் கேட்டு, போர்வையை விலக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். சுவர் கடிகாரம் காலை 5.45 மணி நேரத்தைக்காட்டிக் கொண்டிருந்தது. பக்கத்தில் படுத்திருந்த அவருடைய மனைவி பத்மாவதி தூக்கக் குரலில் கேட்டார்.

“போன்ல இந்நேரத்துக்கு யார்ங்க?”

“வார்டன் ஸ்டீபன் கூப்பிடறார்.” சொன்னவர் செல்போனின் பச்சை நிற டிக் மார்க்கைத் தேய்த்துவிட்டு காதுக்கு ஒற்றினார்.

“சொல்லுங்க ஸ்டீபன்.”

“ஸாரி ஸார் டூ ஸே திஸ்… இன்னிக்கு அந்த ஏழு கைதிகளும் அரசூர்க்கு போய் அந்த ரோட்டோர மரங்களை வெட்ட முடியாது போலிருக்கு ஸார்…”

சக்ரபாணியின் உடல் ஒரு அதிர்ச்சியான நிமிர்வுக்கு உட்பட்டது.

“ஏன்… என்ன பிரச்னை?”

“அவங்க எழு பேருக்கும் வாந்தி மயக்கம் சார்”

“எப்படி திடீர்னு?”

“ஏழுபேரும் குளிச்சு, சாப்பிட்டு ரெடியாகும்போது ஒவ்வொருத்தருக்கா வாந்தி… மயக்கம் ஏற்பட ஆரம்பிச்சது சார். டாக்டர் அருண் வந்து செக் பண்ணி பார்த்துட்டு ஃபுட் பாய்சனா இருக்கும்ணு சந்தேகிக்கிறார் சார்.”

“ஓ மை காட்… அவங்களை உடனடியா  ஜி.ஹெச்.க்கு அனுப்பி வையுங்க ஸ்டீபன். ஐ யாம் ஆன் தி வே” என்று செல்போனை அணைக்கவே,

“அஜய் காலிங்” என்று திரையில் மின்ன, காதுக்கு ஒத்தியவர் மெதுவாக குரல் கொடுத்தார்

“ஹலோ”…

“எல்லாம் பிளான்படி போயிட்டிருக்கா ஸ்டீபன்?”

“ஆமாம்”

“குட்… உன்னோட வேலையை சரியா செஞ்சுட்ட, பயப்படாத… நீ காலை உணவுல டீஃபீனைல்க்ளோரோசினை கலந்த விஷயம் யாருக்கும் தெரியாது. இனி எங்க ஆள் எல்லாத்தையும் பாத்துப்பான். சரி அவன்கிட்ட பொருளை ஒப்படைச்சிட்டியா?”

“ம்”

“அவனை நன்னடத்தை லிஸ்ட்ல…?

“சேர்த்துட்டேன். நான் பின்னே கூப்பிடறேன்.”

சரியாக பத்து நிமிடத்தில் சக்ரபாணி பைக்கில் வந்து இறங்கினார்.

வேகமாக இறங்கியவர் தன் அறையை நோக்கி நடந்தார். ஸ்டீபன் பின்தொடர்ந்தார். அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தவர் ஸ்டீபனை நோக்கி….

‘‘இப்போ என்ன பண்ணலாம்னு நினைக்கறீங்க?’’

“சார் இந்த வேலையை நல்லபடியா முடிச்சுக் கொடுக்கணும். அதனால நன்னடத்தை லிஸ்ட்ல மீதமிருக்கிற கைதிகள்ல மரம் ஏற தெரிஞ்ச அஞ்சாறு பேரை அனுப்பி கொடுத்தா…” என்று முடிப்பதற்குள்…

“சரி நம்பகமான ஒரு அஞ்சாறு பேரை சொல்லுங்க?”

“பிரபு, கண்ணன், சரவணன், குமார், ரவி,”

“அவங்களைப் பத்தி நமக்கு முழுசா தெரியாது. அதனால கூடுதல் பாதுகாப்புக்காக நீங்களும் போங்க ஸ்டீபன்.”

“ஓகே சார்.” என்றவர் காலில் பம்பரம் சுற்றியதுபோல் சுழன்று அரைமணி நேரத்தில் அசம்பிள் செய்தார் ஸ்டீபன்.

அனைவரும் வேனில் ஏறி புறப்படவே, வழியனுப்பி வைத்துவிட்டு அறையினுள் நுழைந்த சக்ரபாணியை அவரின் செல்போன் சிணுங்கி அழைக்கவே, எடுத்தவர் “ஹலோ திஸ் இஸ் சக்ரபாணி,”

“சார் ஐ யாம் காவ்யா, சீஃப் டாக்டர் இன் ஜி.ஹெச். நீங்க அட்மிட் பண்ண கைதிகள் ஏழுபேரோட பிளட் சாம்பிள் பரிசோதனை பண்ணப்போ டீஃபீனைல்க்ளோரோசின் என்னும் கெமிக்கல் கான்சன்ட்ரேஷன் கூடுதலா இருந்தது. ஐ திங் யாரோ பர்ப்போஸ்ஃபுல்லா கலந்திருக்காங்க.

அதிர்ச்சியடைந்தவர் ஸ்டீபனை தொடர்புகொண்டு எந்த ஹோட்டலில் காலை உணவு வாங்கினீர்கள் என்று வினவினார். இதை சற்றும் எதிர்பாராத ஸ்டீபன் லேசாக பதறினார். ஏன் என்னாச்சு சார் என்று கேட்டுக்கொண்டே ஓட்டலின் பெயரையும் கூறவே,

“ஒண்ணுமில்ல ஃபுட்ல தான் பிராப்ளம்… அதான் கேட்டேன்.”

சக்ரபாணி ஒரு சில போலீசாரின் உதவியோடு ஓட்டலை பரிசோதனை செய்யவே அங்கு டாக்டர் குறிப்பிட்ட கெமிக்கலின் பாட்டில் இருப்பதை கண்டு அதிர்ந்தார். விசாரணையில் ஸ்டீபன் கலக்க சொன்னதை அவர்கள் ஒப்புக்கொள்ளவே விரைந்து சென்று போலீசாரின் டீம் அரசூரில் வேலை செய்து கொண்டிருந்தவர்களையும் ஸ்டீபனையும் மடக்கிப்பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில்நன்னடத்தை “D” பிரிவில் புதிதாக சேர்க்கப்பட்ட ரவி அதற்கு தகுதியற்றவன் என்றும் சமூக விரோதிகள் சிலர் ஸ்டீபனை பகடைக்காயாக பயன்படுத்தி அந்த ஏழு பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்படும்படியாக செய்ததும் அவர்களின் மற்றொரு பிளான் படி பாம்ப் வேகத்தடையில் ஃபிக்ஸ் செய்து வெடிக்க வைப்பதாகவும் அதற்காக ஸ்டீபனின் உதவியை நாடியதும் கண்டு பிடிக்கப்பட்டது.

ரவியும் ஸ்டீபனும் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படவும் செய்தனர்.

மீதமுள்ளோர் அப்பணியை சிறப்பாக முடித்து பாராட்டுக்களையும் பெற்றனர்.

 ***************************************************************

கதை இங்கே ? முடிவு எங்கே ?

ராஜேஷ்குமாரின் கதை 3 - நாளை 20.01.2023 வெள்ளிக்கிழமை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com