ரத்தன் டாடா - ஒருவருக்குள்ளே இத்தனை நற்குணங்கள் இருக்க இயலுமா?

Ratan Tata
Ratan Tata
Published on

“மக்கள் உங்கள் மீது எறியும் கற்களை எடுத்து அவற்றை ஓர் கோட்டையைக் கட்ட பயன்படுத்துங்கள்”

எளிமை - மனிதம் - பிராணிகளின் மீது அளவற்ற அன்பு - தாய்நாட்டு பக்தி - சங்க காதல் - சாதனை நாயகன் - உலகின் உத்வேகம் - நம்பிக்கையின் அடித்தளம்-  உழைப்பின் உச்சம் - வணிக நீதி - மக்கள் நாயகன்-  வாழ்க்கை அகராதி - வெற்றிச் சிகரம் - உலகின் சக்தி வாய்ந்த மனிதர்… இப்படி பல உதாரணங்களுடன் டாட்டா ஐயா வாழ்க்கையை சிந்திக்கலாம் சிலாகிக்கலாம். ஒருவருக்குள்ளே இவ்வளவு நற்குணங்கள் இருக்க இயலுமா?! கடந்த சில நாட்களாக அவரைப் பற்றிய செய்திகளை படிக்கும் போதும் பார்க்கும் பொழுதும், மனதினுள் எழும் பிரமிப்பையும் மீறி மனம் ஏதோ ஒர் வெற்றிடத்தை உணர்கிறது என்பதே உண்மை. 

டாடா ஐயா அவர்களின் காதல் எனக்கு முன் பேருருவமாய் நிற்கிறது. அவர் வாழ்ந்த சூழ்நிலைக்கும் அவரிடம் இருந்த வசதிக்கும் அவர் நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம். ஆனாலும் தனது கல்லூரி காலத்தில் தான் விரும்பிய பெண்ணையே மனதில் நினைத்தபடி வாழ்நாள் முழுவதும் அந்த ஒற்றைக் காதலுக்கு உயிர் கொடுத்த அந்த மாமனிதரை இரு கரம் கொண்டு வணங்கச் செய்கிறது.

நல்லுரை யிகந்து புல்லுரைத் தாஅய்ப் 

பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல 

உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி 

அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும் 

பெரிதா லம்மநின் பூச லுயிர்கோட்டு 

மகவுடை மந்தி போல 

அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.

(குறுந்தொகை -29)

இதையும் படியுங்கள்:
ரத்தன் டாட்டா - மெ(மே)ன்மையான மனம் கொண்ட மாமனிதர்!
Ratan Tata

சங்ககால தலைவன் தன் நெஞ்சோடு பேசுவதாய் இச்செயுள் அமைந்துள்ளது. “நெஞ்சே அவளிடம் நல்லுரையை எதிர்பார்த்துச் சென்றாய். அவளோ நல்லுரையை தள்ளிவிட்டு புல்லுரையை எறிந்தாள். சுடப்படாத பச்சை மண்ணால் செய்து வைத்திருக்கும் மண்கலம் நிறைய மழை பெய்தால் மண்கலம் என்ன ஆகும். அதுபோல நெஞ்சே நீ ஆகி இருக்கிறாய். அதற்கு காரணம் பெற முடியாத ஒன்றின் மேல் நீ ஆசையை வைக்கிறாய். அதனால் என்னுடன் பூசல் செய்கிறாய். என்ன பயன்? நெடிய மரத்தின் கிளையில் மந்தி தன் மகவை தன் வயிற்றில் தழுவிக் கொள்வது போல உன் சொற்களைக் கேட்போர் இல்லையே!...

எனும் படியாக நம் தமிழ் மூதாட்டி பாடிய சங்க கால பாடலே எனக்குள் தோன்றுகிறது. இந்திய சீனப் போர் ஓர் உண்மை காதலை பலி கொண்டு விட்டது. ஆனாலும் அந்தக் காதல் ரத்தன் டாடா அவர்களின் இதயத்தில் உயிரோட்டமாய் இன்று வரை வாழ்ந்திருந்ததே …

அதன் பின்னான அவர் வாழ்வில்…….. உலகம் 

புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன் 

வல்லாரை வழிபட்டு ஒன்றறிந்தான் போல் 

நல்லாரை கண் தோன்றும் அடக்கமும் உடையன் 

இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க

வல்லான் போல்வதோர் வன்மையும் உடையவன்

(குறிஞ்சிக் கலி)

இதையும் படியுங்கள்:
Ratan Tata Quotes: ரத்தன் டாடாவின் 12 தலைசிறந்த மேற்கோள்கள்! 
Ratan Tata

பணிவுடமையும் அடக்கமும் பிறர் துயர் போக்கும் வன்மையும் தலைவன் பண்பாக அமைந்துள்ள இவ்வடிகளை வாசிக்கும் தருணம் ரத்தன் டாடாவின் முகம்தான் என்னுள் நிழலாடுகிறது. இப்படித் தன் மனதை வேலையின் கண்ணும் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் மேலும் செலுத்தி மனிதத்தின் மற்றோர் உருவமாய் வாழ்ந்து சென்ற அந்த மனிதரின் தாள் பணிய ஏங்குகிறது மனது…

இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் 

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் …

உலகமே உரக்க சொல்கிறதே…

இருந்தாலும் கடைசியாய் ஒரு சொல்…

நனிபே தையே நயன்இல் கூற்றம் 

விரகு இன்மையின் வித்துஅட்டு உண்டனை

விதைத்து பயிர் செய்து தானும் உண்டு பிறருக்கு உணவளிப்பதற்கு உரிய விதை நெல்லை அறிவுள்ள எந்த உழவனாவது சமைத்து உண்பானா? எமனே உனக்கு அன்பும் அறிவும்  இல்லாததால் அவ்வாறு செய்துவிட்டாய். மிகப்பெரிய முட்டாள் நீ. இனி உணவுக்கு எங்கு போவாய்…

ஆடுதுறை மாசாத்தனார் எனும் புலவரின் கையறு நிலையே இன்று எமது நிலையும்…

நயன்இல் கூற்றமே…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com