“ஏய்... சும்மா கத்தாத... எத்தன பேர் உக்காந்திருக்காங்க பாரு... ஒரு ஊசி போட்டுக்க எதுக்கு இத்தன ரகள பண்ற? மணியைக் கூப்ட்டு கை காலை சேரோட கட்டிப் போடச் சொல்லட்டுமா?” “....” “ம்ம்ம்... காட்டு கைய... ம்ம்.... போட்டாச்சு போ... இதுக்கு இத்தன ஆர்ப்பாட்டம். அடுத்தது யாரு? உள்ள வா..” சப் ரிஜிஸ்திரார் ஆபீஸ் எதிரில் “டாக்டர்.சீனிவாசன் MBBS” என்று போர்டு தொங்கும் வீடு சிலருக்கு ஒரு சாதாரண க்ளினிக். ஆனால் ஊரில் உள்ள பலருக்கும், சுற்றுப்பட்டு கிராமத்தாருக்கும் அது ஒரு பெரிய ஆஸ்பத்திரி. நோயோடு உள்ளே போனால் நம்பிக்கையோடு வெளியே வரலாம். “சீனி டாக்டர் பார்த்தா சீக்கு ஓடிப்போயிரும்” என்பது அவர்களின் பெரிய நம்பிக்கை. டாக்டரின் வீடு அந்தப் பக்கம் அக்ரஹாரத்தில் ஆரம்பித்து இந்தப் பக்கம் கச்சேரி வீதி வரை பரந்து விரிந்த வீடு. ஒரு சிறிய வராந்தா, இடது பக்கம் ஒரு பெரிய அறை, உள்ளே டாக்டர் அறை. காலை 7:30க்கெல்லாம் ஆட்கள் வரத் துவங்கி விடுவார்கள். உதவியாளர் மணி வந்து வாசல் கதவைத் திறந்து வைத்து வாசலை சுத்தம் செய்தபின் வெளியே இருப்பவர்கள் உள்ளே போய் உட்கார்ந்துகொள்ளலாம். டோக்கனெல்லாம் கிடையாது. வந்தவர்கள் வராந்தாவில் செருப்பைக் கழற்றிவிட்டு, சண்டை பிடிக்காமல் அவர்களாகவே ஒரு வரிசையாக உட்காருவார்கள். நடுவே ஆங்கிலேயர் காலத்து சாப்பாட்டு மேசை போல ஒரு பெரிய மேசை. சுற்றிலும் எட்டு நாற்காலிகள். மேசையில் நடுவில் வெள்ளை சலவைக்கல் பலகை. ஓரங்களில் சிறிய சிவப்பு நிறப் பூக்கள் கொண்ட ஒரு கொடி வரையப்பட்டிருக்கும். நாற்காலிகளிலும் உட்காரும் இடமும் முதுகும் கூட சலவைக்கல் பலகைகள். வாசல் பக்கம் பார்த்த சுவற்றில் தாழ்வான 2 பெரிய சன்னல்கள். ஜன்னல் திட்டுகளில் கூட தாராளமாக 3 பேர் உட்காரலாம். மறுபக்க சுவற்றை ஒட்டி 2 சிறிய பெஞ்சுகள். டாக்டர் அறை வாசலுக்கு மேலே படத்தில் மர்ஃபி பாப்பா “ஷ்ஷ்...” என்று வாயில் விரலை வைத்தபடி அழகாக மிரட்டுவாள். சுவர்களில் நரம்பு மண்டலம், எலும்பு, தசை படங்கள் வரிசையாகத் தொங்கும். “பாளாப் போன சளி... திலுமூர்த்தி மலை அருவியாட்டம் ஊத்துது” என்று சொல்லியபடி ஒருவர் மேல்துண்டில் மூக்கைச் சிந்துவார். “கருமாந்திரம் புடிச்ச கோளி எங்க போய் என்னத்தத் தின்னுச்சோ... மச்சான் வந்தான்னு ஊட்ல நேத்து அடிச்சுக் கொளம்பு வெச்சாங்க. பெணஞ்சு சாப்டதுலருந்து வவுரு கடாமுடாங்குது... நோவுது. என்னத்தச் சொல்றது?” என்பார் மற்றொருவர் வயிற்றைப் பிடித்தபடியே. “உடனே மொத வண்டியைப் புடிச்சு வந்தீங்களாக்கு... மச்சானைக் காணோமே” “அவன் கல்லைக் கூட தின்னு கரைச்சுருவான். வவுத்துல மிசின் வச்சுருக்காப்ல” இப்படி அவரவர் தத்தமது நோய் நொடிகளை விருத்தாந்தம் வைத்துக்கொண்டிருக்கும்போது உள்பக்கக் கதவிலிருந்து சட்டென வெளியாகி வருவார் டாக்டர். எல்லோரும் எழுந்து நிற்பார்கள். எம்.