காடுகளில் காட்டுவிலங்குகளைப்போல் அலைந்துகொண்டு இருந்தவனை, மனிதனாக ஆக்கி, அவனுடைய குணத்திலும் மனதிலும் காணப்படும் ஓட்டைகளை நிரப்பி, தன்னையே எண்ணிக் கொண்டிருக்காமல் உடன்வாழ்பவர்களைப் பற்றியும் எண்ணிப் பார்க்கச் செய்து அவனைப் பக்குவப்படுத்தி, அன்பால் பூக்கச் செய்து, முழுமைப்படுத்தித் தெய்வநிலைக்கு ஏற்றுவது எதுவோ அது சமயம்.
சமயம்: மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான கோட்பாடுகளை நம் கைபிடித்து அழைத்துச் சென்று தெளிவுபடுத்தும் ஒரு வழிகாட்டி!
வையகத்தில் வாழ்கிறவன், விலங்குகளைப்போல வாழாமல், வாழ வேண்டிய வழிமுறைகளில் வாழ்ந்தால் தெய்வமாகவே மதிக்கப்படுவான் என்பது வள்ளுவன் வாக்கு. இதன்படி வாழ வேண்டிய வழிமுறைகளை வகைதொகைப்படுத்திக் கொடுப்பதே சமயம் ஆகும்.
சமை > சமையம் > சமயம் = மனிதனின் ஆன்மா இறைவனை அடையத் தகுதியாகும் ஒழுக்கம் அல்லது நெறி.
சமையல்:
அரிசியைப் பக்குவமாகச் சோறாக்குவது சமையல். ஆக்குதல் என்றால் 'குற்றம் களைந்து செம்மைப் படுத்துதல்' - என்று பொருள்படும். சோறு ஆக்குவது என்பது... அரிசியில் கிடக்கிற கல்லும் குறுநொய்யும் ஆகிய குற்றங்களைக் களைந்து, அரிசியை உண்ணும் பதத்துக்கு ஆக்கி முழுமைப்படுத்துவதே ! அதே போல மனிதனைப் பக்குவமாக்கி தெய்வநிலைப்படுத்தும் ஒழுக்கமானது சமயம் என்றானது.
கறிகாய்களை பக்குவமாக அடுப்பிலிட்டு உண்பதற்கு ஏற்ற வகையில் ஆயத்தம் செய்தல்.
சமைத்தல்: ஆக்குதல், சோறாக்குதல், பதப்படுத்தல், பக்குவப்படுத்துதல், தகுதியாக்குதல், அணியமாக்குதல்,நிரப்புதல், முழுமைப்படுத்துதல் என்று பொருள்.
சமைதல்: என்றால் பதமாகுதல், நுகருதற்கேற்ற நிலையை அடைதல், வயசுக்கு வருதல், ஆயத்தமாதல், பெண் பூப்படைதல், மணம் செய்யத் தகுதியாதல், கரு சுமக்கும் பக்குவமடைதல்.
பெண்ணானவள் குமரிப் பருவத்தில் பூப்படைவது என்பது, அவள் உடல் கலவிக்கேற்ற பக்குவமடைந்ததனால், மணம் செய்யக் கூடிய தகுதியடைந்து , தயார் நிலையை எட்டி விட்டாள் என்ற பொருள்பட - சமைந்துவிட்டாள் எனச் சுருக்கமாகக் கூறுகிறோம்.