லியோனார்டொ டாவின்ஸியின்(Leonardo da Vinci)
மடொன்னாவும் கார்னேஷனும் (Madonna of the Carnation)
”கார்னேஷன் என்றால் என்ன?”
“அங்க பாத்தீங்களா!அந்த இளஞ்சிவப்பு ரோஜா என்ன அழகா இருக்கு!”
ஊட்டிக்கு அழைத்துக்கொண்டு போன உங்கள் மனைவி கிறக்கமாகச் சொல்லி ரசிக்கும்போது அவளின் முகத்தைப் பார்த்து பரவசமாகிக்கொண்டபடியே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது அந்த இளஞ்சிவப்புதான் கார்னேஷன் என்பது!
ஆல்ட்டே பினகொதேக் என்னும் ஜெர்மானியப்பெயருக்கு பொருள் தெரிந்துகொள்ளவேண்டும். ‘ஆல்ட்டே’ என்றால் பழசு இல்லை, ‘பழைமையான’ என்று பொருள். பழமையான விஷயங்கள் உள்ள அருங்காட்சியகம். அவர்களைப் பொறுத்தவரை பதினாலாம் நூற்றாண்டே பழைமைதான் ஏனென்றால் நம்மைப்போல 2000 ஆண்டுகளுக்கு மேலான சரித்திரமும் நாகரிகமும் அங்கில்லை.
இந்த ம்யூசியம்தான் உலகத்திலேயே மிகப்பெரிய ஒன்று. பவேரியாவின் மன்னர் முதலாம் லுட்விக்கால் 1926இல் கட்டப்பெற்ற ஆல்ட்டே பினாகொதெக் இரண்டாம் உலகப்போரின் குண்டு வீச்சால் ஆங்காங்கே சிதைந்துவிட்டது. அதை மறுபடி சீர் செய்து 1957ஆம் ஆண்டு மீண்டும் பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. பிற்பாடு வந்த பல ஆர்ட் மியூசியங்களுக்கு இந்த ஆல்ட்டே பினாகொதேக் ஒரு முன்னோடியாகவே திகழ்ந்திருக்கிறது.
சுஜாதா எழுதிய “மேற்கே ஒரு குற்றம்” நாவலில் இந்த ஆல்ட்டே பினாகொதேக்கில்தான் முக்கிய சம்பவம் ஒன்று நிகழ்வதாக வரும்!
போன வருடம் ஜெர்மனியின் ஆல்ட்டே பினகொதெக் மியூசியத்தில்தான் நான் தலைப்பில் சொல்லியிருக்கும் லியோனார்டோ டாவின்ஸியின் மடொன்னாவும் கார்னேஷனும் என்னும் ஓவியத்தைப்பார்த்தேன்.
உற்றுக் கவனியுங்கள்... ஓவியத்தின் மையக் கருத்து கன்னி மேரியும், குழந்தை ஏசுவும். அந்த தெய்வக்குழந்தை ஏசு சற்றே எம்பி மேரியின் கையில் இருக்கும் இளஞ்சிவப்பு மலரைப்பிடிக்க முயலுகிறார். குழந்தையாதலால் அவரின் வசம் இழந்து கொஞ்சமாக பாலன்ஸ் தடுமாறும் பாவம் தெரியும் ஓவியம்! கன்னி மேரியின் அபார உடையழகைப்பாருங்கள். அவர் கையில் இருக்கும் இளஞ்சிவப்பு நிறம் பின்னாளில் சிலுவையில் அறையப்படும் ஏசுவின் ரத்தத்தைகாட்டும் குறியீடு என்கிறார்கள் ஓவிய விமரிசகர்கள். அந்தக் குழந்தையின் ஆர்வம் என்பது கடவுள் தன்மையின் பூரணத்துவம் என்றும் சொல்கிறார்கள்.
இன்னொரு விஷயம் கன்னி மேரி மற்றும் ஏசுவின் முகங்கள் பளிச்சென இருக்க, சுற்றுப்புறம் இருள் கவிந்து இருக்கிறது. முக்கியமாக அந்த மலர் நிழலின் கருமையோடு இருப்பதாக வரைந்திருக்கிறார் டாவின்ஸி. குழந்தை அம்மாவைப்பார்க்க அன்னையும் குழந்தையைப்பார்த்தாலும் இருவருக்கும் கண் தொடர்பு இல்லை!
இந்த ஓவியம் கண்டெடுக்கப்பட்டபோது இதை எழுதியவர் டாவின்ஸியின் வாத்தியார் ஆண்ட்ரியா டெல் வொராஷியோ என்று கருதப்பட்டாலும் பின்னாளில் ஓவிய வித்தகர்கள் இது நிச்சயம் லியோனார்டோ டாவின்ஸியுடையது. அதுவும் அவருடைய இளமைக்காலத்தில், வொராஷியோவிடம் அவர் மாணவனாக இருந்தபோது, தீட்டப்பட்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அந்த முடிவுக்குக்காரணம் டாவின்ஸி வரைந்த ஆனன்ஸியேஷன் (Annunciation) என்னும் இன்னொரு ஓவியத்தின் சாயல் – கன்னிமேரியின் தலைமுடி, உடைகள், சுற்றுச்சூழல் மலர் போன்றவற்றில் – அதிகம் தென்படுவதாக விற்பன்னர்கள் கருதியிருக்கிறார்கள். முக்கியமாக கன்னி மேரியின் உடைகளில் இருக்கும் மடிப்புக்களின் நேர்த்தியும் டிசைன் மற்றும் வண்ணங்களின் உயிர்ப்பும் டா வின்ஸி பின்னாளில் பெறப்போகும் மேன்மைக்கு கட்டியம் கூறுவதாக இருந்திருக்கின்றன.
இந்த ஓவியத்தை மடோன்னாவும் மலர்க்குவளையும் அல்லது ம்யூனிக் மடோன்னா. (Munich Madonna or the Madonna with the Vase) என்றும் சொல்லுவார்களாம்.
ஒரு சங்கடமான விஷயம் என்னவென்றால் இந்த ஓவியம் பழுதடைந்துவிட்டது. ஓவியம் கண்டெடுக்கப்பட்ட பின்னர் அதை நல்ல நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் குளறுபடி ஆனதால் ஓவியத்தின் பின்புலம் கெட்டுப்போய் நுண்ணிய பார்வைக்குத் தெரியும்படியான தரக்குறை உண்டாகிவிட்டதாம். “கன்னி மேரியின் முக நிறம் பழுதாகிவிட்டது” என்று விற்பன்னர்கள் சொல்லுவது நம் கண்களுக்குத்தெரியவில்லை!
ஒரு கணம் ஓவியத்தில் இருக்கும் ஜன்னலுக்கு வெளியே காட்சியைப்பாருங்கள், பனிபடர்ந்த மலைகளின் அபார தரிசனம் தெரிகிறதா? அதில்தான் லியோனார்டொ டாவின்ஸியின் மேதமையும் தெரிகிறது!
(தொடரும்)