-திருவாரூர் பாபு
வரதராஜன் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்திப் பூட்டிவிட்டுப் படியேறும்போது, அனிச்சையாய்த் திரும்பி, எதிரே பூட்டிக்கிடந்த முன்னாள் ஹோட்டல் வாசலில் நின்ற அவனைப் பார்த்தார்.
அவரிடம் படித்த மாணவன் மாதிரி இருந்தான். இவர் பார்ப்பது உணர்ந்து, அவசரமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டு நகர்ந்ததற்கு என்ன காரணம் என்று புரியவில்லை அவருக்கு.
வாத்தியார் உத்யோகத்தில் இது ஒரு கஷ்டம். யாரைப் பார்த்தாலும் தன்னிடம் படித்தவன் மாதிரி இருக்கும். அதில் சில அனுகூலங்களும் உண்டு. மனவேதனையும் உண்டு.
எப்போதாவது கூட்டம் பிதுங்கும் பேருந்தில் பயணிக்கின்றபோது கொஞ்சம் உட்கார்ந்தால் தேவலாம் என்று கால்கள் கெஞ்ச... பார்வையைச் சுழற்றி, எங்காவது இடுக்கு காலியாக இருக்கிறதா என்று பார்க்கும்போது, ஒரு சீட் காலியாகும்.
"ஸார்... இப்படி வந்து உட்காருங்க..."
அவசரமாய்ச் சென்று அமர்ந்ததும், "என்னை ஞாபகம் இருக்கா ஸார்.. கோவிந்து... எட்டாவது ஒன்பதாவது ஒங்ககிட்டதான் ஸார் படிச்சேன்..."
அவன் முகத்தை உற்றுப் பார்த்து அடையாளம் பிடிபடாமல், ''அப்படியா...? சந்தோஷம்ப்பா... என்ன பண்ணிக்கிட்டு இருக்க இப்ப...?"
"செகரெட்டேரியட்ல இருக்கேன் ஸார்..."
''ரொம்ப சந்தோஷம்ப்பா...'' என்பார் மனசு குளிர.
ஓர் ஆசிரியருக்குத் தாம் வாங்கும் சம்பளத்தைவிட, அதிக சந்தோஷம் அளிக்கும் விஷயம் இது. தம்மிடம் பயின்றவன் தவறு செய்தபோது தம்மால் கண்டிக்கப்பட்டு நன்நிலைப்படுத்தப்பட்டவன் இப்போது பெரிய மனிதனாக, சமுதாயத்தில் மதிக்கப்படுகின்ற ஒருவனாக உலா வருவது, மனசுக்கு நிறைவளிக்கும் விஷயம்.
"ஸார்... நான் எம்.பி.பி.எஸ். முடிச்சிட்டேன். இந்த வருஷம்தான் ஸார் பாஸ் பண்ணினேன். எல்லாம் நீங்க கொடுத்த கோச்சிங் ஸார். சாயங்காலம் ஸ்கூல் விட்டோன்ன, ஸ்கூல்லயே வச்சி நீங்க இலவசமாப் பாடம் எடுக்காட்டி இந்தப் படிப்பு ஏது ஸார்..”
சென்ற வாரம் ஒருநாள் மாணிக்கவாசகம் என்கிற அந்த முன்னாள் மாணவன் வீடு தேடி வந்து காலில் விழுந்தபோது, கண்களில் நீர் கோத்தது.
போதித்தவனுக்குச் செய்கின்ற மரியாதை இது.
மதிக்காதவர்களும் உண்டு.
பக்கத்துத் தெரு. இவரிடம்தான் பத்தாவது வரை படித்தான். உத்யோகம் மனைவி, மக்கள் என்றாகி.. போன வாரம் மனைவியோடு பேருந்தில் உட்கார்ந்திருந்தவன் இவரைப் பார்த்ததும் அவசரமாய் முகத்தை திருப்பிக்கொண்டான். பேருந்தில் உட்கார நிறைய இடமிருந்தது. ஏன் முகத்தைத் திருப்பிக்கொண்டான் என்றுதான் தெரியவில்லை.
அதற்காக வரதராஜன் வருந்தியதில்லை. முளைக்கின்ற கரும்பெல்லாம் இனிக்கின்றதா என்ன...?
ஆனால் வரதராஜனுக்கு இவன் தமது மாணவன் என்ற நினைவு அடுக்குகள் மூளையை உசுப்ப, அவன் நிற்கின்ற இடம் கருதி அவன் மேல் சந்தேகமாக இருந்தது.
