சிறுகதை: எதிர்பார்ப்பு!

ஓவியம்; அரஸ்
ஓவியம்; அரஸ்

-உதாதிபன்

“ஏங்க... இன்னும் அவங்க நம்ம பின்னாடியே வர்றாங்க?" என்றாள் யமுனா, தன்னுடைய தோளை வளைத்து அணைத்திருந்த கணேஷிடம். இருவரும் தேனிலவுத் தம்பதிகள்.

கணேஷ் திரும்பிப் பார்த்தான். ஒரே மாதிரியான ஸ்டோன்வாஷ் பேண்ட்டும், டி ஷர்ட்டும் அணிந்து, வாயில் சிகரெட்டுடன் சொற்ப இடைவெளி விட்டு அந்த நான்கு பேர்.

கணேஷம், யமுனாவும் பொடானிகல் கார்டனுக்குள் நுழைந்ததிலிருந்து எங்கு போனாலும் விடாமல் வந்துகொண்டே யிருந்தார்கள். அட்டகாசமான சிரிப்பும், அருவருப்பான பேச்சும்...

''கொஞ்ச நேரம் எங்கேயாவது உட்காரலாங்க. அவங்க போகட்டும்...''

புல்வெளியின் 'மெத்'தில் ஓர் ஓரமாய் ஒரு மரத்தின் கீழே உட்கார்ந்தார்கள்.

''பசிக்குது... ஸ்நேக்ஸ் என்ன இருக்கு?" யமுனா ஹேண்ட் பேக்கிலிருந்து 'கேக்'கை எடுத்தாள்.

''நீ பாதி சாப்டுக் கொடு யமு!"

"பேசாம சாப்டுங்க. பொது இடத்தில வந்து..." என்று பிகு செய்துகொண்டே யமுனா வெட்கத்தோடு ஒரு விள்ளலைக் கடித்துவிட்டு நீட்டினாள். கணேஷ் வாயைத் திறந்து காட்டினான்.

"ச்சு... கையில வாங்கிக்குங்க."

'முடியாது' என்பது போலத் தலையாட்டினான். அவள் ஊட்டிவிட்டாள்.

"அடடா... 'கேக்'கை நாம சாப்பிட்டா எவ்வளவு நல்லாயிருக்கும்."

அதே நான்கு பேர். சற்று தள்ளி அமர்ந்திருந்தார்கள்.

"பெரிய தொந்தரவாப் போச்சி... ஸ்கவுண்ட்ரல்ஸ்" யமுனா முணுமுணுத்தாள்.

"நான் போய் என்ன, ஏதுன்னு கேட்டுட்டு வர்றேன் யமு."

"வேண்டாங்க... வீணாத் தகராறு பண்ணிக்கிட்டு. நமக்குத்தான் அசிங்கம்."

"சரி வா... வேற இடத்துக்குப் போகலாம்."

கையைத் தட்டி விட்டுக்கொண்டு எழுந்து நடந்தார்கள்.

கிளாஸ் ஹவுஸ். உள்ளே வரிசையாய்ப் பலவித நிறத்தில் மலர்கள் பூந்தொட்டிகளில் அணிவகுத்திருந்தன.

"நிறம் மாறாத பூக்கள்ல ரதி அக்னி ஹோத்ரி ஓடி வருவாளே... இந்த இடம்தான்..." கணேஷ் சொல்லிக்கொண்டிருக்க –

"சில பேர் அதே மாதிரி ஓடி வந்தா இலவசமா ஷூட்டிங் பார்க்கலாம். இல்லையாடா?"

அவர்கள் வந்துவிட்டார்கள்.

''யமு, கொஞ்சம் இரு, வர்றேன்!"

 "வேண்டாம்... விடுங்க. வெளியே போயிடலாம்" என்றாள் யமுனா. வெளியே வந்தார்கள்.

"உன்னாலதான் கம்முனு விட்டுட்டேன். இல்லேன்னா ரெண்டுல ஒண்ணு பார்த்திருப்பேன்!" சொல்லியவாறே கணேஷ் மீண்டும் யமுனாவின் தோளை அணைத்துக்கொண்டான்.

கல்லாகிப் போன மரம். ரோஸ் கார்டன், புல்லில் வடிவமைத்த பசுமையான தஞ்சைக் கோவில் என வரிசையாய்ப் பார்த்து ரசித்தார்கள்.

"எக்ஸ்கியூஸ் மீ!''

கணேஷ் திரும்பினான். பின்னால் மற்றொரு இளஞ்ஜோடி.

''உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா ஒரு சின்ன உதவி பண்ணணும். நாங்க ரெண்டு பேரும் இங்க நிக்கறோம். 'ஸ்நாப்' ஒண்ணு எடுக்கணும்..." என்றான் அந்த இளைஞன்.

