அகிலா, அனந்தன் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர் அந்த இல்லத்திற்கு. கடந்த மூன்று மாதங்களில் இது அவர்களது ஐந்தாவது விசிட். இதுவே கடைசி விசிட்டாகக்கூட இருக்க அதிகமான வாய்ப்பு உண்டு. அவர்கள் அங்கு போய் சேர்வதற்குள் அவர்கள் இருவரைப் பற்றி ஓர் இன்ட்ரோ.
இருவரும் வளர்ந்தது அனாதை ஆசிரமத்தில். படித்து இன்று நல்ல வேலை, நல்ல நிலையில் இருக்கின்றனர். ஒரு தனி காலனியில் ரோ ஹவுஸ் வாங்கியுள்ளனர் சமீபத்தில். நகரத்திலிருந்து சற்று தள்ளித்தான். ஆனாலும் டெவலப் ஆகிவரும் இடம். அவர்கள் இருக்கும் காம்பவுண்டில் (கேட்டேட் கம்யூனிட்டி) 36 ரோ ஹவுசுக்கள் உள்ளன. இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அவர்கள் இருவர் மட்டும்தான். இருவருக்கும் குழந்தை என்றால் உயிர்.
இப்பொழுது அந்த இல்லத்திலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தனர் மனதில் மகிழ்ச்சியுடனும் முகத்தில் புன்னகையுடனும். போகும்பொழுது காரில் அனந்தன் ஓட்டும்பொழுது பக்கத்தில் முன்சீட்டில் உட்கார்ந்து சென்ற அகிலா திரும்பி வரும்பொழுது பின்சீட்டில் அமர்ந்துகொண்டு பயணிக்கிறாள். இதோ அவர்கள் ரோ ஹவுசிற்கு முன்னால் வண்டி நிற்கிறது.
அகிலா, காரில் இருந்து இறங்கி சென்று, வீட்டு கதவைத் திறந்துவிட்டு வந்து, "பத்திரமாக இறங்குங்க..!" என்றாள். இருவராகச் சென்றவர்கள், நால்வராகத் திரும்புகிறார்கள்.
மூன்று மாதங்களுக்கு முன்பு மாறுதலுக்காக, அந்த இல்லத்திற்கு விஜயம் செய்தனர், இருவரும். அவர்கள் முதலில் சந்தித்தது, இந்தத் தம்பதியினரைதான். பார்த்த உடனே இந்த இளம் தம்பதியினருக்கு
(அகிலா, அனந்தன்) அவர்களைப் பிடித்துப்போய்விட்டது. அந்தத் தம்பதியினருக்கும் அவ்வாறே.
இவர்கள் கைகளை கூப்பி வணங்கி தங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளும்பொழுதே, அவர்கள் இருவரும் வாய் நிறைய பாசத்தோடு, மனமார வாழ்த்தினர், "உங்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்..!" என்று.
அவர்கள், இவர்களிடம் எவ்வளவு குழந்தைகள்? எப்பொழுது திருமணம் ஆயிற்று? போன்ற தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்கவேயில்லை. உண்மையயான அன்புடன் உரையாடினார்கள். அந்தத் தம்பதியினரின் செயல்பாடும், அப்ரோச்சும் இந்த இளம் தம்பதியினரை மிகவும் வெகுவாக கவர்ந்தன.
அந்த முதல் விசிட் முடிந்து திரும்பும்பொழது இருவரும் இவ்வளவு நாட்கள் சந்திக்காத அனுபவத்தை உணர்ந்தனர். அடுத்த மூன்று விசிட்டுக்கள் அவர்களுடைய பந்தத்தைப் பலப்படுத்தியது.
அகிலாவும், அனந்தனும் தனித்தனியாகச் சிந்தித்தனர். கூட்டாகச் செயல்படுத்தினர். அவ்வளவு சுலபமாக இல்லை. வெற்றி அடைந்து, இப்பொழுது அந்த இருவரையும் இல்லத்திலிருந்து காலி செய்ய வைத்து தங்களுடனேயே வசிக்க அழைத்தும் வந்துவிட்டனர்.
யார் கூறியது, மழலைகளை மட்டும்தான் தத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று.
அந்த வயதான தம்பதிகள் வந்த மூன்று வாரங்களில் அந்த நல்ல செய்தி வந்தது. அதுதான் அகிலா, அனந்தன் ஜோடிக்கு வாரிசு வரப்போகின்றது என்பதுதான். அகிலா, அனந்தனுடன் அந்தத் தம்பதியினரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர் என்று கூறவும் வேண்டுமா..!