காரணம், அவர் வீட்டுக்கு எதிரே பூட்டிக் கிடந்த ஹோட்டலுக்குப் பின்னே உள்ள கருவேல செடிகளுக்கு மத்தியில் கள்ளச் சாராய விற்பனை நடக்கிறது என்பதை, அவர் மனைவி நேற்றுச் சொன்னபோதுதான் அவருக்கே தெரிந்தது.
"புதுசு புதுசா... யார் யாரோ சைக்கிளை ஹோட்டல் வாசல்ல நிறுத்திட்டுப் பின்பக்கம் போறாங்க. முந்தா நாள் ராத்திரி ஏதேச்சையா வெளிய வந்தப்ப கருவ காட்டுக்குள்ள காண்டா விளக்கு எரிஞ்ச மாதிரி இருந்துச்சிங்க... நேத்திதான் நம்ம முனியம்மா சொன்னா... சாராயம் விக்கிறானுவளாம்..."
வரதராஜன் அதிர்ந்து போனார்.
அடுத்த நாளே அவருக்கு அவனைத் தெரிந்துபோயிற்று.
ஸ்கூலுக்குப் புறப்பட்டு சைக்கிளைக் கீழே இறக்கி இறக்கினபோது, பெடல் படியில் அடிபட்டு... ஏறி மிதித்தபோதுதான் செயின் அவிழ்ந்துவிட்டது புரிந்தது.
என்ன செய்யலாம் என்று யோசித்து நின்றபோது, எதிரே நின்றுகொண்டிருந்த அவன் வேகமாய் ஓடி வந்தான்.
"என்ன ஸார்...?"
"செயின் அவுந்துட்டுதுபோல இருக்கு..." என்றவர் அவனை உற்றுப் பார்த்தார்.
முகம் பிடிபட்டது. நம்மிடம் படித்தவன்தான் .
"சித்த இருங்க ஸார்..." என்றவன் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி, லாகவமாக செயின் கார்டை கழற்றிக் கீழே கிடந்த ஒரு சின்னக் குச்சியை எடுத்துச் சில விநாடிகளில் செயினை மாட்டினான்.
"மாட்டிட்டேன் ஸார்" என்றவனை உற்றுப் பார்க்க, அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
''ஒம் பேரு என்னப்பா...?"
"செல்வமணி ஸார்."
"என்கிட்ட படிச்சியில்ல...?"
தலையாட்டினான்.
'நானும் ஒன்னப் பத்து நாளா கவனிச்சிக்கிட்டுருக்கேன். இங்கேயே நின்னுக்கிட்டு இருக்க... ஏம்ப்பா...?"
அவன் தயங்கிச் சொன்னான்.
''சாராயம் விக்கிறேன் ஸார்..."
வரதராஜன் அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தார்.
"ஏம்ப்பா... ஏன் ஒனக்கு இந்த வேலை...?" என்றார் ராத்திரி அவனை வீட்டுக்கு அழைத்து.
"வேற வழி தெரியலை ஸார்...'
''கௌரவமான பொழைப்பே கிடைக்கலியா?"
''கிடைக்கலை ஸார்... கிடைச்ச ஒண்ணு ரெண்டு வேலையிலயும் வருமானம் பத்தலை ஸார். அப்பா இல்ல. ரெண்டு தம்பி, ஒரு தங்கச்சி, அம்மா. எல்லாருக்கும் ரெண்டு வேளை சோறாச்சும் போடணும் ஸார்...”
"இதுல மட்டும் நல்ல வருமானம் கிடைக்குதா...?"
"கிடைக்குது ஸார்..."
"ஆபத்தாச்சேப்பா... போலீஸ்கிட்ட மாட்டினா உள்ள தள்ளிடுவாங்களே..."
சிரித்தான்.
"அதெல்லாம் தள்ளமாட்டாங்க ஸார்... சட்டம் ஒழுங்கு போலீஸுக்கு மாசம் ஆயிரம் ரூவா... மதுவிலக்குப் போலீஸுக்கு ரெண்டாயிரம் ரூவா மாமூல் கொடுத்துட்டுத்தான் ஸார் விக்கிறேன்..."
அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தார்.
"என்ன ஸார் அப்படி பார்க்கறீங்க...? இது தவிர அப்பப்ப போலீஸ்காரங்க வந்து போனா பத்து இருவது... சாராயம்... அதுவுமில்லாம மாசம் ரெண்டு தடவை கேஸ் வேணுங்கிறதுக்காக கோர்ட்ல அபராதமும் கட்டச் சொல்வாங்க ஸார்...''
