

ஆடிப்பாடி, ஆனந்தக்கூத்தாடி
உற்சாக உவகையுடனே...
ஊரெங்கும் விழாவெடுத்து
ஒவ்வொரு இந்தியனும்
உதிரத்தில் மகிழ்ச்சி பொங்க!
ஆர்ப்பரித்துக் கொண்டாடும்
அற்புதமான நாள்இது!
தீபாவளி பொங்கல்
திகட்டாத கிறிஸ்துமஸ்
ரம்ஜான் பக்ரீத்
நயமான பலநாட்கள்
அத்தனையும் சேர்ந்ததிந்த
ஆச்சரிய ஒரு நாளே!
உலகெங்கும் வியாபித்திருக்கும்
ஒவ்வொரு இந்தியக்குடிமகனும்
கொண்டாடி மகிழவேண்டிய
குறைவற்ற பெருநாள்இது!
இந்தியா மட்டுமின்றி
எல்லா நாடுகளிலும்
குடியரசு தினக்குரல்
கொண்டாட்டக் குரலாக
ஓங்கி ஒலிக்கவேண்டும்!
உலகமதை ரசிக்க வேண்டும்!
எழுபத்தாறு ஆண்டுகளை
இனிதாய்க் கடந்தாலும்
கோட்பாடுகள் வகுத்த
குறையில்லாத் தலைவர்களை…
இன்னுயிரையும் ஈந்து
இதற்கென உழைத்தவர்களை…
வாழ்வையே இழந்து
வரலாற்றில் வாழ்பவர்களை…
இந்த நன்னாளில்
இதயங்களில் நாம் ஏற்போம்!
அவர்கள் தியாகங்களால்
ஆனந்தமாய் நாமின்று
சுதந்திர நற்காற்றைச்
சுவாசித்து மகிழ்கின்றோம்!
நம்மை நாமேயாளும்
நனிசிறந்த அமைப்பினையே
ஏற்று வாழ்கின்றோம்
எல்லோரும் சிறப்புடனே!
ஒவ்வொரு குடியரசுதினத்தன்றும்
தலைநகர் டெல்லியிலும்
மாநிலத் தலைமையிடங்களிலும்
எடுக்கும் விழாவனைத்தும்
இன்பத்தின் வெளிப்பாடே!
வேற்றுமையில் ஒற்றுமையாய்
விளங்கும் நம்பண்பாட்டினை
உலகுக்கு அறிவிக்கும்
உண்மையான பெருநாளே!
பாரம்பரியத்தை பக்தியை
பவித்திர தியாகத்தை
எதற்குமஞ்சா தீரத்தை
எப்போதும் வளர்ந்துவரும்
விஞ்ஞான ராணுவத்தை
வியத்தகு இவ்வுலகம்
கண்டு் இன்புற்றிடவே
காட்சிப் படுத்தலே
இந்நாளின் பெரும்பெருமை
எந்நாளும் தனித்திறமை!
"வந்தேமாதரம்" என்று
வாய்மணக்கச் சொல்லியோர்கள்
வாழ்விழந்த பல கதைகள்
வகைவகையாய் இங்குண்டு!
ஆனாலும் அவர்கள்பலர்
அதுபற்றிக் கவலையின்றி
நாடொன்றே நாடியென்று
நாட்டுக்காய் வாழ்ந்தார்கள்!
நூற்றைம்பது ஆண்டுகளைக்
கடந்துவிட்ட அச்சரிதம்
இவ்வருட விழாவினிலே
இடம்பிடித்து மகிழ்கிறது!
பண்பாட்டில் பாரம்பரியத்தில்
அமைதியில் அன்பில்
அளவில்லா சமாதானத்தில்
உயர்ந்த நம்நாடு
ஒசந்திடிச்சி ஜனத்தொகையில்!
உலகின் நம்பர் ஒன்னாக
ஓடுகிறோம் மூச்சுமுட்ட!
அதனையும் கொண்டாட
அடுத்தடுத்த குடியரசுதினங்கள்
வரிசைகட்டி வந்திடுமே!
வாலிபர்கள் மனதுவைத்தால்
அதுவும் எளிதாகும்!
ஐந்தாறு ஆண்டுகளில்
நம்பர்ஒன் இடத்தை
நாமும் அடைந்திடலாம்!
அதன்பிறகு அன்பினையே
அகிலத்தில் நிலைநாட்டிடலாம்!
எதிர்பார்ப்பு மிகக்கொண்டே
இந்தத் திருநாளை
திருவிழா ஆக்கிடுவோம்!
வந்திருக்கும் விருந்தினர்களுக்கு
வாழ்த்துசொல்லி மகிழ்ந்திடுவோம்!
"வந்தேமாதரம்"என்றே
வாய்மணக்க முழங்கிடுவோம்!
இன்றைய தினத்தை
இனிய திருவிழாவாக்கி
கொண்டாடி மகிழ்வோம்
குதூகலம் மிகக் கொண்டே!