செம்மொழி மாநாடு குறித்து கலைஞரின் ஏழு கடிதங்கள்! | கலைஞர் 100

கலைஞரும் கல்கியும்
செம்மொழி மாநாடு குறித்து கலைஞரின் ஏழு கடிதங்கள்! | கலைஞர் 100
Published on

கலைஞரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.

2010ஆம் ஆண்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பிரம்மாண்டமான முறையில் கோயம்புத்தூரில் நடைபெற்றது. கோவை கொடிசியா வளாகத்தில் ஜூன் 23 முதல் ஜூன் 27 வரையிலான 5 நாட்கள் நடைபெற்ற அந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இதற்கு முன்பு நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளுக்கு ஈடாகத் நடைபெற்ற இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன், தமிழ் இணைய மாநாடும் சேர்த்து நடத்தப்பட்டது.

செம்மொழி மாநாட்டின் சிறப்பினை எடுத்துக் கூறும் வகையில் கலைஞர் முரசொலியில் ஏழு கடிதங்கள் எழுதினார்.

கல்கி வெளியிட்ட “செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில், கலைஞரின் அந்த ஆறு கடிதங்களையும் சாராம்சத்தைத் தொகுத்து ஒரு கட்டுரை வெளியானது. அதன் ஒரு பகுதி இதோ:

மெய்ப்பட்ட கனவு...

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற வகையில், நாம் நடத்திடப் போவது முதல் மாநாடாகும். நமது தமிழ்மொழி செம்மொழி என்பதற்கான அவைத்துத் தகுதி களையும் நிரம்பவே பெற்றிருப்பதால், அதனைச் செம்மொழி என்று அனைவரும் ஏற்றும் கொள்ள வேண்டுமென்று, இன்று நேற்றல்ல, ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே சூரிய நாராயண சாஸ்திரி என்ற பரிதிமாற் கலைஞர் அவர்களால் குரலெழுப்பப் பட்டது.

அன்று எழுப்பப் பட்ட அந்தக் குரல் – தமிழ்க்குரல். மெல்ல, மெல்ல ஆனால் உறுதியாக காலப் போக்கில் தமிழறிஞர்களின் குரலாக தமிழ் ஆர்வலர்களின் குரலாக தமிழ்ச் சமுதாயத்தின் குரலாக அரசியலரங்கத்தில் ஆற்றல் செறிந்த குரலாக உருப்பெற்று, அந்தக் குரலைக் கேளாக்காதினர் மதித்திடத் தவறி விட்டாலும், செவித் திறலும் சீர்த்த பண்பும் உடையோர் அதனை மதித்துப் போற்றி, அந்தக் குரலின் மாண்பமைந்த நியாயத்தை உணர்ந்து, தமிழ் செம்மொழியே என இந்தியத் திருநாட்டளவில் அங்கீகாரம் செய்து பிரகடனப்படுத்தப்பட்ட நாள் 12.10.2001.

1911-ல் துவங்கப்பட்ட தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம் செம்மொழி வர மாற்றிற்கு வழங்கியுள்ள மிகச் சிறப்பான பங்களிப்பு போற்றத்தக்கது மட்டுமல்ல; புவியில் வாழும் நான் வரை தமிழர்களால் மறக்க முடியாததுமாகும். தொடங்கிய காலம் முதல், தம் வாழ்நாள் இறுதிவரை அதன் தலைவராக இருந்து அரும்பணி யாற்றியவர் தமிழறிஞர் த.வே.உமா மகேசுவரம்பிள்ளை.

அதனால்தான் 18:2.06 அன்று உமாகேசுவரனார் அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில், "மற்ற அறிஞர்களை விட இவரது பெயர் அதிகமாக நினைக்கப்பட வேண்டிய காலகட்டம் இது. காரணம், தமிழ் செம்மொழி என்று எண்ணினால், பரிதிமாற்கலைஞருக்கு அடுத்து. நினைவுக்கு வாரவண்டிய பெயர் உமாமகேசுவரனார் பெயர்தான். அவர்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில், தமிழ் செம்மொழி ஆக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியவர்., தமிழ் செம்மொழி ஆவதற்கு அந்த ஆதாரத்தை வைத்து நாம் மத்தியிலே இருக்கிற அரசோடு பேச முடிந்தது" என்று பேசினேன்.

நுண்ணிய ஆய்வுக்குப் பிறகு, தமிழ் செம்மொழியே என மொழி அறிஞர்கள் அனைவரும் ஏற்றுப் போற்றும் வகையில், உரிய சான்றுகளுடன் “உலகின் முதன்மையான செம்மொழி “ (The Primary Chssical Language of the World) என்ற அரிய நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள்.

லெமூரியாவை மூலமாகக் கொண்டுள்ள மொழியான தமிழ்மொழி. மிகப் பெருமளவுக்கு செழித்து வளர்ந்துள்ள செம்மொழியாகும் என்ற கருத்தை, உரிய சான்றுகளுடன், விளக்கியவர் பாவாணர். அவர் எடுத்துவைத்த ஆதாரங்கள் வடமொழி மற்றும் ஆங்கிலப் புலமைமிக்கோரையும் பெரிதும் ஈர்த்து ஏற்றுக்கொள்ளச் செய்தன.

நான்காவது முறையாக நான் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது, தமிழ் செம்மொழி என்று உரிய முறையில் நிலைநாட்டி, மத்திய அரசில் கோரிக்கை வைப்பதற்கென ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், முனைவர் ஜான் சாமுவேல் அவர்களால் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதை முனைவர் ச.சத்தியலிங்கம். முனைவர் வா.செ.குழந்தைசாமி. திரு.மணவை முஸ்தபா, முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் பொற்கோ போன்ற வல்லுனர்கள் ஏற்றுக் கொண்ட னர். தமிழைச் செம்மொழி யாக்க வேண்டும் என்று கழக அரசில் சார்பில் அனுப்பப்பட்ட இந்த அறிக்கை மைசூரிலுள்ள தேவநேயப் பாவாணர் இந்திய மொழிகளின் நடுவண் ஆணையத்திற்கு பரிசீலித்துக் கருத்துரைக்குமாறு அனுப்பப்பட்டது.

அதன் பிறகு என்ன ஆயிற்று?

கலைஞர் விளக்கவுரையின் மீதிப் பகுதியை நாளை பார்க்கலாம்.

கல்கி 27.06.2010 இதழிலிருந்து

தொகுப்பு: எஸ். சந்திர மௌலி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com