குற்றம் புரிந்தவன்! கதை: ராஜேஷ்குமார், முடிவு: சாந்தினி, மதுரை

குற்றம் புரிந்தவன்! கதை: ராஜேஷ்குமார், முடிவு: சாந்தினி, மதுரை
ஓவியம்: தமிழ்
Published on

பூஜையறையில் விளக்கேற்றி விட்டு இரவுக்கு என்ன டிபன் செய்யலாமென்கிற யோசனையுடன், சமையலறைக்குள் நுழைந்த என்னை, டைனிங் டேபிளின் மையத்தில் இடம் பிடித்திருந்த செல்போன் தன் டயல்டோனை வெளியிட்டு அழைத்தது.

வேகமாய் போய் செல்போனை எடுத்தேன். மறுமுனையில் என்னுடைய கணவர் அழைத்துக் கொண்டிருந்தார். போனை காதுக்கு ஒற்றி ஒரு சிறிய சிரிப்போடு பேச ஆரம்பித்தேன்.

“இப்பத்தான் உங்களை நினைச்சேன்.அதுக்குள்ள உங்க போன். என்ன ஆபீஸிலிருந்து கிளம்பிட்டீங்களா..?”

“கிளம்பி இருபது நிமிஷமாச்சு ரமா. நான் இப்ப லாலி ரோடு சிக்னல்ல நின்னுட்டிருக்கேன். ஹெவி ட்ராஃபிக்.”

“அப்படீன்னா வீட்டுக்கு வந்து சேர எப்படியும் ஆறரை மணி ஆயிடும் போலிருக்கே?”

“கண்டிப்பா..”

“சரி… வர்றப்ப வடவள்ளி அண்ணாச்சி கடையில் ஒரு கிலோ கோதுமை மாவும், அரைக் கிலோ வெள்ளை ரவையும் வாங்கிட்டு வந்துடுங்க.”

“சரி… பழமுதிர்ல ஃப்ரூட்ஸ் ஏதாவது வேணுமா?”

“ஆறு பூவன் பழம்.”

“வேற ஏதாவது?”

“இப்ப எதுவும் ஞாபகத்துக்கு வரலை… நாளைக்குப் பார்த்துக்கலாம். நீங்க சீக்கிரமா வீடு வந்து சேருங்க.”

“சரி.” மறுமுனையில் என்னுடைய கணவர் தொடர்பு இணைப்பைத் துண்டித்துக் கொள்ள, நானும் செல்போனை மெளனமாக்கிவிட்டு கிச்சன் மேடையை நோக்கிப் போனேன். ஸ்டவ்வைப் பற்ற வைத்து பால் பாக்கெட்டை கட் செய்து, பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்துவிட்டு காஃபி பொடி டப்பாவைத் தேடிக் கொண்டிருந்தபோது, வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டது.”

“இந்நேரத்துக்கு யார்?”

மனசுக்குள் கேள்வி முளைத்தது.

“ஊருக்கு போயிருந்த எதிர் வீட்டு சாரதாம்பாள் சாவியை வாங்க வந்து இருப்பாங்களா?”

யோசனையோடு வேக நடைபோட்டுக் கொண்டு போய்க் கதவைத் திறந்தேன்.

வாசற்படியில் அந்த இளைஞன் நின்றிருந்தான். முப்பது வயது இருக்கலாம். வெளிர் நீல நிற சட்டையிலும், வெள்ளை பேண்டிலும் ‘பளிச்’சென்று இருந்தான். கையில் ஒரு தோல்பை மினுமினுப்பாய் தெரிந்தது.

நான் புருவங்களை உயர்த்தினேன்.

“யார் வேணும்?”

“புஷ்பராஜ் ஸார் இருக்காரா?”

“அவர் ஆபிஸிலிருந்து இப்பத்தான் புறப்பட்டு வந்துட்டிருக்கார்… நீங்க யாரு?”

“மேடம்… நானும் அவரும் காலேஜ் மேட்ஸ். என் பேரு காமேஷ். கடந்த அஞ்சு வருஷமா நாங்க ‘டச்’ல இல்லை. போன மாசம் அன்னபூர்ணா ஹோட்டல்ல ஏதேச்சையா பார்த்துகிட்டோம். அப்பத்தான் வீட்டு அட்ரஸ் கொடுத்தார்… என்னோட சிஸ்டர்க்கு வர்ற புதன் கிழமை கல்யாணம். அதான் அவரைப் பார்த்து இன்விடேஷன் கார்டு கொடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன். அவர் வர்றதுக்கு நேரமாகுமா மேடம்?”

“எப்படியும் அரைமணி நேரமாயிடும்.”

