விவேகானந்தரின் அறச்சீற்றம்!

swami vivekananda
swami vivekananda
முனைவர் என். பத்ரி

சுமார் நாற்பது எட்டு ஆண்டுகள் கல்விப் பணியாற்றியுள்ள டாக்டர்.என்.பத்ரி (1956) தனது பி.எச்.டி. படிப்பை கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முடித்தவர். NCERT விருதையும் பெற்றவர்.அகில இந்திய வானொலியின் கல்வி ஒலிபரப்புக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்களின் தொலைதூரக்கல்வியின் படிப்புகளுக்கு கருத்தாளாராக பணியாற்றியுள்ளார். பல முன்னோடி தமிழ் இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் சிறுகதைகளும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு தற்கால இளஞர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

சீற்றம் தவிர்க்கப்படவேண்டியது. ஆனால், சமூக அறச்சீற்றம் நாம் அனைவரும் கொள்ள வேண்டியது ஆகும். சீற்றம் தனிமனிதனுக்கானது. அறச்சீற்றம் சமூகத்திற்கானது. தனிமனிதச் சீற்றம் தன்னையும் மற்றவர்களையும் அழிக்கும். பொதுநலத்தில் விளையும் அறச்சீற்றம் சமூகத்தை வாழவைக்கும். சீற்றத்தைத் தணிக்கச்சொன்ன சான்றோர் அனைவரும் அறச்சீற்றம் கொண்டோர் ஆவர்.

'காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்’ என்று வெகுளியை வெறுக்கச் சொன்ன வள்ளுவர் ‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ என்று அறச்சீற்றம் கொள்கிறார்.

இந்திய ஆன்மீக மறுமலர்ச்சியின் முன்னோடியாக விளங்கியர் சுவாமி விவேகானந்தர். இவர் ஓர் துறவி என்றாலும் சமூக அநீதிகளைப் பார்த்து மௌனமாக இருந்தவர் அல்ல. அவர் கொண்டிருந்த கோபம் தனிப்பட்ட வெறுப்பிலிருந்து அல்ல; அது ஓர் அறச்சீற்றமாகும். அது சமூக அநீதிகளுக்கு எதிரான நீதியுணர்வால் எழுந்த சீற்றமாகும்.

விவேகானந்தர் வாழ்ந்த காலகட்டத்தில் இந்திய சமூகம் மூடநம்பிக்கைகள், சாதியப் பாகுபாடு, பெண்களுக்கான அவமதிப்பு, ஏழ்மை போன்ற பல்வேறு சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலைகளைக் கண்டு அவர் உள்ளம் கொதித்தது. ஆனால், அந்தக் கொதிப்பு சமூகத்தில் எந்த அழிவையும் ஏற்படுத்தவில்லை; மாறாக, அவரது அறச்சீற்றம் சமூகத்தை சீர்திருத்தும் சக்தியாக மாறியது.

சாதிய அநீதிக்கு எதிரான அவரின் அறச்சீற்றம் சமூகத்தில் இருந்த சாதி வேறுபாடுகள் மனிதனை மனிதனாக மதிக்காத நிலையை உருவாக்கியிருந்ததை நன்கு உணர்ந்திருந்தார். எனவே, அதனை அவர் கடுமையாக விமர்சித்தார். “மனிதனில் கடவுளை காணுங்கள்” என்ற அவரது போதனை, அனைத்து மனிதர்களும் சமம் என்ற உயரிய அறநெறியை வலியுறுத்தியது. தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்திய சமூக அமைப்புகள் மீது அவர் காட்டிய சீற்றம், தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்தும் பணியாகவே வெளிப்பட்டது.

இதையும் படியுங்கள்:
எந்த திசையில் விளக்கேற்றினால் பலன் கிடைக்கும்? - குத்து விளக்கின் ஆன்மீக ரகசியங்கள்!
swami vivekananda

வறுமை மற்றும் பசியைக் கண்டு எழுந்த அவரின் அறச்சீற்றம்

“பசியால் வாடும் ஒருவனுக்கு தத்துவம் பேசுவது பாவம்” என்ற அவரது வார்த்தைகள், ஏழ்மை குறித்து அவர் கொண்டிருந்த ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் வண்ணம் இருந்தன. கோயில்களில் கடவுளைத் தேடுவதற்குப் பதிலாக, பசியால் வாடும் மனிதர்களில் கடவுளை காண வேண்டும் என்ற அவரது கருத்து, சமூக சேவையை ஆன்மிகத்தின் மையமாக மாற்றியது.

பெண்களின் நிலையைக் கண்டு அவருக்கு ஏற்பட்ட அறச்சீற்றம்

பெண்கள் கல்வியின்றி, உரிமையின்றி வாழ்ந்ததை விவேகானந்தர் சகிக்கவில்லை. பெண்கள் உயர்ந்தாலே நாடு உயரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன், அவர்களின் அடிமைத்தனத்திற்கு எதிராக அவர் அறச்சீற்றம் கொண்டார். அந்த சீற்றம் பெண்கள் கல்வி, சுயமரியாதை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

விவேகானந்தரின் அறச்சீற்றம் வெறுப்போடு கலந்த கோபமல்ல. அது கருணையுடன் கூடியது; சமூக மாற்றத்தை நோக்கியது. அவர் சீற்றம் கொண்ட இடங்களில் கூட மனிதநேயமும் தேசப்பற்றும் தெளிவாகத் தெரிந்தது. அதனால் தான் அவரது வார்த்தைகள் தீப்பொறிபோல் இளைஞர்களின் உள்ளத்தில் விழுந்தன.

விவேகானந்தரின் அறச்சீற்றம் அழிக்கும் கோபம் அல்ல; அது சமூகத்தைத் தூண்டும் சக்தி. அநீதியை எதிர்க்கும் துணிச்சலும், மனிதனை உயர்த்தும் கணிவும் ஒன்றிணைந்த வடிவமே அவரது அறச்சீற்றம். இன்றைய காலத்திலும் சமூக அநீதிகளுக்கு எதிராக போராட வேண்டிய ஒவ்வொருவருக்கும், விவேகானந்தரின் அறச்சீற்றம் ஒரு ஒளிவிளக்காக விளங்குகிறது.

logo
Kalki Online
kalkionline.com