ஜி.ஆர். போல நல்ல சிவப்பு. 60 வயதிற்கு அருகில். தீர்க்கமான கண்கள். தலையில் சஹாரா பாலைவனம். வெள்ளை வேட்டி. பித்தான்கள் போடப்படாத உள்ளே உடம்பு தெரியும்படியாக வெள்ளை அரைக்கை சட்டை.. “நான் என்ன ராஜாவா? எதுக்கு எழுந்துக்கறீங்க? உடம்புதான் சரியில்லயே... உக்காருங்கோ...” தன் அறைக்குள் போய் ஒரு நோட்டம் விடுவார். ஏற்கெனவே கம்பவுண்டர் மணி தயாராக அங்கே ஸ்டவ்வில் வென்னீர் கொதிக்க வைத்திருப்பார். பக்கத்தில் சிரிஞ்ச், சில ஊசிகளெல்லாம் தயாராக இருக்கும். அலமாரியில் கொஞ்சம் மருந்து மாத்திரைகள். மேசையில் பேனாவும் மருந்து சீட்டுகளும். “ம்ம்... யாருப்பா மொதல்ல? வா.. வா..” “அய்யா வவுத்துவலி கவ்வுதுய்யா. காலமே புடிச்சு தூக்கமே இல்ல..” “நேத்து என்ன சாப்ட்ட? கோழியா ஆடா...ம்ம்ம்?” “கோளிங்க..” “எதை சாப்டாலும் அளவா சாப்டா எல்லாம் ஜீரணம் ஆகும்... சட்டியோட கவுத்துண்டயா?” “இல்லைங்கயா... கொஞ்சோண்டுதான்...” பேசிக்கொண்டே ஸ்டெதாஸ்கோப்பை காதில் மாட்டியபடி நெஞ்சு, முதுகில் கேட்பார். லேசாக மணிக்கட்டைப் பிடித்துப் பார்ப்பார். “சரி சரி... படு இப்படி பெஞ்சுல” என்று படுக்கச் சொல்லி வயிற்றை அமுக்கிப் பார்த்துவிட்டு “சும்மா மொனகாத... ரெண்டு வேளை மாத்திரை தரேன். எல்லாம் சரியாப் போயிடும். வீட்டுக்குப் போய் சாப்பிடு. ரெண்டு நாளைக்கு அரைக் கஞ்சி மட்டும் சாப்பிடு. பறக்கறது புடிக்கறது எல்லாம் அப்பறமா சாப்பிடு. புரிஞ்சுதா?” என்று சொல்லியபடியே அல்மாரியைத் திறந்து இரண்டு மாத்திரைகளை ஒரு சிறிய காகிதத்தில் மடித்துத் தருவார். “எவ்வளவுங்கய்யா?” “ஒரு ருபா குடு. பஸ்ஸுக்குக் காசு இருக்கா?” “இருக்குங்க” “அப்ப சரி. ம்ம்... அடுத்தவர் வாங்க” “சாமி... ரெண்டு நாளா தலைவலிங்க. உள்ள யாரோ இடிக்கறாப்லயே இருக்குதுங்” கண், வாய், நாக்கு போன்ற அடிப்படை சோதனைகள் செய்துவிட்டு “அடிக்கடி தண்ணி குடிக்கிறியா இல்லையா? ஏன் இப்பிடி சோகையா இருக்கு? என்ன சாப்ட்ட? எப்ப சாப்ட்ட?” “.....” “என்ன கைல காசில்லையா?” மெல்லிய குரலில் கேட்பார். “சாப்ட்டு 3 நாளாச்சுங் சாமி” என்று அதைவிட மெல்லிய குரலில் கண்ணில் நீர் துளிக்கச் சொல்வார் வந்தவர். “இந்தா 2 ரூபா. வெச்சுக்கோ. போய் சரஸ்வதி கபேல சாப்டுட்டுப் போ. மருந்தெல்லாம் எதுவும் வேண்டாம். தண்ணி நிறைய குடி” அவரை அனுப்பியபின் அடுத்து வந்தவரை கவனித்துவிட்டு “நீங்க குறிச்சிக்கோட்டைதானே... அங்க ஸ்கூல்ல ஜாகீர்னு ஒரு ப்யூன் இருப்பான். அவனுக்கு