
-ரிஷபன்
பூர்ணிமா தூங்கிவிட்டது. தொண தொணவென்று கேள்விகள். பதில் தெரிந்த, தெரியாத, சொல்ல முடியாத ரகக் கேள்விகள்.
''பாத்ரூம் போயிட்டியா" என்றேன் பேச்சை திசை திருப்ப.
"இப்பதானே போனேன்... நீதானே பேஸ்ட் கொடுத்தே . நைட்லயும் பிரஷ் பண்ணிட்டு படுக்கணும்..."
"ஆ..மா. அப்பாக்கு மறந்து போச்சு."
"கலர் பாக்ஸ் மறந்துராதே.'"
"என்ன...?"
''பார்த்தியா. எங்க மிஸ் திட்டுவாங்க. கிளீன் அண்ட் கிரீன் இண்டியா வரையணும்... கலர் பாக்ஸ் வாங்கித்தான்னு சொன்னேனே...''
''ஓ... அதுவா... நிச்சயமா வாங்கிண்டு வரேன். நீ இப்ப தூங்கு. மணி பத்தாச்சு..."
"இல்லே... நைன் ஃபார்ட்டிதான்..."
கடவுளே... இவளுக்குத் தூக்கமே வராதா. அலுப்பு தட்டாதா. கண் சொருகாதா...
"அப்பா..."
''....................''
''எ...என்ன"
"தூங்கிட்டியா."
"இல்லம்மா..."
"அம்மா ரொம்ப அழகாப்பா..."
சட்டென்று வானில் மின்னல். கண்களை மூடிக்கொள்வதற்குள் பளீரிட்ட மின்னல். அதன் பிரகாசம். அதிர்ச்சி...
''எ...ன்ன''
"அம்மா... ரொம்ப... அழகா."
"எதுக்கு கேட்கறே"
''சொல்லு...''
"எதுக்குன்னு சொல்லேன்."
"எதிர்வீட்டுப் பாட்டி சொன்னாங்க. நான் அம்மாவைக் கொண்டிருக்கேனாம்... ரொம்ப அழகாம். ஒருதடவை சொன்னாலே புரிஞ்சுக்கிறேனாம்."
"நீ இப்பத் தூங்கப் போறியா... இல்லியா...''
''சரிப்பா... ''
பூர்ணீமா திரும்பிப் படுத்துக்கொண்டது. மூடிய கண்கள் படபடத்தன. முதுகில் தட்ட முயன்றவனை தட்டிவிட்டாள்.