சிறுகதை – அனுக்கிரகம்!

ஓவியம்; ராமு
ஓவியம்; ராமு

-ரிஷபன்

வில்லுப்பட்டி எட்டு கி.மீ. என்ற போர்டைப் பார்த்ததுமே அம்மாவுக்கு உடம்பில் ஒரு சிலிர்ப்புப் பரவி, சட்டென்று குலுக்கிக்கொண்டாள்.

கிராமத்து ரோட்டுக்கே உரிய புழுதி. நெல் வாசனை, வேலி கட்டிய வீடுகள். எங்கள் வேனை வியப்போடு பார்க்கும் பார்வைகள். உள்ளூர எங்களுக்கும் புத்துணர்ச்சி பரவியது.

இந்த இரண்டு நாட்களும் எந்தவிதப் பரபரப்பும் இல்லை. நாளைக்குக் காலையில் கோயிலில் பூஜை, அபிஷேகம். அது முடிந்து கிளம்பும்வரை இயற்கையோடு ஒன்றி,  நகரப் பரபரப்பு ஏதுமின்றி இருக்கப் போகிறோம்.

அம்மா ஏறக்குறைய சீட்டு நுனிக்கே வந்துவிட்டாள்.

"அதோ... இடது கைப் பக்கம் ரோடு சின்னதாப் பிரியுதே... அதுலதான் திரும்பணும்."

"ஒத்தையடிப் பாதை மாதிரி தெரியுதே..." என்றேன் சந்தேகமாக.

"இல்லைடா... வேன் போகலாம். போன வருஷம் போனோமே. இப்ப அகலமா ரோடு போட்டாச்சு."

பல வருஷங்களுக்கு முன் அம்மா பிறந்து வளர்ந்த ஊர். தாத்தா, பாட்டி குடும்பம் நடத்திய இடம். இன்று ‘வீடு' என்று சொல்ல முடியாதபடி பங்காளிச் சண்டையில் சிதிலமாகிப்போன மண் சுவர்கள் மட்டுமே மிச்சம். புதர் மண்டி, வீட்டு வாசலில் எப்போதோ போட்ட சிமெண்டுத் தரை மட்டும் பழைய கனவுகளின் மிச்சமாய், முன்பு வீடு இருந்ததன் அடையாளமாய் இருக்கிறது.

சாலை வளைந்து வளைந்து போனது. செம்மண் அடித்த சாலை. மழை பெய்ததில் நிறைய குழிகள். வேனைப் பார்த்துத்தான் ஓட்ட வேண்டியிருந்தது.

தூரத்தில் கோயில் கோபுரம் தெரிந்தது.

"வரதராஜா..."  என்று கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

"என்ன பாட்டி... கூப்ட்டியா..." என்றது என் மூன்று வயசு மழலை.

“இல்லைடா... இந்தப் பெருமாள் பேரைத்தான் உனக்கு வச்சிருக்கு. ரொம்ப சக்திடா.. நினைச்சது நடக்கும்.. வேண்டினது கிடைக்கும்."

அம்மாவுக்கு மறுபடியும் உடம்பு உதறியது சிலிர்ப்பில், பழைய கதைகள் மெல்ல மேலெழுந்தன மனசுக்குள்.

பூர்ணிமா பின்சீட்டில் கண்மூடி அமர்ந்திருந்தாள். கூடவே ஆறு வயது சிந்துஜாவும்.

சின்னவனுக்கு இந்தப் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அம்மாவுக்கு ரொம்பப் பிடிவாதம். பூர்ணிமாவுக்குக் கொஞ்சம் அதில் வருத்தம்தான். நாகரிகமாய் ஒரு பெயர் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள்.

அதையும் வை. ஆனா கூப்பிடறது. ஸ்கூல்ல சேர்க்க, வரதராஜன்தான்... என்றாள் அம்மா.

'விடேன்... ஏதோ பேரு அடையாளம் புரிய...' என்றேன்.

நான் அந்த மாதிரி நழுவியதிலும் பூர்ணிமாவுக்கு வருத்தம்.

இதையும் படியுங்கள்:
சிறுநீரகத்தின் ஆரோக்கியம் காக்கும் சிறுகண்பீளை மூலிகை!
ஓவியம்; ராமு

"கோயில் இப்ப பளிச்சுனு ஆயிருச்சே!" என்றேன் வியந்து.
பழைய கோயில் போலவே தோற்றமில்லை இப்போது. பணம் விளையாடியிருந்தது. தற்போதைய டிரஸ்டி குழு பூரணமாய் வசூல் செய்து ராஜகோபுரம் புதுப்பித்து, ஊஞ்சல் மண்டபம் புதிதாய்க் கட்டி... புது மடப்பள்ளி, வாகன மண்டபம், புதுத் தேர் என்று கோயிலை முழுமைப்படுத்தியிருந்தார்கள்.

