சேம் சைட் கோல்

சேம் சைட் கோல்
Published on

“ஒரே நாடு ஒரே மொழி” என்று பிரதமரும், பா.ஜ.க. தலைவர்களும் முழங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் மோடி அரசின் முக்கிய அமைச்சர்  “இந்தியாவில் ஒரே மொழி என்று திணிப்பதை எதிர்க்கிறேன்” என்று தமிழ் நாட்டில் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சு டெல்லி பா.ஜ.க. வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கிறது.

 அண்மையில்   தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை தாங்கினார். இதில் பல்கலைக் கழகங்களின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி, பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தோஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் உரையாற்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தன் உரையில் “இந்தியாவில் ஒரே மொழி என்று திணிப்பதை எதிர்க்கிறேன்” என்று குறிப்பிட்டார். 

நீதிமன்றங்களில் அந்தந்த வட்டார மொழிகளை வழக்காடும் மொழியாக சேர்ப்பதற்கு அனைத்து நீதிபதிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் ஒரே மொழி என்று திணிப்பதை எதிர்க்கிறேன். இந்திய அரசியலமைப்பில் தமிழ் உள்பட 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆங்கிலம் பொது மொழியாக இருந்தாலும், வட்டார மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தற்போதுள்ள தொழில்நுட்பத்தின்படி, “அனைத்து மொழிகளையும் மொழி பெயர்ப்பு செய்துகொள்ள முடியும். அதனை பயன்படுத்தி, பொது மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், புகார் தெரிவித்தவர்கள் கோர்ட்டில் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்துகொள்ள முடியும்”  என்றார்

தமிழக  தி.மு.க. சட்டத்துரை அமைச்சர் ரகுபதியுடன் பகிர்ந்த கொண்ட மேடையில் பா.ஜ.க. அமைச்சரின் இந்தப் பேச்சு டெல்லி பா.ஜ.க. தலைவர்களிடையே  சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com