-கிருஷ்ணா
"சரியான பயந்தாங்குளி!"
ஜானகி குபுக்கென்று சிரித்தாள். அவள் சுபாவமே அப்படித்தான். எல்லாவற்றையுமே எளிதாக எடுத்துக் கொள்ளும் மனசு. அவள் என் மனைவியானது அதிர்ஷ்டம்தான் - நிச்சயமாய்!
"என்ன ரொம்பத்தான் சிரிக்கறே?"
''உங்க மீசையைப் பார்த்துத்தான்."
"ஏன்?"
செல்லமாய் இழுத்துத் திருகினாள். செல்லமானாலும் வலிக்கத்தானே செய்யும்.
"ஸ்! பொது இடம்" என்றேன் வலியை மாற்றி எச்சரிப்பாய்.
''இருக்கட்டுமே. என் புருஷன்! மீசையைப் பிடிச்சு இழுப்பேன்... அப்புறம் ம்ம்.."
வார்த்தை வராமல் தடுமாறினாள். அதைக் கண்டு என்னில் புன்னகை.
''ஆமா. இங்க சிரிச்சு என்ன பிரயோஜனம். பயந்தாங்குளி!"
"ஏய்...!"
சற்று நேரம் மௌனமாய் காற்றை ரசித்தோம். காவிரிக் கரையின் சுகமான காற்று கோடை வெயிலுக்கு இதமாய் இருந்தது. அங்கங்கு சிறு கால்வாய்போல பிரிந்து தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளை வெளேர் மணல். தலையில் முண்டாசும், இடுப்பில் வேட்டியுமாய் நாலு இளைஞர்கள் எங்களைக் கடந்து சென்றனர். உடம்போடு ஒட்டிய
ஈரப் புடைவையுடன் சரட், சரட் என்று ஒரு பெண் குளித்து முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தது.
"இவளை மாதிரி இருப்பாளா?" - திடீரென்று கேட்டாள்.
எந்த அழகான பெண்ணைப் பார்த்தாலும் ஜானகியிடமிருந்து வெளிப்படும் கேள்வி.
எல்லா பெண்களுமே அழகுதான். அதை அறிந்து ரசிப்பதற்கு ரசனை வேண்டும். இவள் மசாஜ் செய்து நீவிவிட்ட ரேஸ் குதிரைபோல இருந்தாள். அதற்குமேல் அந்தப் பெண்ணை விமர்சிப்பது அநாகரிகம்.
"இல்லை ஜானு. இவளும் அழகுதான். ஆனால் அந்தப் பெண் தனி."
ஜானகியிடமிருந்து மீண்டும் சிரிப்பு.
"ஏய்…!"
"உங்க அப்பாவிடம் என்ன சொன்னீங்க?"
"எதைப் பற்றி?"
"அந்தப் பொண்ணைப் பார்க்கப் போயிட்டு வந்தப்புறம்?"
"பயமாயிருக்குப்பான்னேன்."
"ஏன் பயம்?''
ஜானகிக்கு அலுக்காத பேச்சு இது. நான் பெண் பார்க்கப் போன அந்தக் கதையை எத்தனையோ முறை சொல்லியாயிற்று.
"அவ அழகு என்னைத் தாழ்வுணர்ச்சி கொள்ள வைத்தது. இந்தப் பொண்ணைக் கட்டிண்டு ஆள முடியுமான்னு என் மேலேயே சந்தேகம்..."
"அவ என்ன தேசமா ஆளுவதற்கு? பெண்கள்னா அஃறிணைப் பொருளா?"
"அது என்னமோ தெரியாது ஜானு. என் மனசுல அவளைக் கண்டதும் பிரமிப்பு, பரவசம், பயம், இவளுக்கு என்னை விட நல்ல, பர்சனாலிடியான புருஷன் அமையட்டும்னு வேண்டுதல், நான் அவளுக்கு முன்னாடி ஒண்ணுமேயில்லாததுபோல உணர்வு.''
"அவ்வளவு அழகா அவ?"
"நீயும் அழகுதான் ஜானகி. தென்றல் மாதிரியான குளிர்ச்சி உன் கண்ணுல, செயலிலே."
"அவ எப்படி? தென்றலா, சூறாவளியா?"
ஜானகி கேட்டதும், அவளின் உருவம் எனக்குள் விசுவரூபமெடுத்தது.
அதோ நடந்து வருகிறாள். குனிந்த தலையில் நெற்றிச் சுட்டி முன்புறம் ஆடுகிறது. அரக்குக் கலர் பட்டுப் புடைவை. இதோ, இந்த காவிரியின் வெண்மணல் நிறம். ஒருமுறை நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். பார்வையா அது, அப்பப்பா. இப்போதும் மெய்சிலிர்க்கிறது.