ஒரு மருந்து தரணும். குடுத்துடறீங்களா?” என்று கேட்டு கம்பவுண்டர் மணி கொடுத்த பாட்டிலை அவரிடம் கொடுப்பார். “பார்த்து... பத்தரம்... இதை ஒழுங்கா வேளைக்குக் குடிக்கச் சொன்னேன்னு சொல்லிக் குடுங்க” சைக்கிளில் வேகமாக வந்து கேரியரிலிருந்து பையனை இறக்குவார் ஒருவர். “வெளிய போனா கண்ணு மண்ணு தெரியாம விளையாட வேண்டியது... அடிபட்டுக்க வேண்டியது... வீடு ஆஸ்பத்திரின்னு எனக்கு இதே வேலை” என்று புலம்பியபடியே ஏற்கெனவே அழுது முகம் வீங்கி இருக்கும் பையனின் முதுகில் மொத்தியபடியே உள்ளே இழுத்து வருவார். “டாக்டர்... சொன்னாக் கேக்கறதே இல்லை. கீழ விழுந்து எப்பிடி சிராய்ப்பு பாருங்க...” டாக்டர் அவரைக் கொஞ்சமும் கவனிக்காமல் பையனை பெஞ்சில் அமர்த்தி காயத்தைப் பார்த்துவிட்டு டிஞ்சர் தோய்த்த பஞ்சால் துடைத்துவிட்டு “எல்லாம் சரியாப் போயிடும் போப்பா. இன்னிக்கு கிரவுண்டுக்குப் போகாத. நாளைக்கு போ” என்பார். “டாக்டர்... இன்ஃபெக்ஷன் ஆயிருக்குமே. ஒரு டிடி போட்டுடலாமா?" "நீங்க டாக்டரா? நானா? ஊசியெல்லாம் வேணாம். சும்மா மண்லதான் விழுந்திருக்கான். சின்னப் பசங்க துறுதுறுன்னுதான் இருக்கணும். இப்ப வெளையாண்டு அடிபட்டுக்கலேன்னா அப்பறம் எப்ப? என்ன மாதிரி கெழம் ஆனப்பறமா? நீ போய் நல்லா வெளையாடு. அடிபட்டா பயந்துக்காத. இங்க வா... சரியா?” என்று சிரித்து பையனுக்கு ஒரு சாக்லேட் கொடுத்து அனுப்பிவிடுவார். கொஞ்சம் அதிகம் கவனம் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஒரு சீட்டு எழுதிக்கொடுத்து “இப்பத்திக்கு ஒரு ஊசி போட்டுருக்கேன். ஆனா பத்தாது. உடனே பெரியாஸ்பத்திரிக்குப் போய் இந்த சீட்டைக் குடு. அவங்க பாத்துப்பாங்க. தனியாப் போயிடுவியா? இல்லை மணியையும் அனுப்பட்டுமா?” என்று கேட்டு அனுப்புவார். மதியத்திற்கு மேல் ஒரு லெதர் பையில் மருந்துகளுடன் சில வீட்டு நோயாளிகளை நேரில் பார்க்கக் கிளம்பிவிடுவார். ஒரு சில நாட்களில் மாலை வேளைகளிலும் கிளினிக் திறந்துவைத்திருப்பார். நவராத்திரி நாட்களில் அவர்கள் வீட்டில் பெரிய அளவில் கொலு வைப்பதுண்டு. சாதாரண நாட்களில் ஓரக்கண்ணால் பார்த்தபடி அவர் வீட்டைக் கடந்து போனாலும், நவராத்திரி மாலை வேளைகளில் யார் வேண்டுமானாலும் போகலாம். சில சமயம் டாக்டரும் அங்கே உட்கார்ந்து பாடிக்கொண்டிருப்பார்.