சிறுகதை – அளவுகோல்!

ஓவியம்; கோபண்ணா
ஓவியம்; கோபண்ணா

-ரிஷபன்

வீடு திரும்பும்போது இரவு ஒன்பதரை மணியாகிவிட்டது. "அப்பா தூங்கிட்டாரா?" என்றேன் சுகுணாவிடம். இருமல் சப்தம் கேட்டது. அப்பா இன்னும் தூங்கவில்லை. அருகில் போனேன்.

"என்னப்பா... வென்னீர் வேணுமா?"

"பக்கத்துலயே வச்சிருக்கேன். அவர் உங்களுக்காகத்தான் காத்திருக்கார்," என்றாள்.

எனக்குள் பெருமூச்சு.

"அவசியம் போகணுமா?" என்றேன்.

சொன்ன பிறகுதான் உறைத்தது. அப்பாவின் முகம் சுணங்கியது பார்த்தேன்.

"சரிப்பா... வாங்க..."

குனிந்து குழந்தையை அள்ளுவதுபோலக் கைகளில் ஏந்திக்கொண்டு நிமிர்ந்தேன். சுகுணா விலகி வழி விட்டாள்.

ஹால்... வராந்தா... என்று கடந்து வாசலுக்கு வந்தேன். சாய்வு நாற்காலி போடப்பட்டிருந்தது. படுக்க விட்டேன். அப்பா முகம் குழந்தை போல் விகசித்தது.

ஒரு வருடமாய் இதே பழக்கம்.

கொஞ்சங் கொஞ்சமாய் கை கால்கள் சரி வர சுவாதீனமின்றித் தள்ளாடின.

முதலில் என்னைப் பற்றி நடந்தவர்,  பிறகு எனக்குக் குழந்தை போலானார்.

மாலையில் அவர் பொழுதுபோக்கே இதுதான். வாசலில் கொண்டு போய் அமர வைத்தால் இரண்டு மணி நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பார்.

"இதுல என்னப்பா உங்களுக்குச் சந்தோஷம் என்று நானும் கேட்டதில்லை; அவரும் சொன்னதில்லை.

"விஜி சாப்பிட்டாச்சா?" என்றேன் உள்ளே வந்து.

"ம்..."

"சரவணன்?"

"வர லேட்டாகும். முடிஞ்சா வருவேன். இல்லே ஃப்ரெண்ட்ஸ் வீட்டுலதான்னு சொல்லிட்டுப் போனான்...”

பாபு தூங்கிவிட்டான். ஒன்றரை வயசு மழலையை இன்று கேட்க முடியாது. லேட்டாய் வருவதின் சாபம்.

ட்டில் கை அளைந்தபோது சுகுணாவின் அதட்டல் கேட்டது. "சாப்பிடும்போது... என்ன யோசனை?''

"ப்ச்..."

"என்ன சொன்னாங்க... பையன் வீட்டுல"

"அதேதான்... கொஞ்சங்கூட குறையாது. விஜி என்ன சொல்றா? இதே பையனைத்தான் பிடிச்சிருக்காமா..." என்றேன்.

என் இயலாமை எனக்கே உறுத்தியது.

"அவ என்ன சொல்றது... நம்மால என்ன முடியுமோ... அதான்..."

"சரி. மோரை விடு. சாதம் வேணாம்..."

"தினசரி.. வெறும் மோரைக் குடிச்சால் எங்கேர்ந்து தெம்பு வரும்..."

"சரவணனுக்கு எதுவும் போஸ்ட் உண்டா?" என்றேன் மெல்லிய குரலில் எதிர்பார்ப்பு தொனிக்க.

"இ...ல்லை." சுகுணா உள்ளே போக தட்டிலேயே கைகழுவிக் கொண்டேன்.

வேலை தேடும் தம்பி... திருமண வயதில் தங்கை... நான் மட்டும் ஏன் அவசரப்பட்டு கல்யாணம் செய்துகொண்டேன்... இத்தனை கடமைகளை வைத்துக்கொண்டு. இனம் புரியாத எரிச்சல் என்மீதே எனக்கு. இதில் குழந்தை வேறு.

இதையும் படியுங்கள்:
நல்லோரின் நல்ல நட்பே நம்மை உயர்த்தும்!
ஓவியம்; கோபண்ணா

வாசலுக்குச் சென்றேன்

அப்பாவின் கவனம் என் மீது திரும்பியது.

"என்னடா... உள்ளே போகணுமா..."

"மணி பத்தாயிருச்சு... பரவாயில்லே... இன்னும் அரை மணி இருக்கலாம்..."

"என்ன சொன்னாங்க?"

சொன்னேன் உணர்ச்சியற்ற குரலில்.

"வேற எடம் பார்க்கலாமா..." என்றார்.

"இதுக்கே ஆறு மாசமா அலைச்சல்... இனி அடுத்தது அமையணும்..." என்றேன்.

"சரி... உள்ளே போகலாம்..."

எழுந்து அருகில் சென்று குனிந்தேன். கைகள் நடுங்கி பிறகு சரியாகப் பற்றின.

உள்ளே படுக்கையில் விட்டபோது அப்பாவின் தளர்ந்த கை என்னைப் பிடித்துக்கொண்டது.

''ராஜா... மனசுத் தைரியத்தை விட்டுராதேடா... உன்னால் முடியும்..."

"அ...ப்பா..."

"கிழவனை வாசல்ல கொண்டு போய் விடறதுலயும்... திரும்பக் கொண்டு வரதிலயும் என்ன அவசியம்னு பார்க்கிறியா... நீ திடமா இருக்கியா... இல்லியான்னு வேற எப்படிடா நான் புரிஞ்சுப்பேன்... மனசு விட்டுப் பேசற ஸ்டேஜை நாம தாண்டிப் போயிட்டோமே. அப்பாகிட்டே எதுக்குச் சொல்லணும்னு நீ மறைச்சாக்கூட உடம்பு காட்டிக் கொடுத்துரும்டா. புரியுதா.. திடத்தை விடாதே... எதையும் சமாளிக்கலாம்..."

கால் மடங்கி அவர் மடியில் முகம் புதைத்தேன்.

பின்குறிப்பு:-

கல்கி 26  நவம்பர் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com