சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

ஓவியம்: பிரபு ராம்
ஓவியம்: பிரபு ராம்

-வி.எஸ். நடராஜன்

ஜெர்னலிஸ்ட் கோபிநாத் தன் கேமரா, நோட் புத்தகம் இத்யாதி சாமான்களுடன் புறப்பட்டார். அவருடைய பத்திரிகை அலுவலகத்திலிருந்து செய்தி வந்திருந்தது. அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தை சுவரேஜ் செய்து அந்த வாரம் பத்திரிகையில் ஸ்பெஷல் செய்தி வெளியிட புகைப்படங்களுடன் விவரங்கள் சேகரித்து அனுப்பும்படி ஆணை.

"நிர்லு, போயிட்டு இரண்டு நாள்லே வந்துடறேன். பாத்துக்கோ” என்று மனைவியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.

"ஆமா, இரண்டு நாளுன்னு சொல்லுவே, ஒரு வாரமோ பத்து நாளோ யார் கண்டா!? போ போயிட்டு வா, வரவரைக்கும் நான் தனியா அவதிப்பட்டுண்டு இருக்கேன்! வழக்கம்போல எதையாவது தொலைச்சுட்டு வந்து நிக்காதே! உடம்பை பாத்துக்க” என்று வழியனுப்பி வைத்தாள் நிர்மலா.

இந்த முறை இரண்டு நாளிலேயே வந்துவிட்டான் கோபி. முக்கியமான இடங்களைப் புகைப்படங்கள் எடுத்து அதைப்பற்றிய விவரங்கள் சேகரித்து ஆராய்ச்சிக் கூடத்தின் டைரக்டரிடம் இன்டர்வ்யூ நடத்தி எல்லா விவரங்களையும் தலைமையகத்திற்கு அனுப்பிவிட்டு வந்திருந்தான் கோபி.

"நிர்லு அங்கே ஆராய்ச்சிக்கூடத்திலே அகழ்ந்து எடுத்த பொருள்களையெல்லாம் பார்த்தா நம் தமிழ்மக்கள் எவ்வளவு மேன்மையா வாழ்ந்திருக்காங்க! பழங்கால ஆதி நாகரீகம் நம்ம நாகரீகம்தான் என்பதற்கு அறியசான்று இதைவிட வேறு இல்லை. ஒரு இடத்திலே பத்து பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க இரண்டு பேருடைய மனித எலும்புக்கூடு கிடைச்சுருக்கு. போட்டோ வச்சுருந்தாங்க. அதைப்பத்தி ஆர்ட்டிகிள் ஒண்ணு அனுப்பியிருக்கேன். பத்திரிகை ஆசிரியர் நிறையப் புகழ்ந்து மெஸேஜ் அனுப்பியிருக்கார்” தன்னைத்தானே புகழ்த்து கொண்டிருந்தான் கோபி.

“ஏன் வேறே எலும்புக்கூடு ஒண்ணும் கிடைக்கலையா?"

என்ன இவள் கேள்வியெல்லாம் கேட்கிறாள் என்று நினைத்தான். தன்னை புகழ்ந்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே என்று ஒருகுறை.

"ஹிஹி... ஆமாம் வேறே ஒண்ணும் கிடைச்சதா தெரியலை. அதைப்பத்தி ஒண்ணும் அவங்க விவரம் சொல்லவில்லை."

"நானும் செய்திகளில் புகைப்படம் பார்த்தேன். இரண்டு சிறுவர்கள் எலும்புக்கூடு குறுக்கும் நெடுக்குமாகக் கிடந்தது பார்த்தேன். அப்படின்னா அவர்கள் இறந்த பிறகு முறையாக புதைக்கப்படவில்லை. ஏதோ ஒரு ஆபத்தில் சிக்கி தப்பிக்க முடியாமல் விழுந்து இறந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தப்பி ஓடியிருக்கலாம். அதனால்தான் வேறு எலும்புக்கூடு ஒன்றும் கிடைக்கவில்லை.

ஏதோ இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். இதைப்பற்றி ஏதும் செவிவழி செய்திகள் உண்டா; அந்தக் காலகட்டத்தில் ஏதும் இயற்கை பேரிடர்கள் நடந்திருக்கிறதா...கல்வெட்டுக்கள். இலக்கியங்கள், சரித்திரப் புராணச் சான்றுகள் ஏதும் உண்டா? எப்படி அந்த இடம் இப்படி அழிந்து புதையுண்டது என்ற கோணத்தில் ஆய்வு செய்து ஒரு விழிப்புணர்வு ஏற்படும்படி நீங்கள் எழுதி அனுப்பியிருக்கலாமே. சட்டி கிடைச்சது பானை கிடைச்சது மூவாயிரம் வருஷத்து பாரம்பரியம் என்று சவடால் அடிச்சுண்ட்டு இருக்கே" என்றாள்.

