சவோ ஜார்ஜ் கோட்டை

அத்தியாயம் - 6
சவோ ஜார்ஜ் கோட்டை

போர்ச்சுக்கலும், ஸ்பெய்னும் இருக்கும் ஐபிரிய தீபகற்பம் முன்பு ரோமானியர்களின் காலனிகளாக ஹிஸ்பானியோலா எனும் பெயருடன் இருந்தது. கி.பி. 711ல் ஐபிரியாவில் ஆப்பிரிக்காவின் மொராக்கோ வழியே இஸ்லாமிய படைகள் நுழைந்தன. ரோமானியர்களின் ஆட்சிக்காலத்தில் அப்பகுதியின் பெயர் மாருஸ். இன்று அப்பெயரின் திரிபாக மரிஷியானா (Mauritiana) எனும் ஆப்பிரிக்க நாடு உள்ளது. மாரஸ் பகுதி மக்களை ‘மூர்கள்’ என அழைப்பார்கள். பின்னாளில் அது முஸ்லிம்களின் பொதுப்பெயராக மாறியது. போர்ச்சுக்கீசியர்களும், ஸ்பானியர்களும் பிடித்த நாடுகளில் இருந்த முஸ்லிம்களை அவர்கள் ‘மூர்கள்’ என அழைப்பார்கள்.

கி.பி. 711ல் ஸ்பெய்ன், போர்ச்சுக்கல் முழுக்க உம்மாயிட் காலிபேட் அரசு நிறுவப்பட்டது. நாட்டின் வடபகுதியில் உள்ள பைரனிஸ் மலையில் சிறு கிறிஸ்துவ அரசுகள் உருவாகி எதிர்போராட்டத்தை துவக்கின. அடுத்த 700 ஆண்டுகள் தொடர்ந்து போர்கள், வெற்றி மாறி, மாறி வந்தது.

கி.பி. 1147ம் ஆண்டு மூர்கள் கட்டிய அல் லுக்ஸ்பானா எனும் கோட்டை நகரம் ஒன்றை கைப்பற்ற இரண்டாம் சிலுவைப்போர் சமயம் முயற்சி நடந்தது. இங்கிலாந்தில் இருந்து சிலுவைப்படை வீரர்கள் போர்ச்சுக்கீசிய மன்னர் அல்போன்ஸோ தலைமையில் வந்தார்கள். அல் லுக்ஸ்பானா கோட்டையில் 1.5 லட்சம் வீரர்கள் இருந்தார்கள். அந்நகரை சுற்றி ஏழு மலைகளும், அதனுள் நுழையும் ஒரே வழியாக அட்லாண்டிக் கடலும் இருந்தன.

கோட்டையை போர்ச்சுக்கீசிய படைகள் முற்றுகை இட்டன. முற்றுகை சமயம் தாக்குதலில் ஒருமுறை கோட்டை கதவு திறந்து கொள்ள, மூர்கள் அதை மூடும் முயற்சியில் ஈடுபட்டனர். ‘மார்ட்டிம் மோனஸ்’ என்ற போர்ச்சுகிய பிரபு கோட்டை கதவிடுக்கில் பாய்ந்து உயிர்த்தியாகம் செய்து கோட்டை கதவு மூடாமல் தடுத்தார். படைகள் உள்ளே நுழைந்ததும் மூர்கள் சரணடைந்தார்கள்.

Sao Jorje castle
Sao Jorje castle

அல் லுக்ஸ்பானா கோட்டையும், நகரமும் அதன்பின் லிஸ்பன் என அழைக்கபட்டது. கோட்டையை சுற்றியிருந்த முன்னாள் மூர்களின் குடியிருப்புகளை இன்று பார்த்தாலும் ஆப்பிரிக்க மொராகோ வீடுகளின் வடிவமைப்பில்தான் இருக்கும். இன்று அந்த நகரமும், கோட்டையும் கிட்டத்தட்ட அதே பாணியில்தான் மெய்ன்டெய்ன் செய்யபட்டு வருகின்றன. சவோ ஜார்ஜ் கோட்டை (Sao Jorje castle) என அதற்கு பெயர் மாற்றபட்டது. ‘சவோ’ என்றால் செயிண்ட் என்பதன் போர்ச்சுக்கீசிய மொழி சொல். தமிழில் ‘சவேரியார்’ என இச்சொல் வழங்குகிறது. சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இத்துறவியார் பெயரில் அமைந்ததுதான். ஸ்பானிய மொழியில் செயின்ட் என்பதற்கு சான் (san) என பொருள். சான் பிரான்சிஸ்கோ என்றால் செயிண்ட் பிரான்ஸிஸ் என பொருள்.

Sao Jorje castle
Sao Jorje castle

லிஸ்பன் விழ காரணமாக இருந்த, மார்ட்டிம் மொனேஸ் (MartimMonez) பெயரில் இன்று அப்பகுதியில் ஒரு பேருந்து நிலையம் மட்டுமே உள்ளது. பலருக்கும் அப்பேருந்து நிலையத்துக்கு ஏன் அப்பெயர் என்பதே தெரியாது.

சவோ ஜார்ஜ் கோட்டையை சுற்றிப்பார்த்தேன். பழங்கால அரபு மக்களின் தொல்லியல் சுவடுகளை உள்ளே பாதுகாத்து வைத்துள்ளனர். மிக வலுவான கோட்டை. கோட்டை விழுந்தாலும் நகரின் பெயரான லிஸ்பன் என்பதே மூர்கள் ஆட்சிகாலத்தின் வரலாற்று சான்றாக திகழ்கிறது.

Sao Jorje castle
Sao Jorje castle

பேருந்தில் ஏறி சவோ ஜார்ஜ் கோட்டைக்கு சென்றேன். பத்து யூரோ கட்டணம். வரிசையில் நின்று பலர் டிக்கட் வாங்க, இணையத்தில் டிக்கட் வாங்கியதால் வரிசையில் நிற்காமல் எளிதில் உள்ளே செல்ல முடிந்தது. மிகுந்த பாதுகாப்புடன் கோட்டை மதில்சுவர்கள் இருந்தன. சுவர்கள் மேலே பீரங்கிகள், துப்பாக்கியுடன் மறைந்து நின்றுசுட வசதி, என மிக வலுவான கோட்டையாக இருந்தது. மூர்கள் ஆட்சிகாலத்தில் இருந்த தொன்மையான மசூதி, இப்போது சர்ச் ஆக மாற்றபட்டு இருந்தது. மூர்கள் ஆட்சிகாலத்திய பொருட்கள் பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.கோட்டையை சுற்றிப்பார்க்க அரைநாள் பிடித்தது.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com