
-பாரதி
"ஐயா இப்படி திடீர்னு போயிட்டாரே..."
வெளியே பண்ணையாட்கள் திமுதிமுவெனக் குழுமிவிட்டார்கள்.
தலைமாட்டில் உட்கார்ந்திருந்த கனகம் நரைத்த முன்முடியை ஒதுக்கிக்கொள்கிறாள். நெடிய உருவமாய் கண் மூடிக்கிடக்கிறார் ராஜாங்கம். இனி இவளை உருட்டு விழியாலும் உறுமலாலும் அச்சுறுத்த மாட்டார்
தீனமான அழுகுரல் ஒன்று தனியாக கேட்டது. வராந்தாவின் மூலையில் குன்றிப்போய் உட்கார்ந்திருந்த உருவம் கண்ணில் பட்டது.
லட்சுமியா அது? கண் சுருக்கிப் பார்க்கிறாள் கனகம். லட்சுமியேதான் பார்த்துப் பல வருஷமாச்சு. உழைப்பிலே கடைந்தெடுத்த உருவமாய் எப்படி இருப்பாள்?
ராஜாங்கம் ஊரில் இல்லாத ஒரு நாளில் பண்ணையாட்கள் கூலிவாங்க வீட்டுக்கே வந்தபோதுதான் கனகம் அவளைப் பார்த்தாள்.
வரிசையில் தன் முறைக்காகக் காத்திருந்தவள், தடாலென் இவள் காலில் விழுந்து, "அம்மா என்னை மன்னிச்சுக்கங்கம்மா" என்று கதறிய விநாடியில் எல்லாம் புரிந்துபோயிற்று.