கோபி அசடு வழிய முழித்துக்கொண்டிருந்தான் “இவள் என்ன எல்லாம் தெரிந்ததுபோல் கேள்வியெல்லாம் கேட்கிறாள். அப்படியெல்லாம் எழுதினால் யார் கண்டுகொள்வார்கள்?" என்று மௌனமாக இருந்தான்.

நிர்மலா தொடர்ந்தாள், "சரி அதை விடு. என் பேனாவை இரண்டு நாளா தேடிட்டு இருக்கேன். நீ எடுத்துண்டு போயீட்டியா?"

"ஆமா நிர்லு ரொம்ப ராசியான பேனா. குறிப்புகள் சேகரிக்க சௌகரியமா இருந்தது. இதோ கொண்டு வரேன்" என்று கூறிவிட்டு சென்றவன் பிறகு ஆளைக் காணவில்லை. அவனை தேடிக்கொண்டு அவன் அறைக்கு சென்றாள் நிர்மலா. அங்கே அவன் அவளைப் பார்த்ததும் திருதிருவென்று முழித்தான்.

இதையும் படியுங்கள்:
நமது எண்ணங்களை சீர்படுத்துவது எப்படி.?
ஓவியம்: பிரபு ராம்

"என்ன ஆச்சு; பேனா எங்கே?” என்று கேட்டாள்.

"ஹிஹி... பேனா இங்கதான் சட்டப்பையிலே வச்சிருந்தேன். ஹிஹி...காணோம்... இங்கேதான் எங்கேயாவது கைமறதியா வச்சிருப்பேன். தேடி எடுத்துத்தரேன்” என்று சொல்லி விழித்தான்

"‘ம்’ அதையும் தொலைச்சுட்டு வந்திட்டீயா!? காஸ்ட்லி பேனா; எங்கப்பா எனக்குப் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தது. என் பொருள்களை எடுத்துக்கொண்டு போனால் பத்திரமா கொண்டு வர துப்பு இல்லை. என்னைக் கேட்காமே ஏன் எடுத்துண்டு போனே?  எங்க அப்பா எனக்கு ஆசையா வாங்கிக் கொடுத்தது; அதை இப்படி தொலைச்சுட்டு வந்து நிக்கிறியே!! என்னுடைய சாமான்களை உரிமையா எடுத்துண்டு போய் தொலைக்கறதே உன் வழக்கமா போச்சு" அழுது கொண்டே அவனை வறுத்து எடுத்தாள் நிர்லு.

முனுசாமிக்கு நாலு நாளா வருமானம் இல்லை. சாப்பாட்டுக்கே கஷ்டம். இந்த நாலு நாட்களாக அகழ்வாயும் இடத்தில் நல்ல மழை. அகழ்வாராய்ச்சி பணி நடக்கவில்லை. இன்று மழை நின்றதும் பணி தொடங்கியது. தினக்கூலிக்கு வேலை செய்யும் முனுசாமி இன்று வேலை தொடங்கினான். மழையில் சரிந்து விழுந்திருந்த ஈரமண்ணையெல்லாம் வாரி கரையில் போட்டுவிட்டு மழைக்கு முன் விட்டு சென்ற தளத்திலிருந்து தோண்ட ஆரம்பித்தான். கொத்துக் கரண்டி சிறிய களைக்கொட்டு, தோசைத்திருப்பி அகழ்வாராய்ச்சிக்கான பிரத்யேக ஆயுதங்கள் ஆகியவைகளைக் கொண்டு மெல்ல தோண்ட ஆரம்பித்தான். மழையினால் நனைந்த ஈரமண்ணை சுரண்டி யெடுப்பது சுலபமாக இருந்தது.

கொஞ்சம் தோண்டியதும் அவன் கையில் ஏதோ தட்டுப்பட்டது. அதை மெள்ள எடுத்தான். ஒரு சாண் நீளத்திற்கு தடிமனான ஏதோ ஒரு பொருள்?. உடனே தனது முண்டாசை அவிழ்த்து அதில் ஒட்டிக்கொண்டிருந்த ஈரமண்ணை துடைத்துப் பார்த்ததில் ஏதோ தங்கத்தால் ஆனதுபோல பளபளப்பாக இருந்தது. அவன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அதை அவசரமாக தன்மடியில் மறைத்துக்கொள்ள முயன்றான். எப்படியோ அதைக் கண்டுகொண்ட சூபர்வைசர் “என்ன முனுசாமி அது என்ன புதுசா கிடைச்சிருக்கு கொண்டா” என்று கேட்டுவிட்டார். முனுசாமி,  “ஹிஹி சார் வந்துட்டீங்களா? ஓங்ககிட்டே கொடுக்கலாம்னு எடுத்து வச்சேன்; இந்தாங்க” என்று எடுத்துக் கொடுத்தான். தன் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று நொந்துகொண்டான். வாங்கிக்கொண்ட சூபர்வைசர் சவரிமுத்து அதை மெள்ள தனது பேண்ட் பாக்கட்டில் உள்ளே தள்ளினார்.

