T M கிருஷ்ணாவுக்கு 'சங்கீத கலாநிதி' விருது - ரசிகர்களின் குமுறல்கள், பரபரப்பான பதிவுகள்!

T M கிருஷ்ணா
T M கிருஷ்ணா

‘சங்கீத வித்வத் சபை’ என அறியப்படும் சென்னையின் மியூசிக் அகாடமி வழங்கும் 'சங்கீத கலாநிதி' விருது, கர்நாடக சங்கீத உலகின் தலைசிறந்த அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. 1943யிலிருந்து வருடா வருடம் வழங்கப்பட்டு வரும் இந்த விருது, சங்கீத கலைஞர்களின் திறமை, உழைப்பு மற்றும் கலை சேவை ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

2024 வருடத்திற்கான விருதை கர்நாடக இசைக்கலைஞர் T M கிருஷ்ணா பெறுவார் என சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

இதைத் தொடர்ந்து T M கிருஷ்ணா அவர்களுக்கு பல இடங்களிலிருந்து பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. எனினும், பல ரசிகர்கள் இந்த விருது குறித்த தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

T M கிருஷ்ணா, தனது 12 வயது முதல் மேடைக் கச்சேரிகள் செய்துவருகிறார். சங்கீத பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் பிறந்த அவர், குரு பகவத்துல சீதாராம ஷர்மாவிடம் சங்கீதம் பயில ஆரம்பித்தார். பின்னர் செங்கல்பட்டு ரங்கநாதன் மற்றும்  செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யரிடம் பயின்று தன் வித்வத்தை மெருகேற்றினார். பல விருதுகளை இளம் வயதிலேயே வென்றார். அரிய ராகங்கள் பாடுவது, விரைவான ஸ்வரங்களை பாடுவது போன்ற தனித்துவமான அம்சங்களைத் தாண்டி, கர்நாடக இசையை சாமானிய மக்களும் புரிந்து, ரசிக்கும்படியான ஒரு பாணியை தனக்கே உரியதாக்கிக்கொண்டார்.

மியூசிக் அகாடமி நிறுவனர்களில் ஒருவரான திரு. T.T. கிருஷ்ணமாச்சாரியின் நெருங்கிய சொந்தமான கிருஷ்ணா, 2015 முதல் மியூசிக் அகாடமியில் பாடுவதைத் தவிர்த்தார். அவரது இந்த முடிவானது கர்நாடக சங்கீத உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அப்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

மார்கழி மாதத்தில் நடைபெறும் சென்னை சங்கீத திருவிழாவானது சந்தை மயமாகிவிட்டது என்ற கருத்தினை வேறு வெளியிட்டார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இந்த இசை வடிவத்தில் ஆதிக்கம் செலுத்துவதால் மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்தத் துறையில் நுழைவதற்கே அஞ்சுகிறார்கள் என்றும் தனது கருத்தை தெரிவித்தார்.

பரியாட்டம், வில்லுப்பாட்டு, கானா-பாட்டு மற்றும் குத்து போன்ற கலை வடிவங்கள் ஓரங்கட்டப்பட்டதோடல்லாமல் அவை செம்மையானவை அல்ல என்ற கருத்தும் நிலவுவதாக குற்றம் சாட்டினார். இந்த இசைக் கலைகளையும் கர்நாடக இசையையும் சாமானிய மக்களிடையே அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தும் வகையில் ஊரூர்-ஓல்காட் குப்பம் மீனவ கிராமத்தில் இசை விழாவைத் தொடங்கினார். இவரது சமூக பணிகளுக்காக 2016ல் ரமோன் மகசேசே விருதும் இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவரது புரட்சிகரமான கருத்துக்கள் முற்போக்கு சிந்தனைகொண்ட சமத்துவவாதிகளின் வரவேற்பைப் பெற்றாலும், பலரின் கோபத்தையும் சம்பாதித்துள்ளது. சங்கீதத்தின் தூய்மையை விமர்சிக்கிறார் என்றும் தேவையில்லாமலும் வரம்பு மீறியும் மூத்த மற்றும் சக இசைக் கலைஞர்களையும் அவர்களது நோக்கங்கள் மற்றும் இசையையும் விமர்சிக்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சங்கீத கலாநிதி விருது இவ்வருடம் இவருக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து பலரும் தங்களது அதிருப்தியையும் கோபத்தையும்கூட வெளிப்படுத்தி வருகின்றனர். மியூசிக் அகாடமி கச்சேரிகளுக்கு இனி செல்வதில்லை என்றும்  சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னால் இவ்விருதையும், அது வழங்கப்படும் முறையையும் அதனை வழங்கும் வித்வத் சபையையும் கடுமையாக விமர்சித்து, ‘இனி மார்கழி சங்கீத சீஸனில் பாடுவதில்லை’ என்று கூறி புறக்கணித்தவருக்கு இவ்விருது வழங்குவதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பின்னால் வேறு சில ‘அரசியல்’ காரணங்களும் இருக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்.

மெட்ராஸ் மியூசிக் அகாடமியின் தலைவர் N முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கிருஷ்ணாவுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் ‘அவரது சக்தி வாய்ந்த குரல்’, ‘கலையின் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் பாங்கு ’, ’வரையறுக்கப்பட்ட கட்டமைப்புகளுக்கு மாறாக அதன் ஆய்வுகளில் கவனம் செலுத்துவது’ மற்றும் ‘இசையை சமூக சீர்திருத்தத்திற்கான ஒரு கருவியாக பயன்படுத்துவது’ போன்ற காரணங்களுக்காக ஆனது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விருது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று T M கிருஷ்ணா அவர்கள் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜாதி வேற்றுமைகளை ஊக்குவிக்கிறது மியூசிக் அகாடமியின் மார்கழி திருவிழா என முழங்கிய கிருஷ்ணா, இன்று மியூசிக் அகாடமியில் மாற்றங்கள் வந்ததாகக் கூறி தனது மனதை மாற்றிக்கொண்டு விட்டாரா என்ற கேள்வியும்  எழுந்துள்ளது.

ரசிகர்களின் அதிருப்தி ஒரு பக்கம் என்றால், சக கலைஞர்களின் கனத்த மௌனமும் இசை உலகின் இரு வேறுபட்ட கருத்தை பறை சாற்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com