“என்னால அவ்வளவு நேரம் வெயிட் பண்ண முடியாது மேடம். இது திடீர்ன்னு முடிவான கல்யாணம். நிறைய பேர்க்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டியிருக்கு… புஷ்பராஜ் ஸார் வந்தா, இந்த பத்திரிக்கையை குடுத்துடுங்க மேடம். கல்யாணத்துக்கு நீங்களும் ஸாரும் அவசியம் வரணும்…”

காமேஷ் வாசலில் நின்றபடியே தோல்பையைப் பிரித்து பத்திரிக்கையொன்றை நீட்ட, நான் அவசரக் குரலோடு இடை மறித்தேன்.

“வாசல்ல நின்னுட்டு எதையும் கொடுக்கக் கூடாது. எதையும் வாங்கக் கூடாது. உள்ளே வாங்க.”

“தேங்க்யூ மேடம்.”

அவன் தயக்கத்தோடு உள்ளே வந்தான். நான் நாற்காலியைக் காட்டினேன்.

“உட்கார்ங்க… தண்ணி சாப்பிடறீங்களா?”

“கொடுங்க மேடம்…”

நான் சமையலறைக்குப் போய் நீர் நிரம்பிய டம்பளரோடு வந்து அவனுக்கு முன்பாய் இருந்த டீபாயின் மீது வைக்கும்போதுதான் கவனித்தேன்.

திறந்திருந்த வாசல் கதவு இப்போது உட்பக்கமாய் தாழ் போடப்பட்டு இருந்தது.

பதறிப் போனவளாய் நான், கதவை நோக்கிப் போக அவன் சிரித்தான்.

“கதவு சாத்தியே இருக்கட்டும் மேடம்.”

நான் வெகுண்டேன்.

“டே… டேய்ய் யார்ரா நீ..?”

“சத்தம் போடாதீங்க மேடம்.” சொன்னவன்,தன்னுடைய கைப்பையைப் பிரித்து அந்த அரையடி நீள கத்தியை எடுத்துக் கொண்டான்.

என்னுடைய சப்தநாடியும் அடங்கிப் போக, நான் அங்குலம் அங்குலமாய் பின்னுக்கு நகர்ந்து, பக்கவாட்டு சுவர்க்கு சாய்ந்து கொண்டேன். இருதயம் அசுர வேகத்தில் துடிக்க உடம்பிலிருந்த, எல்லா வியர்வைச் சுரப்பிகளும் உடைப்பெடுத்துக் கொண்டன.

அவன் ஒரு கபடப் புன்னகையோடு கத்தியை அசைத்துக் கொண்டே என்னைப் பார்த்தபடி நிதானமான குரலில் பேச ஆரம்பித்தான்.

“இதோ பாருங்க மேடம்… நீங்க ரொம்பவும் அழகாயிருக்கீங்க. ஆனா எனக்கு வேண்டியது உங்க உடம்பு இல்லை. நீங்க போட்டிருக்கிற நகைங்க. அடுத்த அஞ்சு நிமிஷத்துக்குள்ளே எல்லா நகைகளும், பீரோவில் இருக்கிற பணமும், என்னோட கைக்கு வரணும்… சத்தம் போட வாயைத் திறந்தா மூணுமாசம் முழுகாமே இருக்கிற உங்க அடி வயித்துக்குள்ளே இந்தக் கத்தி ஆழமாய் இறங்கிடும்.”

நான் பயத்தில் உறைந்து போய் என்னுடைய அடிவயிற்றில் கை வைத்துக் கொண்டேன்

' எல்லாம் தெரிந்து கொண்டுதான் வந்திருக்கிறான்.'

“வே… வே… வேண்டாம்… என்னை… ஒண்ணும் பண்ணிடாதே.”

“இந்தக் கத்திக்கு நான் வேலை கொடுக்கக்கூடாதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா நகைகளை கழட்டுங்க. கழுத்துல இருக்கிறது மட்டுமில்லை, காதுல மூக்குல இருக்கிறதும் என்னோட கைக்கு வரணும். ம்… சீக்கிரம்…”

நான் மிரண்டு போனவளாய் மின்னல் வேகத்தில் செயல்பட்டேன். கழுத்தில் இருந்த ஏழு பவுன் இரட்டை வடச் செயினையும், காதில் இருந்த வைரக் கம்மல்களையும், மூக்குத்தியையும் கழற்றி வலது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தேன்.

அவன் குரலில் கேலி வழிய சிரித்தான்.

“அதையெல்லாம் அப்படியே கொண்டு வந்து, இந்த டீபாய் மேல வையுங்க மேடம்.”

நான் உதறிக் கொள்கிற உடம்போடு மெல்ல நடந்து போய் நகைகளை டீபாயின் மேல் வைத்துவிட்டு நகர முயன்றேன்.

“நில்லுங்க மேடம்.”

