
பூமியில் நாம் எதற்காக பிறந்தோம் என்பதை சிலர் இளமைப்பருவத்திலும் சிலர் நடுத்தர வயதிலும் சிலர் முதுமையிலும் உணர்ந்து கொள்வார்கள். இதை உணராமல் வாழ்க்கை முடிந்து போய் விடுவார்கள் சிலர். வாழும் காலங்களில் சில நியதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மதமும் வலியுறுத்துகிறது. இஸ்லாத்தில் அப்படி கடைபிடிக்க வேண்டிய
சிலவற்றை பற்றி குர்ஆனில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. கலிமா (இறைவனை நம்புவது), தொழுகை, ஸகாத் (ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல்) ஹஜ் (புனிதப்பயணம் மேற்கொள்ளுதல்) மற்றும் ரமலான் நோன்பு இருத்தல். இவை ஐந்தும் மிக மிக முக்கியமானவை.
ரமலான் நோன்பு இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில் தொடங்கு கிறது. புனிதமான இம்மாதத்தில் தான் குர்ஆன் அருளப்பட்டது. காலை சூரிய உதயம் தொடங்கி மாலை மறையும் வரையில் உண்ணாமல் நீர் அருந்தாமல் நோன்பு இருக்க வேண்டும். இந்த 'நோன்பு' பற்றி கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள்
அருளின் தேவதை
ஆண்டுக்கொருமுறை
கால வீதியில் காலெடுத்து
வைக்கின்றாள் - சாந்தியின் தூதாக
அவள் தான் ரமழான்...
பிறை சுடர் கொண்டு
அக அகல்களில் எல்லாம்
ஆன்மீக வெளிச்சம்
ஏற்றி வைக்கின்றாள்...
எதுமே தேவையற்ற இறைவன்
நோன்பை மட்டும்
தனக்கென்று கேட்கின்றான்
தருவதற்கு கொடுத்து
வைக்க வேண்டாமா...?
இவ்வாறு சிறப்பித்துப் பாடியுள்ளார்.
நாம் உண்ணும் உணவு விடும் மூச்சின் அளவு நம் ஆயுளைத் தீர்மானிக்கும். ஒரு வேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி, மூவேளை உண்பான் ரோகி... என்று நீதி வெண்பாவில் கூறப்பட்டுள்ளது. சுமார் 50 சதவீதம் பேர் ரோகியாக இருப்போம். முக்கியமான பண்டிகைகள் வரும் நாட்களில் ஒரு போது விரதம் இருப்பவர் பலர். ரம்ஜானும் அதேப் போலத்தான். நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களில் உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கிறது. தேவையில்லாத உணவுகள் தவிர்க்கப்படுவதால் உடல் வளமாகிறது. உடல் வளமாவதால் உள்ளம் வளமாகிறது, நோன்பு இருக்கும் ஒவ்வொரு வீடும் வளமாகிறது. ஒவ்வொரு வீடும் வளமானால் நாடு வளமாகும். அதுதான் நமக்குத் தேவை.