''இத நீ திருப்தியா செய்யறியா...?"
"சத்தியமா இல்லை ஸார்... வேற வழி இல்லாமதான் செய்யறேன். பி.ஏ. முடிச்சிட்டு வேலை தேடினேன். கிடைக்கலை. ஏதாச்சும் தொழில் தொடங்கலாம்னு ஏறி இறங்காத பேங்க் இல்லே. ஒரு பேங்கிலயும் என்னை நம்பலை. ஜாமீன் கேட்டாங்க. யார் ஜாமீன் போடுவா? வேற வழி ஸார். குடும்பம் என்னை நம்பி..."
வரதராஜன் அவனைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்து விட்டுப் பிறகு கேட்டார்.
'நான் ஒனக்குக் கடன் வாங்கித் தர்றேன். இந்தத் தொழிலை விட்டுட்டு கௌரவமா வேற தொழில் செய்யறியா?"
"நிச்சயமா ஸார்..." என்றான் மகிழ்ச்சியாய்.
''என்ன தொழில் தெரியும் ஒனக்கு...?"
''சைக்கிள் ரிப்பேர் பண்ணத் தெரியும் ஸார்..."
"சரி... நாளைக்கு வா பேங்க்குக்கு போவோம்..."
அடுத்த நாள் பேங்க்குக்கு அழைத்துச் சென்று, மானேஜரிடம் பேசினார். தயங்கிய மானேஜரிடம் தாம் ஜாமீன் போடுவதாகச் சொன்னதும் அவர் சம்மதித்தார்.
உடன் பத்தாயிரத்துக்கு லோன் சாங்ஷன் செய்யப்பட்டது. ஐந்து சைக்கிள் வாங்கி, அதே தெருவில் இடம்பிடித்து, 'சைக்கிள் ரிப்பேர் சரிசெய்யப்படும்' என்று எழுதப்பட்ட போர்டுக்குப் பொட்டு வைத்து, மாலை போட்டு, வரதராஜன் சூடம் கொளுத்தி பூஜை செய்த நான்காம் நாள்.
அந்த போலீஸ் வேன் சைக்கிள் கம்பெனி ஓரமாய் வந்து நின்றது. அதிலிருந்து தபதபவென இறங்கிய நான்கு போலீஸ்காரர்கள் சைக்கிள் கம்பெனிக்குள் நுழைந்தார்கள். பங்க்சர் ஒட்டிக்கொண்டிருந்த செல்வமணியை இழுத்துச்சென்று வேனில் ஏற்றியதைச் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வரதராஜன் அதிர்ச்சியாய்ப் பார்த்தார்.
"ஸார்... என்ன காரணத்துக்காக அவனைப் புடிச்சி வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா...?" என்றார் போலீஸ் நிலையத்தில்.
''தெரிஞ்சி என்ன பண்ணப் போறே...?" என்று நிமிர்ந்தவரை உற்றுப்பார்த்த வரதராஜன் மலர்ச்சியடைந்தார். அட! இவன் என் முன்னாள் மாணவன் ரகு அல்லவா...?
வரதராஜன் முகம் மலர்ந்து, "நீ ரகுதான்... என்கிட்ட படிச்சியே..." என்றார்.
அவர் முகம் பட்டென்று மாறியது.
"யார்யா ஓங்கிட்ட படிச்சா... பேச்சை மாத்தாதே... என்ன வேணும்
ஒனக்கு...?" என்றார் கடுமையாய்.
அவர் சற்று திகைத்துச் சொன்னார், "என்ன காரணத்துக்காக செல்வமணியைப் புடிச்சி வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா...?"
"என்ன காரணத்துக்காகவா... சைக்கிள் கம்பெனி வச்சிக்கிட்டுச் சாராயம் வித்தா எங்களுக்குத் தெரியாதா... கண்டுபுடிக்க மாட்டமா...?"
"யார் சாராயம் வித்தா... சாராயம் வித்துக்கிட்டு இருந்தவன் கௌரவமா பொழைச்சிக்கிட்டு இருக்கான்... அபாண்டமா பேச வேணாம்..."
"அதிகப்படியா பேசாத. என்ன வேணும் ஒனக்கு..."
"அவனை வெளிய விடணும்..."
"முடியாது... அரெஸ்ட் பண்ணியிருக்கோம். ஜாமீன் வாங்கிட்டு வா..."
வரதராஜன் அவரை முறைத்துப் பார்த்துவிட்டுப் பக்கத்தில் கிடந்த காலி நாற்காலியைப் பார்த்துக்கொண்டே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார். வக்கீலைப் பார்த்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் செல்வமணியை வெளியே கொண்டு வந்தார்.
