
ஒரு நிகழ்வு, திரைப்படங்கள், புத்தகங்கள் என்று எதைப்பற்றியும், பார்வையும் விமர்சனங்களும் எப்போதும் எல்லோராலும் சொல்லப்படுகிறது. அந்த விமர்சனங்கள் தரமானதாக, நேர்மையானதாக உள்நோக்கம் அல்லது சார்பற்று விசய ஞானத்துடன் முழுமையாகச் செய்யப்படுகிறதா?
எந்த ஒரு விஷயமென்றாலும் அதற்குக் குறைந்தது மூன்று வித பார்வை இருக்கும். பிடித்தது அல்லது ஏற்றுக்கொள்வது, பிடிக்காதது அல்லது நிராகரிப்பது, கருத்தற்றோ அல்லது கண்டும் காணாமல் இருப்பது. நிகழ்வுகள் விமர்சிக்கப்படுவதைப் போல விமர்சனமும் விமர்சிக்கப்படவேண்டும்!
வீசுவதற்குக் கற்கள் பெருகிப் போனதால், கல்லடிப்பது பெருமையாகப் பார்க்கப்படுவதால், அதனை வீசும் செயலும் பெருகிவிட்டது. வினைகள், எதிர்வினைகள் தொடர் விமர்சனங்கள் என்று சர்ச்சையாகி குடுமிப்பிடி குழாயடி சண்டையாக மாறும் நிலைகளைக் காணமுடிகிறது.
சமீபத்திய நிகழ்வுகள் பற்றி அரசியல் நிலைப்பாடுகள் பற்றி, கூட்டணிகள் பற்றி, வெளிவந்த திரைப்படங்கள் பற்றி, கிரிக்கெட் வெற்றியினை கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடந்த சோகத்தைப் பற்றி, இந்தியப் பாகிஸ்தான் சண்டையைப்பற்றி, விமான விபத்தைப் பற்றி என்று எதைப் பற்றியும் எப்படியும் பேசப் பலர் கிளம்பி வருகின்றனர்.
முழுமையாகப் பேசும் பொருள் பற்றிய உண்மைகளைத் திரட்டி பேசவோ, குறைந்தபட்ச நேர்மையோ இல்லாமல் எல்லோரும் நிபுணர்கள் ஆகிவிடுகிறார்கள். தனக்குத் தோன்றியதை எல்லாம் உளறிக் கொட்டுகிறார்கள். அவர்களது அழுத்தமான உணர்ச்சிகரமான வார்த்தை விளையாட்டால் சமூகமும் நின்று கேட்கிறது, அவர்களை அறிஞர்கள் என்று கொண்டாடுகிறது!. வளர்த்துவரும் புதிய சமூக ஊடகங்களும் தன்னை நிலைநிறுத்த, வெளிச்சம் பெற இவற்றைத் தீனியாக ஆக்கிக்கொண்டுள்ளனர்.
அரசியல் பற்றிப் பேசும்போது பேசுபவர் அனைவரும் அதில் நீண்ட அனுபவமும் வரலாறும் தெரிந்தவர்கள் போல பேசுகிறார்கள். காதில் கேட்டதையும் எங்கேயோ படித்ததை வைத்தும் உண்மையையறியாமல் உணர்ச்சிவசப்பட்டு வாதிடுகிறார்கள். அடுத்தவர் சொல்வதைக் கேட்கும் நிதானமும், பக்குவமும் கூட இல்லாதவர்களாய் வெளிப்படுகிறார்கள்.
ஜனநாயகம் பற்றிப் பேசும்போது கூட வெளிப்படை தன்மையற்றும், நேர்மையற்றும், எதிர் வாதத்தை உள்வாங்காமல் பேசுவதும் எந்த விதத்தில் நியாயம். எடுத்துக்கொண்ட பிரச்சனைக்குத் தீர்வை நோக்கி அனுசரிப்புடன் எடுத்துச் செல்வது தானே ஜனநாயக வழிமுறை.
அறிவியல் பற்றி பேசும்போது பரந்த கோட்பாடுகளை நிலைநிறுத்தலும் ஐயம் திரிபட விளக்கி வாதமாக இல்லாமல் முழுமையான பூரணமான நிலைப்பு தன்மையும் ஏற்படுத்துவது தானே அறிவியல் மனப்பான்மை. இலக்கியம் பற்றி பேசினால் பரந்த வாசிப்பும் ரசனையும் சார்பு தன்மை இல்லாமல் ஒப்புநோக்கும் உயரிய சிந்தனையும் தானே வாதத்தில் இடம் பெற வேண்டும்.
இது எதுவும் இல்லாமல் வெற்று வாதம் உணர்சிகள், கவர்ச்சியான சொல்லாடல் சார்பு தன்மைகொண்ட பேச்சு, அடையும்/ அடைந்த நன்மைகளுக்காக பேசுவது எந்த சமுகத்தையும் பின்னோக்கியே தள்ளும். பேசி பேசி வளர்ந்த சமூகம் தான் நமது சமூகம் என்று சொன்னாலும், அந்த பேச்சுக்கள் சிந்தனை வயப்பட்டதாக, நேர்மையாக இருந்தால் தானே சமூகம் வளரும்.
ஒருவருக்கு பாடுவதற்கு விருப்பம் இருந்தால் அதனை கற்றாலும் பயிற்சியும் குரல் வளமும் அவசியமன்றோ? இது எதுவும் இல்லமால் விருப்பம் சார்ந்து கத்துவதெல்லாம் பாட்டாகுமா? பேச வருபவருக்கு இந்த வித எந்த கட்டுபாடும் நெறிமுறைகளும் அவசியமற்று போய் விட்டது. அவ்வளவு சுலபமானதா அல்லது இலக்காரமானதா பேச்சுக்கலை.
ஒன்றை பற்றி பேசும்போது கோட்பாடுகளால், ஞானத்தால், தெளிவான வாதத்தால் சிறந்த சொல்லாடலால் நேர்த்தியான உணர்ச்சி பாவத்தால், கேட்போரை கட்டுக்குள் வைத்து உரையாற்ற வேண்டாமா? அந்த பேச்சை கேட்ட பிறகு ஒரு துளியேனும் பேசும் பொருள் பற்றிய அறிவை கடத்த வேண்டாமா? அது கேட்போரின் சிந்தைனையை தூண்டி யோசிக்க மேலும் பேசிய பொருள் பற்றி அறிய ஆவலை தூண்டும்படி அமைவதே சிறந்த பேச்சு. இத்தகைய நேர்மையும், போக்கும் தொலைந்து வெகு காலம் ஆகிவிட்டது.
உணர்ச்சி பொங்க பேசுவதும், தரம் தாழ்த்தி வசை பாடுவதும், குற்றம் சாற்றி குரல் உயர்த்துவதும் தான் நல்ல பேச்சு என்று ஆகிவிட்டது. நடத்துபவரும், பேசுபவரும் இந்த போக்கை தவிர்த்து, தரத்தை நிலைநிறுத்த வேண்டும். கேட்பவர்கள் தரத்தின் அடிப்படையில் அந்த நிகழ்வை மதிப்பிட ஆதரவு தர வேண்டும். வெற்று பேச்சை நிராகரித்து விட்டால் அவை தொடரமால் போகும். தரத்தை ஆதரித்தால், அவை தழைத்து வளரும். பொறுப்பை உணர்ந்து செயல்படுவோமா? முன்தோன்றிய மூத்த மொழியை முன்னேற்றி பயணிப்போம்!.