இதைத் தவிர, இந்த ஊர்க்காரர்கள் வெளியூர் போய்ச் செட்டில் ஆனாலும், தவறாமல் பணம் அனுப்புகிற ஏற்பாடுகள் வேறு.

தினசரி, மாத பூஜைகளுக்கு நிதித் திட்டங்கள், அதன் வட்டி என்று கைங்கர்யம் பூர்த்தியாக நடந்திருக்கிறது. நல்லவேளை! 'அரசியல்' உள்ளே வராததால்... எந்த பிரச்னையும் இதுவரை இல்லை.

"வாங்கோ... வாங்கோ...'' என்று உற்சாக வரவேற்புக் கேட்டது.

சந்தானம்தான். ஒருவிதத்தில் எங்களுக்குத் தூரத்து உறவு. இப்போது கோயில் நிர்வாகம் இவருடைய பொறுப்பில் இருக்கிறது. எங்களின் இந்த இரண்டு நாட்கள், முழுமையான வசதியுடன் கழிய இவருடைய ஒத்தாசையும் அதிகம்

"அதே வீடுதானா..." என்றாள் பூர்ணிமா பின்னிருந்து.

பழைய ஓட்டு வீடு ஒன்றில்தான் போன வருஷம் வந்தபோது தங்கினோம்.

"இல்லை... இப்ப நம்ம சந்துரு புதுசா வீடு கட்டியிருக்கான். சாவி இவர்கிட்டதான் இருக்கு. நாம அதுலேயே தங்கிக்கலாம். பாத்ரூம் டாய்லட் எல்லாம் இருக்கு..." என்றாள் அம்மா.

இனி அம்மாவுக்கு 'எஜமானி' களை கட்டிவிடும். முன்பு தாத்தா காலத்தில் இங்கு கோலோச்சிய குடும்பம். எத்தனை கறவை மாடுகள், வயல்கள்... வேலை செய்ய ஆட்கள். எல்லாம் இழந்து, அப்பாவின் சொற்ப மாத வருமானம் - அதன் எல்லைக்குள் சிறகடிக்க வேண்டிய கட்டாயம் எல்லாம் அம்மா மீது திணிக்கப்பட்டது, கல்யாணம் ஆனதால்.

''நீ குப்பாதானே.." என்றாள் எதிர்ப்பட்ட ஒரு கிழவியிடம்.

வேனில் இருந்து இறங்கி மூன்று மணி நேர பயண அலுப்பிலிருந்து விடுபட்டுக்கொண்டிருந்தோம். சிந்துஜாவும், ராஜுவும் ஓட ஆரம்பித்தார்கள். விஞ்ஞானக் கறைகள் படியாத பிரதேசம்.

ஓவியம்; ராமு
ஓவியம்; ராமு

''ஆமாம்மா.. நல்லா இருக்கீங்களா.."

அம்மா பெருமிதமாய்த் தலையசைத்தாள் .

"உன் பேத்திய கட்டிக் கொடுத்துட்டியா?"

அம்மாவின் விசாரிப்புகளை ரசித்தபடி எதிரே தெரிந்த கோயில் குளத்தை நோக்கி நடந்தேன். கூடவே சந்தானமும்.

''இனிமே கவலையே இல்லை ஸார். வரதராஜன் ரொம்ப சக்தி. எல்லாரும் கொண்டு வந்து கொட்டறா. எல்லா உத்சவமும் பிரமாதமா நடக்கிறது. குளத்துல தெப்பம் கூட இந்த வருஷத்துலேர்ந்து நடக்கிறது.." லேசான புன்சிரிப்புடன் கேட்டபடி நடந்தேன்.

''நீங்களும் வருஷந் தவறாம வரணும்... பூர்ணமா அனுக்கிரகம் வாங்கிக்கணும்..." என்றார்.

பக்கத்தில் யாரோ அவரை அழைத்தார்கள். விடைபெற்றுப் போனார். குளத்து நீர் ஜில்லென்று என்னைத் தொட்டது. குழந்தை போல் அளைந்தேன்.

ரவு பிரசாதம் திருப்தியாக வயிற்றை நிறைக்க, திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

பூர்ணிமா உள்ளே படுத்து விட்டாள்.

குழந்தைகள் இருவரும் தினுசு தினுசான பூச்சிகளின் பறத்தலையும்.. ஏதேதோ சத்தங்களையும் வினோதமாய்ப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தன.

அம்மா என்னைப் பார்த்தாள்.

''அந்தப் பணத்தைக் கொண்டு வந்திருக்கியா...''

''ம்... நாலாயிரம்..." என்றேன்.

''என்னமோ... அஞ்ஞானம்... நாம எவ்வளவு செஞ்சாலும் போறாது. ஏதோ நம்மால முடிஞ்சது..." என்றாள்.