"நோ ப்ராப்ளம்!" என்ற கணேஷ் கேமராவை வாங்கிக்கொண்டான்.

இதையும் படியுங்கள்:
முழு மனதோடு செய்யும் எந்த செயலும் வெற்றியைத் தரும்!
ஓவியம்; அரஸ்

"ஃபுல் சைஸ்" என்று சொல்லிவிட்டு - இளைஞன் தன் மனைவியின் இடுப்பை வளைத்துத் தோளில் முகம் சாய்த்து 'போஸ்' கொடுத்தான்.

"ஸ்மைல்... ஒன்...டூ...த்ரீ...!

க்ளிக்!

''நாமும் போட்டோ எடுத்துக்கலாமாடா?"

"எடுத்துக்கலாம். பக்கத்தில நிக்க துணை யாரும் இல்லையே..."

"இதில யாராவது ஒருத்தரைக் கேட்டா ஒத்துக்க மாட்டேன்னா சொல்லப் போறாங்க!''

மறுபடியும் வம்புக் கும்பல்!

அதைக் கேட்டு இளைஞனின் முகம் கோபத்தில் சிவந்தது. வேகமாக அவர்களை நோக்கிச் சென்றான். அவன் மனைவி ஓடி வந்து கையைப் பற்றித் தடுத்தாள்.

"வேண்டாங்க..."

"நோ... இந்த மாதிரி ஆளுங்களை யெல்லாம் சும்மா விடககூடாது..."

"ப்ளீஸ்...!” மனைவி மறுப்பதைப் பொருட்படுத்தாமல் கையை உதறிவிட்டு நால்வரையும் நெருங்கி, "என்ன மிஸ்டர் நினைச்சிக்கிட்டிருக்கீங்க... உடம்பு எப்படியிருக்கு?" என்றான் கோபமான குரலில்.

"நாங்க பாட்டுக்கு வேற யாரைப் பத்தியோ பேசிக்கிட்டிருக்கோம். உங்களுக்கேன் கோபம் வருது... ?" என்று வீறாப்பாய்ப் பேசினவனின் சட்டையைக் கொத்தாய்ப் பற்றினான் இளைஞன்.

'சட்'டென்று அவர்களின் முகத்தில் பய ரேகை படர்ந்தது. தண்ணீர் பட்ட நெருப்பாய்த் தணிந்தார்கள்.

இதையும் படியுங்கள்:
எண்ணங்கள் மூலம் வாழ்வில் ஏற்றம் பெறுவது எப்படி?
ஓவியம்; அரஸ்

"சார்... ஏதோ ஜாலியா தமாஷ் பண்ணினோம். இதைப் போய் பெரிசா எடுத்துக்கிட்டு... வேணும்னா மன்னிப்புக் கேட்டுக்கறோம் சார்...." என்றார்கள். இப்பொழுது குரலின் தொனியே மாறி இருந்தது.

"இன்னொரு தடவை இதுமாதிரி நடந்துக்கிட்டீங்க... அப்புறம் என் கைதான் பேசும்... கெட் லாஸ்ட்!"

மறு பேச்சின்றி அமைதியாக அகன்றார்கள்.

இளைஞன் அலட்சியமாக வந்து, கணேஷிடமிருந்து கேமராவை வாங்கிக்கொண்டு, "தேங்க்யூ வெரி மச்! ஸீயு...." என்று புன்னகையுடன் சொல்லிவிட்டுத் தனது மனைவி யருகே சென்றான்.

''வெல்டன்! நீங்க போட்ட போடுல பயந்து கப்சிப்னு போயிட்டாங்களே...?" என அவள் அவன் கையைப் பற்றிக்கொண்டாள். முகத்தில் பெருமிதம் வழிந்தது.

"லெட்ஸ் கோ!"

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த கணேஷ், "முதல்ல போகாதீங்கன்னு தடுத்த அதே பொண்ணு இப்ப பாராட்டுறாளே!" என்றான் ஆச்சரியமாய்.

"வெளிப்படையாத் தடுத்தாலும் உள்ளூர கணவரோட தைரியத்தையும், கம்பீரமான செய்கையையும் பார்த்து ரசிக்கணுங்கிற எதிர்பார்ப்பு இருந்திருக்கும் அந்தப் பொண்ணு மனசில!" என்றாள் யமுனா.

"உனக்கெப்படித் தெரியும்?"

''எனக்குள்ளேயும் அப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருக்குங்க..." இதை யமுனா வெளியே சொல்லவில்லை!

பின்குறிப்பு:-

கல்கி 08 நவம்பர்  1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com