ஓவியம்: பிரபு ராம்
ஓவியம்: பிரபு ராம்

"குட்மார்னிங்க் சவரிமுத்து; இன்னிக்கு புதுசா காலையிலேயே ஏதோ கிடைச்சுட்டாப்போல இருக்கு! எங்கே காண்பிங்க பாக்கலாம்!?" என்று கேட்டுக்கொண்டே சூப்பரின்டென்ட் சுந்தரமூர்த்தி அவர் தோளில் பின்னாலிருந்து கைவைத்தார்.

“அடப்பாவி, காலையிலேயே வந்துட்டியா" என்று நொந்துகொண்டு “ஹிஹி...குட்மார்னிங்க் சார் ஏதோ புதுசா இருக்கு; ஆபீசிலே கொண்டுவந்து கொடுக்கலம்னு இருந்தேன்." என்று அதை எடுத்து நீட்டினார்.

அதை வாங்கிக்கொண்ட சூப்பரின்டென்ட் தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டார். அந்தச் சமயம் வேறு பத்திரிக்கை நிருபர் ஒருவர் எல்லாவற்றையும் வீடியோ எடுத்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.

"என்ன சார் புதுசா துசா ஏதோ இன்னிக்கு கிடைச்சிருக்கு போல இருக்கு? காண்பியுங்க பார்ப்போம்." என்று கேட்டுக்கொண்டு வந்து தனது காமிராவில் அவரை வீடியோ எடுத்துவிட்டார்.

ஹிஹி என்று பல் இளித்துக்கொண்டே தன் சட்டப்பையிலிருந்து அந்த பொருளை எடுத்துக் காண்பித்தார் சூப்பரின்டென்ட்.

"ஹா சூபர்!! இன்னிக்கு சூப்பர் நியூஸ், வாங்க ஆபீஸ் போய் ஆராய்ந்து ரிபோர்ட் அனுப்பலாம் என்று சூப்பரின்டென்டை அழைத்துக்கொண்டு கிளம்பினார் பத்திரிகை நிருபர்.

சூபர்வைசரும் அவர் பின்னால் தொடர்ந்தார்.

அவர்கள் போனதும் முனுசாமி இவர்களைத் திட்டித்தீர்த்தான். "பாவி பாவி மனுஷங்கள் கழுகுபோல  பாத்துக்கிட்டே சுத்திசுத்தி வரானுக...நாலு நாளா வேலையில்லை இன்னைக்கு நாலு காசு கிடைக்க இருந்தது போச்சு, படுபாவிங்க” என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

டி.வி.யில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார் செய்தியாளர். "இப்பொழுது நடக்கும் அகழ் ஆய்வில் ஓர் அதிசயம். ஒர் அற்புதக் கண்டுபிடிப்பு, ஒரு சாண் நீளமுள்ள உருளையான ஒரு பொருள் இன்று கிடைத்துள்ளது. அது பாதிநீளம் தங்கம் போன்ற ஒரு பொருளாலும் மறுபாதி விவரிக்க இயலாத வளமையான நிறத்திலான ஒரு பொருளால் ஆனதாகவும் காணப்படுகிறது. ஏதோ முன்னோர்கள் உபயோகித்த கருவியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது நமது முன்னோர்களின் அறிவு கூர்மையையும் அவர்கள் தொழில் நுட்ப நுண்ணறிவும் உள்ளவர்கள் என்பதையும் பறைசாற்றுகிறது. கார்பன் டேடிங்க் செய்ததில் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று தெரிய வருகிறது.  ஆனால் அது இன்றும் புதுமையாகக் காணப்படுவது மிகுந்த அதிசயமாக உள்ளது. இதைப்பற்றிய ஆய்வு இன்னும் முடிவடையவில்லை. ஆய்வின் முடிவில் இதைப்பற்றிய உண்மைகள் வெளிவரலாம் என்று அகழ்வாராய்ச்சி அறிஞர்கள் கருதுகிறார்கள்” என்று வாசித்து முடித்தார்.

டி.வி.யில் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த நிர்மலா "ஐயோ என்' பேனா; என் பேனா" என்று அலறியது யார் காதிலும் விழவில்லை, ஜெர்னலிஸ்ட் கோபிநாத்’ உட்பட...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com