மாதா மாதம் என் வியாபாரத்தில் வரும் லாபத்தில் 'வரதராஜன்' ஒரு பங்கு. அம்மாவின் கட்டளை. ஒதுக்கியதை வருட இறுதியில் இந்த மாதிரி வரும்போது சமர்ப்பணம். இதுவே மூன்று வருஷமாய் நியதி.

என்னைக் கரிசனமாய்ப் பார்த்தாள்.

''படுத்துக்கோ... உனக்குச் சிரமமா இருக்கும். நீ ஒருத்தனே வேனை ஓட்டிண்டு வந்திருக்கே."

படுத்துக்கொண்டு விட்டேன். அம்மா அருகில் யார் வீட்டுக்கோ பேசப் போனாள்.

காலையில் எங்களுக்கான விசேஷ அபிஷேகம், பூஜை முடிந்துவிட்டது. நை வேத்தியம் முடியக் காத்திருந்தோம் வெளியே.

"ஏய்... நீ எலிதானே..." என்றாள் அம்மா.

எதிரே கரேலென்று ஒருத்தன். மனசின் வெண்மை பளிச்சிட, அம்மாவைப் பார்த்து வெட்கமாய்ச் சிரித்தான்

''நம்ம மருதுவோட புள்ளைதானே..."

"ஆமாம்மா..."

"ஏனோ உன் பேரே எனக்கு ஞாபகமில்லைடா. தப்பா நினைச்சுக்காதே..." என்றாள்.

என் பக்கம் திரும்பினாள்.

''சின்ன வயசுல துருதுருன்னு ஒடுவான். தாத்தா எலின்னு கூப்பிடுவா செல்லமா. அதுவே பின்னாடி பழகிப் போச்சு" என்றாள்.

"என்னடா பண்றே..." என்றாள் அவனிடம்.

"இருக்கேம்மா..."

''என்ன பண்றே... உன் தங்கை பேரு என்ன... ஆங்... பூவாயி... கட்டிக்கொடுத்துட்டியா?"

சட்டென்று எலியின் முகம் இருண்டது.

"இல்லம்மா. அய்யாவுக்குப் பின்னால் அப்புறம் சரியா... வேலை கிடைக்கலே. எதை எதையோ செஞ்சேன். இப்ப ஊர்லயும் யாரும் இல்லே. முன்னே மாதிரி பிழைப்பும் நடக்கலே."

அம்மாவுக்கும் வருத்தம் அப்பிக்கொண்டது.

"கேட்கவே கஷ்டமா இருக்குடா..."

"அத வுடுங்கம்மா... நீங்க நல்லா இருக்கீங்களா .. போன வருசம் குழந்தையா இருந்துச்சே.. அதானே..." என்றான் வரதராஜனைப் பார்த்து பிரமித்து.

"உனக்கு இப்ப வேலையே இல்லையா..." என்றாள் அம்மா மறுபடியும்.

இதையும் படியுங்கள்:
பொட்டாசியம் சத்தின் தேவையும் பயன்களும்!
ஓவியம்; ராமு

"ஏதோ ஓடுதும்மா. அப்பல்லாம் எம்மாம் சோறு தருவீங்க.. அதெல்லாம் ஒரு காலம்..."

அம்மாவுக்கு மனசுக்குள் என்னவோ நிகழ்ந்திருக்க வேண்டும். அதற்குள் எங்களைத் தரிசனத்திற்குக் கூப்பிட்டார்கள். உள்ளே போனோம்.

தீபாரத்தி முடிந்து தட்டு வரும்போது பைக்குள் கை விட்டேன். அம்மா ஏனோ என்னைப் பற்றி இழுத்தாள் லேசாக.

"என்ன?"

"வேணாம்... இரு... "

"என்ன சொல்றே...?"

“அப்புறமாச் சொல்றேன்..." என்றாள் கிசுகிசுப்பாக.

வெளியில் வந்தோம் மீண்டும்.

"யோசிச்சுப் பார்த்தேண்டா... பெருமாளுக்கு நாம எவ்வளவு வேணாச் செய்யலாம். அதுக்கு நிறைவே வராதுடா.. அவருக்கும் இப்ப நிறைய செய்யறா... அதனால..."

அம்மா என்ற தனி மனுஷியின் பூரணத்துவம் எனக்கும் லேசாக புலப்படத் தொடங்கியது.

''சொல்லும்மா…"

''எலிக்குக் கொடுக்கலாமா... தங்கை கல்யாணம்,   இந்த ஊர்ல ஒரு மளிகைக் கடைன்னு ஏதாச்சும் வழி காட்டலாம். ஒரு காலத்துல நம்ம வீட்டுக்கு ரொம்ப உழைச்சவங்கடா... ஏதாவது செய்யணும்னு எனக்குப் பதறுதுடா..." என்றாள் கெஞ்சும் குரலில்.

அம்மாவை நமஸ்கரிக்க வேண்டும்போல் பரபரப்பு வந்தது எனக்குள்.

பின்குறிப்பு:-

கல்கி 21  பிப்ரவரி 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com