என்னது? சம்பளமும் Salaryயும் உப்பிலிருந்து வந்ததா?

சம்பளமும் Salaryயும்...
சம்பளமும் Salaryயும்...

ற்காலத்தில் சம்பளம் என்றால் நமக்கு காகிதத்தால் செய்த பணம்தான் கண் முன்னே தெரியும். இன்றைய தலைமுறையின் சம்பளங்கள் வங்கிக்கு  நேரடியாகச் சென்று விடுகிறது.  போன தலைமுறையின் சம்பளம்  கரன்சி நோட்டுகளாக நேரடியாக வழங்கப்பட்டது.

ஆனால், பணம் தோன்றாத அந்த காலத்தில் வேலையாட்களுக்கு சம்பளம் என்பது நெல்லும், உப்பும்தான். பணம், நாணயங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்படாத - பண்டமாற்றுப் பொருளாதாரம் நிகழ்ந்த அக்காலத்தில் உழைப்புக்கு ஈடாக அங்கங்கு விளைந்த தானியங்களும், உப்பும் அரிசியுமே பிரதானமாக வழங்கப்பட்டது.

பண்டமாற்று முறை வியாபாரத்திலும் உப்புதான் முதன்மைப்பொருளாக விளங்கியது. இதனடிப்படையில் சம்பா நெல்லையும் , அளத்தையும் (அளம் என்றால் உப்பு) சேர்த்து உருவான சொல் சம்பளம் என்றானது.
சம்பா + அளம் = சம்பளம்.

கூலங்களில் முதன்மையான நெல்லைக் குறிக்கும் 'சம்பு' என்னும் பண்டைய பெயரே இன்று சம்பா என வழங்கப்படுகிறது.

சம்பு = நெல், சிறந்த கூலவகையான சம்பா நெல்.
அளம் = உப்பு.
அளம் > உப்பளம். உப்புவிளைத்துச்
சேர்க்குமிடம் அளம் எனப்படும்.
அளவர் = உப்பு விளைவிப்பவர்.

அளம் - என்பது உப்பைக் குறித்து உருவாகி , பிற்காலத்தில் உப்பு எடுக்கும் இடத்தையும் குறித்தது. கோவளம், பேரளம் போன்ற ஊர்களின் பெயர்கள் அங்கு அமைந்த உப்பளத்தால் உண்டான பெயர்கள் ஆகும்).

அடுத்து, கூலம் தந்த சொல் கூலி! கூலம் - என்றால் தானியங்கள். (தானியம் என்பது வடசொல்). தானியங்களும் சில இடங்களில் மாற்றாக வழங்கப்பட்டதால் உருவான வழக்கே கூலி.

இவ்வாறு பிழைப்புக்காக கூலிக்கும், சம்பளத்திற்கும் அண்டியிருந்தவர்களை ஒட்டி பிறந்த வழக்குகள்தாம்....
'உப்பைத் தின்னு வளர்ந்தவர்', 'உப்புக்கு உழைத்தவர்' போன்றவை. உப்பிட்டவரை உள்ளளவும் நினை - எனும் பழமொழியையும் நோக்குக.

முதலாளி வழங்கிய உப்பைத் தின்னு வாழ்வதால் அவருக்கு மிகுந்த கடமையுணர்வு ( விசுவாசம்), நன்றியுடன் - இருக்க வேண்டும் என்பதை இங்கு உணர்த்துகிறது.

மேலும், வயலில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கூலியாக - நெல், வரகு, சாமை போன்ற கூலங்களை படியளந்து வழங்கியதன் அடிப்படையில் உருவானதுதான் 'படியளத்தல்’ என்ற சொல். தனக்கு வேலை வழங்கிய முதலாளியை படியளந்தவர் என்று சொல்வர்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக் கனியைப் பறிக்க இந்த மூன்றும் போதுமே!
சம்பளமும் Salaryயும்...

நம் நாட்டில் தமிழர்கள் சம்பளமாக உப்பை வழங்கியது போலவே, ரோமானியர்களும் உப்பை (Salt) சம்பளமாகக் கொடுத்ததன் அடிப்படையில் - இலத்தீன் மொழியில் இதை சலேரியம் என்று அழைத்தனர். சலேரியம் என்ற சொல்லிலிருந்து பிறந்ததே ஆங்கிலச் சொல்லான... சாலரி(Salary).

Salt > Salarium > SALARY.

சாளரியம் பின்னர் சாளரி ஆனது.

இப்படி, தமிழ்ச்சொல்லான சம்பளம் தந்ததும் உப்புதான்! ஆங்கிலத்தில் SALARY தந்ததும் உப்புதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com