ஒரு நாள் இரவு 8 மணி இருக்கலாம். திடீரென பெருமழை. குழந்தைகள், தாய்மார்கள் என்று கொலுவுக்கு வந்திருந்தவர்கள் மழை நிற்கும் வரை வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய கட்டாயம். எல்லாருக்கும் சாப்பாடு போடச்சொன்னார். டாக்டர் வீடு போல ஊரில் மிகச் சில வீடுகளில் மட்டுமே தொலைபேசி இருந்த காலம். யார் வீட்டிலோ அவசரம் என்று அழைப்பு வர விஜயகாந்த் போல ஒரு காக்கி ரெயின்கோட்டுடன் தயாரானார். “கொட்டும் மழையில் போகவேண்டுமா” என்று சிலர் கேட்க “பாத்ரூம்ல வழுக்கி விழுந்து நடராஜனுக்கு கால்ல அடியாம். அ டாக்டர் ஷுட் ஆல்வேஸ் ரெஸ்பாண்ட் டு அன் அர்ஜண்ட் கால். கால் மேல கால் போட்டு உக்காந்து பாடிண்டு இருக்கக்கூடாது” என்று கிளம்பினார். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு இரவு கோவையிலிருந்து ஊருக்குத் திரும்ப பேருந்தில் ஏறியபோது 3 பேர் அமரும் இருக்கையில் டாக்டர் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன். கூட்டமும் இல்லை. நான் போய் அருகே உட்கார்ந்தேன். “டாக்டர்... நல்லா இருக்கீங்களா?” “யெஸ்... நல்லா இருக்கேன். நீ யாரு?” “உங்களுக்கு என்னைத் தெரியாம இருக்கலாம். ஆனா ஊர்ல உங்களைத் தெரியாதவங்க யாரும் இருக்க முடியாதே” “வாஸ்தவந்தான். என்னா படிக்கிறப்பா?” என்று சிரித்தார். “இஞ்சினீயரிங். பிஎஸ்ஜி. ஈவினிங் காலேஜ்” “ஓ... அப்படியெல்லாம் இப்ப இருக்கா?” சிறிது நேரம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பொதுவான விஷயங்கள் பேசினார். “டாக்டர்... உங்களை ஒண்ணு கேக்கலாமா?” “...” “நான் ஸ்கூல் படிக்கறப்ப இருந்து பார்க்கிறேன். வர பேஷண்டுக நிறைய பேர் கிட்ட நீங்க காசு வாங்கறதில்ல. மருந்தும் குடுக்கறீங்க. சில பேருக்கு நீங்க காசும் குடுத்து அனுப்பறீங்க. எங்களுக்கெல்லாம் ஆச்சரியமா இருக்கும். இது எப்படி?” தலையை ஆட்டியபடி வசீகரமாகச் சிரித்தார். “நான் காசு வாங்கறதில்லைன்னு யார் சொன்னா? யார்னால தாராளமா குடுக்க முடியுமோ அவங்ககிட்ட நிறையவே வாங்கிக்கறேன். கவர்மெண்ட் டாக்ஸ் வாங்கற மாதிரின்னு வெச்சுக்கோயேன். இல்லாதவங்களுக்கு குடுக்கறேன். பரோபகாரம்கறது நம்ம மாரியம்மன் கோவில் தேர் மாதிரி. நிறைய பேர் சேர்ந்து இழுத்தாத்தான் ஊரை சுத்தி வரமுடியும். ஆனா பாக்கறவங்களுக்கு பின்னால இருந்து தள்ளற யானைதான் பெருசாத் தெரியும். அது மாதிரிதான். மத்தவங்களுக்குக் குடுக்கற என்னைப் பாக்கறீங்க. எனக்குக் குடுத்த மத்தவங்களையெல்லாம் உங்களுக்குத் தெரியாதே” என்று மறுபடியும் சிரித்தார். டாக்டர் இப்போது இல்லை. ஆனால் ஊரில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் ஒரு சில முறையாவது டாக்டரிடம் வைத்தியம் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு முறை அந்த வீட்டைக் கடக்கும்போதும் அனிச்சையாக திரும்பிப்பார்ப்பார்கள். எனக்கோ மாரியம்மன் கோயில் வாசலில் நிலையில் இருக்கும் தேரைப் பார்க்கும்போதெல்லாம் டாக்டரின் நினைவு வரும்.(தொடரும்)