நின்று என்ன என்பது போல் அவனைப் பார்த்தேன். கோணல் சிரிப்போடு அவன் சொன்னான்.

“ஒண்ணை கழட்ட மறந்துட்டீங்களே மேடம்… கழுத்துல இருக்கிற அதையும் எடுங்க”

நான் உலர்ந்து போன வாயோடு எச்சில் விழுங்கினேன். “அதைக் கழட்ட முடியாது… அ… அ… அது தாலிக் கொடி.”

“தெரியுது மேடம்… தாலிக் கொடி வெறும் மஞ்சள் கயிறாய் இருந்திருந்தா…. நானும் அதைக்கண்டுக்காமே இருந்திருப்பேன். ஆனா அது தங்கத்துல இருக்கே. ம்… கழட்டுங்க…”

நான் ‘மாட்டேன்’ என்பது போல தலையை அசைக்க ,அவன் கேலியான குரலில் “அட… கழட்டுங்க மேடம்… கழட்டின உடனேயே உங்க புருஷன் ஒண்ணும் அதே செக்கண்ட்ல செத்துட மாட்டார்…” என்று சொல்ல அதுவரைக்கும் என்னுடைய மனசுக்குள் இருந்த பயம் சட்டென்று விலகி, கோப அலை ஒன்று சுனாமியாய் புரண்டு எழுந்தது.

“என்னடா சொன்னே..?” வீறிட்டு கத்திய நான் விநாடிக்கும் குறைவான நேரத்தில், அந்த கனமான தேக்கு மர டீபாயை ஆவேசமாய் மூச்சைப் பிடித்து உயரத் தூக்கி அவனுடைய தலையில் வேகமாய் இறங்கினேன்.

‘த்த்தட்’ என்ற சத்தத்தோடு அவனுடைய முன் தலையில் அடி விழ, இரண்டு துளி ரத்தம் என் இடது புறங்கையின் மேல் சூடாய் விழுந்தது.

அவன் சின்ன அலறலைக் கூட வெளிப்படுத்தாமல் இரண்டாய் உடல் மடங்கி சரிந்து, பிறகு ஸ்லோமோஷனில் மல்லாந்தான். அரை நிமிட நேரம் உடல் துடித்து, பிறகு வந்த விநாடிகளில் சிறிது சிறிதாய் அடங்கி, பார்வை ஒரே பக்கமாய் நிலைத்து, விழிகள் திறந்த நிலையில் உறைந்து போயிற்று.

நான் பதறிப் போனவளாய் அவனருகே குனிந்து நாசியருகே நடுங்கும் விரல்களோடு என்னுடைய புறங்கையை வைத்தேன்.

சுவாசம் அறவேயில்லை.

வியர்த்து வழிந்து கொண்டு ஸ்தம்பித்துப்போய் நின்றேன்.

‘இப்படி மூர்க்கத்தனமாய் அடித்து இருக்கக்கூடாது.’ மூளையின் ஒரு பகுதி என்னைக் குற்றம் சாட்ட, இறந்தவனின் உடலருகே நிற்க பயந்து போனவளாய், வீட்டினின்றும் வெளிப்பட்டு கதவை வெளிப்பக்கமாய் தாழிட்டுக் கொண்டு வாசற்படியில் நைந்து போன துணியாய் தளர்ந்து உட்கார்ந்தேன்.

அதே விநாடி…..

 என்னுடைய இடுப்பின் மறைவில் இடம் பிடித்திருந்த செல்போன் டயல்டோனை வெளியிட்டது. படபடப்போடு எடுத்து அழைப்பது யாரென்று பார்த்தேன்.

என்னுடைய கணவர்.

செல்போனை காதுக்கு ஒற்றி பதட்டமாய் குரல் கொடுதேன்.

“எ… எ… என்னங்க… இப்ப எங்கே இருக்கீங்க?”

“வடவள்ளி அண்ணாச்சி மளிகைக் கடையில்.”

“அங்கே ஒண்ணையும் வாங்காமே உடனே புறப்பட்டு வீட்டுக்கு வாங்க.”

“என்ன ரமா… ஏன் இவ்வளவு டென்ஷனா பேசறே?”

“போன்ல எதையும் சொல்லிட்டிருக்க நேரமில்லை… உடனே புறப்பட்டு வாங்க…”

“ரமா! உன்னோட உடம்புக்கு ஏதாவது..?”

“எனக்கு ஒண்ணுமில்லீங்க… இது வேறு மாதிரியான ஒரு விஷயம்… இன்னும் அஞ்சு நிமிஷத்துல நீங்க இங்கே இருக்கணும்…” அவசர அவசரமாக பேசி முடித்த நான், செல்போனை அணைத்து விட்டு என் கணவரின் வருகைக்காக எகிறும் இருதயத் துடிப்போடு காத்திருக்க ஆரம்பித்தேன்.