நான்கு நாட்களாகச் சைக்கிள் கம்பெனி திறக்கப்படவில்லை. ஜாமீனில் வெளியே வந்தவன் நன்றி சொல்லி விட்டுப் போனதுதான். அதன்பின் அவனைப் பார்க்க முடியவில்லை. வங்கிக் கடன் நினைவுக்கு வந்து அவர் மனதை அரித்தது.
தவிப்பாய்க் காத்திருந்தவர், மாலையில் அவனைப் பார்த்து மலர்ந்தார்.
“ஏம்ப்பா... எங்க போயிட்ட? ஏன் கடை தொறக்கலை...?"
சிவந்த கண்களுடன் வீங்கிய கன்னத்துடன் நின்றிருந்தவனை அதிர்ச்சியாய்ப் பார்த்தார்.
"என்னப்பா...?"
அவன் தொண்டை கட்டிக்கொள்ள பேசினான்.
''சைக்கிள் கம்பெனியை என்னால் நடத்த முடியாது ஸார்..."
"ஏம்ப்பா...?"
''அடிக்கிறாங்க ஸார்... மிரட்டறாங்க. சாராயம் விக்கலேன்னா என் குடும்பத்தை நிம்மதியா இருக்கவிட மாட்டாங்களாம். நேத்து என்னை வெளியே விட்டபிறகு, வீட்டுக்கு வந்து, என் அம்மாவை மிரட்டியிருக்காங்க. காலையில கூட வீட்டுக்கு வந்து மிரட்டினாங்க ஸார்... என்னைக் கொலை கேஸ்ல மாட்ட வச்சிடுவாங்களாம்...''
''என்னப்பா இது... அநியாயமா இருக்கு...?"
"அவுங்கள பத்தி ஓங்களுக்குத் தெரியாது ஸார். நிம்மதியா இருக்க வுட மாட்டாங்க ஸார். தயவு செஞ்சி என் விஷயத்துல இனிமே நீங்க தலையிடாதீங்க ஸார். ஓங்களுக்குத் தொந்தரவு கொடுப்பாங்க."
''பேங்க்ல கடன் வாங்கியிருக்கோமே...''
''அத நான் அடைச்சிர்றேன் ஸார்."
வரதராஜன் அமைதியாய் நின்றார். நெஞ்சு கனத்தது. இது என்ன அநியாயம்?
"என் மாணவன் ஒருத்தன் சாராயம் விக்கிறதை என்னால் தாங்கிக்க முடியலைப்பா..."
''பொய் சொல்லக் கூடாது. திருடக் கூடாதுன்னுதான் ஸார் சொல்லிக் கொடுத்தீங்க. சாராயம் விக்கக் கூடாதுன்னு சொல்லிக் கொடுக்கலையே ஸார்.."
"என்ன பண்ணப் போறே...?"
"சாராயம்தான் விக்கப் போறேன் என்னை மன்னிச்சிடுங்க ஸார். அம்மா அழுவுது ஸார். தம்பிங்க போலீஸைப் பார்த்துப் பயப்படறாங்க. எனக்கு வேற வழி இல்ல ஸார்."
சைக்கிள் கம்பெனி சாவியை அவரிடம் கொடுத்து விட்டுப் படி இறங்கியவன், மீண்டும் படி ஏறி வந்தான்.
"இனிமே நான் ஓங்க வீட்டுக்கு எதிரே சாராயம் விக்க மாட்டேன் ஸார். வேற எடத்துக்குப் போறேன். பத்து நாளா நான் அங்கே சாராயம் விக்காததால அந்த எடத்துல வேற ஒருத்தனை விக்கச் சொல்லிட்டாங்க. என்னை காந்தி நகர்ல விக்கச் சொல்லியிருக்காங்க...'' என்றவன் அவர் காலில் விழுந்தான்.
எழுந்து அவரைப் பார்த்து நீர் தேங்கிய கண்களுடன் வணங்கி விட்டு நகர...
வரதராஜன் கனத்துப்போன இதயத்தோடு வாசலுக்கு வந்தார். கடந்து சென்ற 'மொபைல்' வேனிலிருந்த ஒரு போலீஸ்காரர் சாலையில் சென்ற செல்வமணியைப் பார்த்து, சிநேகமாய்க் கை ஆட்டி விட்டுப் போனார்.
பின்குறிப்பு:-
கல்கி 23 ஜனவரி 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்