"தெய்வீக அழகு அது ஜானகி. அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் நிற்கும்போது, அம்பிகையின் தாழம்பூ பின்னல் பாவாடையும், காதில் பளிச்சிடும் தாடங்கமும், முகத்தில் வழியும் அருளும், அன்பும்... நம்ம மனசுல உள்ள நல்லது கெட்டதையெல்லாம் துடைச்சு எடுத்துட்டு பரப்பிரம்ம நிலையைத் தருமில்லையா...? அதுபோல உணர்ந்தேன் ஜானகி."
கனவிலிருந்து பேசுவதுபோல சுற்றுப்புறம் மறந்து, லயித்துப் பேசினேன்.
"ஒரு பெண்ணைப் பார்த்ததும் காதலும், காமமும் வந்தால், அவளோட குடும்பம் நடத்த முடியும். இந்த மாதிரி பிரமிப்பும் பக்தியும் வந்தா.. அவளை நான் கணவன்ற உரிமையோட, தொடவோ, பேசவோ நிச்சயம் முடியாது."
"அப்புறம் அவளை நீங்க பார்க்கவே இல்லையா?"
"இல்லை. பிரயத்தனமும் படலே."
"அவங்க வீட்டுலே நீங்க சொன்ன காரணம் தெரிஞ்சு பைத்தியம்னு சொன்னாங்களாமே?"
"போகட்டுமே" என்று தோளைக் குலுக்கிய என் கண்ணில் பட்டாள் 'அவள்'.
"ஜானு!"
இத்தனை உணர்ச்சிவசப்பட்டு நான் கத்தியதேயில்லை.
என் பார்வை சென்ற திசையில் நோக்கிய ஜானகியும் ஸ்தம்பித்தாள்.
இருவரும் சட்டென எழுந்துவிட்டோம். ஆறேழு பேர் கூட்டமாய் வந்தனர். அவள் கழுத்தில் புதுத் தாலி. மஞ்சள் நிறம் பளிச்சிட்டது. அருகில் உரிமையாய் வருவது... மனசு துணுக்கென்றது.
"கல்யாணம் ஆனதும், காவிரியிலே ஜோடியாய் முழுகிட்டுக் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய வைக்கறதாய் வேண்டுதல். எத்தனை வருஷமாய்த் தட்டிக்கிட்டே போச்சு! இந்த ஊர் பெருமாளுக்கு வேண்டிக்கிட்டதும், உடனே வரன் தகைஞ்சு வந்துடுத்து. எல்லாம் அவன் செயல்!"
பெண்ணின் அப்பா, மற்றொருவரிடம் பேசிக்கொண்டே கடந்தார். சம்பந்தி மாமாவோ?
அவள் அருகில் நடந்தவன்... கருப்பாய், குண்டாய், தொப்பையுடன், வழுக்கைத் தலை வேறு! இவனா? இவனா? அவளது கணவன். குடிப்பானோ? தொப்பையைப் பார்த்தால் சந்தேகமாயிருக்கிறது. நடையைப் பார் திங்கு, திங்கென்று, பூமி அதிர, அலட்சியமாய்...
''நீங்க சொன்ன மாதிரியே அழகுதான் அவ."
ஜானகி கிசுகிசுத்தாள்.
ஆனால் எனக்குள் பரபரவென்று குற்ற உணர்ச்சி மனசு முழுதும் பரவி, கனமாக்கி, வலியைத் தர ஆரம்பித்தது.
''வாடி சீக்கிரம். என்ன அன்னநடை போடறே? வெள்ளைத் தோலுன்னு திமிரா?"
ஆங்காரமாய் வெளிப்பட்ட வார்த்தைகளினால் சட்டென சங்கடமான அமைதி. அவள் தலை மேலும் குனிய, முகத்தின் உணர்ச்சிக்குத் திரை. புழுதியில் எறியப்பட்ட தெய்வச் சிலை.
இவ்வளவு சீக்கிரமாய்ப் புதுப் பெண்டாட்டியை அதட்டுபவன் இவனாய்த்தான் இருக்கும். கடவுளே, இவள் எப்படி இவனுடன் காலம் முழுதும் குடும்பம் நடத்தப் போகிறாள்?
எதேச்சையாய் நிமிர்ந்தவளின் பார்வை ஓட்டம், என் மீது பட்டு நிலைக்க... அடையாளம் கண்டுவிட்டாளோ? இருக்கும்!
அந்தப் பார்வையின் ஊடுறுவலும், அதில் தெறித்த ரணமும்... அம்மம்மா!
ஊஹும்! என்னால் மறக்க முடியாது இனி. சாகும் வரை என்னை உறுத்தப் போவது நிச்சயம்.
பின்குறிப்பு:-
கல்கி 04 ஜூன் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்