நடந்தவை எல்லாம் மனதில் ஓடியது.  குழப்பமான முடிவுடன் போனை எடுத்தேன். பத்து நிமிடத்தில் என் கணவர் வர, நடந்தவற்றை  அழுகையுடன் சொல்லி முடித்து,

            "எக்ஸ்டென்ஷன்  ஏரியாவுல இப்படி தனியான வீடு வேண்டாம் என்று சொன்னேனே, கேட்டீங்களா.." என்று புலம்பிய கணம், பைக்கை நிறுத்தி விட்டு இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்தார்.

          "நான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர்..  உங்க வீட்டு பின்பக்க சுவரேறி வெளியே ஒருத்தன் குதிச்சு ஓடும்போது என் கிட்ட மாட்டிகிட்டான்.  அவன் திருடுன நகைகளையும் வாங்கிட்டேன்.  இப்போ போலீஸ் ஜீப்புல இருக்கான். "

            அவன் சாகலை...  மயக்கமாகித் தான் கிடந்திருக்கான்  என்று தெரிந்ததும், பெரிய பிரச்னையிலிருந்து விடுபட்ட நிம்மதி பரவியது. "கதவைத் திறங்க .. உள்ளே போய் பேசுவோம் .." என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, கதவைத் திறந்து உள்ளே போனோம்.  அங்கே அந்த காமேஷ் அசைவின்றி கிடைக்க, என் கணவர் அதிர்ச்சியுடன்  "அய்யோ.."  என்று கத்தினார்.

            இன்ஸ்பெக்டர் சோபாவில் அமர்ந்தபடி , " ம் .. சொல்லுங்க , மேடம் .." என்றார். இன்னும் அதிர்ச்சி விலகாமல் பிரமித்து  நின்ற என் கணவரைப் பார்த்தபடி "உங்க திட்டம் எப்படி எனக்குத் தெரிஞ்சதுனு பாக்கறீங்களா ..? " என்று கேட்டேன்.

              "திட்டமா ..?" என்று   கேட்டவரை அலட்சியப்படுத்திவிட்டு    இன்ஸ்பெக்டரிடம், " சார் ..  நானும் இவரும் ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி பெற்றோருக்குத் தெரியாமல்  காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.  யார் கண்ணிலும் படாமல்  ஒதுக்குபுறமாக  தனி வீட்டில் இருப்போம் என்று இவர் சொன்னதும் எனக்கு சரியென்று பட்டது.  இவர் நண்பன் என்று சொல்லிக்கொண்டு வந்தவன் 'மூணு மாத கர்ப்பமான உன் வயிற்றில் குத்தி விடுவேன்' என்றான். தற்காப்புக்காக அவனை அடித்து விட்டு வெளியே ஓடி வந்து கதவைப் பூட்டினேன்.

               பதட்டம் நீங்கி யோசித்த போது, நான் மூணு மாதம் கர்ப்பம்  என்பது இவரைத் தவிர யாருக்கும் தெரியாது.  இன்னும் டாக்டரிடம் கூடப் போகவில்லை.  இந்த திருட்டு இவருடைய பிளானாக இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டது.  லைஃப்  லைன் 181 ல் உங்களை அழைத்து, நீங்கள் சொன்னபடி கேட்க, காமேஷ் சாகவில்லை, பிடிபட்டு விட்டான் என்றதும் பயம், ஆனால் உள்ளே அவன் மயங்கிக் கிடப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியானது எல்லாம் பார்த்ததும் என் சந்தேகம் சரியாகி விட்டது.  நான் ஏமாற்றப்பட்டது புரிந்தது .."  என்று சொல்லி முடித்ததும், அழுகை பொங்கியது.

           "இப்போது உங்களைப் போல  நிறைய பெண்கள் ஊடகம் மூலமாக எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள்.  பெண்களுக்கான ஹெல்ப் லைன் 181 ஐ அழைத்த உங்கள் விழிப்புணர்வை பாராட்டுகிறேன்.  காவல்துறையின் உடனடி சேவை உங்களுக்கு கிடைக்கும்.  மயங்கிக் கிடக்கும் இவனையும், உங்கள் கணவரையும் நாங்கள் விசாரிக்கிறோம்.. உங்கள் வருங்காலத்துக்கும், பாதுகாப்புக்கும் வேண்டிய உதவி செய்கிறோம்" என இன்ஸ்பெக்டர் கூற, எல்லாவற்றுக்குமாக உடைந்து அழுதேன். 

***************************************************************

கதை இங்கே ? முடிவு எங்கே ?

ராஜேஷ்குமாரின் கதை 6 - நாளை 10.02.2023 வெள்ளிக்கிழமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com