ஓவியம்; வேதா
ஓவியம்; வேதா

சிறுகதை - பஸ்ஸில் வந்த அபாயம்!

-க. ஒப்பிலியப்பன்

ஸ்ஸில் அத்தனை கூட்டத்திலும், பெண்கள் பகுதியில் பளிச்சென்று நிற்கும் அகிலாவைக் கவனித்துவிட்டான் அனந்தராமன். கம்பெனியில் இருவரும் ஒன்றாக வேலை செய்பவர்கள். அகிலாவின் பக்கம் மீண்டும் திரும்பியபோதுதான், அவளைச் சுற்றி நின்ற ஆபத்து அனந்துவுக்குப் புரிந்தது. அவள் பக்கத்தில், பின்புறத்தில் என்று இரண்டு நபர்கள் சற்று வித்தியாசமாகத் தெரிந்தார்கள். பஸ்ஸில் ஏற்படும் குலுக்கலை, கூட்ட நெரிசலை அகிலாவின் பக்கத்தில் இருப்பவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அகிலாவின் கழுத்தை லேசாக உரசிக்கொண்டிருந்தான். செயற்கை நெரிசலைப் பின்புறத்திலுள்ளவன் அவ்வப்போது உண்டாக்கி, நண்பனுக்கு உதவிக்கொண்டிருந்தான்.
அனந்தராமன் அவர்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

'என்ன இவள் ... தன்னைச் சுற்றியிருக்கும் ஆபத்தைக்கூட உணராமல்... குழந்தைபோல அப்படி என்ன வெளியில் வேடிக்கை வேண்டிக் கிடக்கு' அகிலாவின் பக்கத்துப் பேர்வழி லேசாக விரலால் அவளின் கழுத்தை... 'ஓ... இவர்கள் செயின் திருடர்கள்... அகிலாவின் கழுத்தில் பளபளக்கும் அந்த கோதுமைச் செயினை அபேஸ் செய்யும் வேலை நடக்கிறது! பேசாமல் அகிலாவைக் கூப்பிட்டு எச்சரிக்கலாமா? வேண்டாம்; பஸ்ஸில் எல்லோரும் பார்ப்பார்கள்... ஜாடை மாடையாகத் தெரிவிக்கலாமென்றால் பஸ்ஸுக்குள் அகிலா பார்த்தால்தானே...'

அனந்தராமன் ஒரு முடிவுக்கு வந்தான்.

ந்த கேடிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது. தப்பித் தவறி அகிலாவின் செயின் மீது அந்த கேடிகள் கையை வைத்தால், கத்தி, கூச்சலிட்டு அவர்களைக் கையும் களவுமாகப் பிடிப்பது.

அனந்தராமன் நினைத்ததைச் செயலில் காட்ட முற்பட்டான். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது...

பஸ் ஒரு குலுங்கு குலுங்கி சிக்னலில் நின்றது. அந்த சமயம் பார்த்து, அகிலாவின் செயினை விரலில் மாட்டி இழுக்க முயன்றவன், எதேச்சையாக அனந்தராமன் பக்கம் திரும்ப, சட்டென்று கையை இழுத்துக்கொண்டான். தன்னை யாரோ கவனிக்கிறார்கள் என்பது அந்தப் பேர்வழிக்குத் தெரிந்துவிட்டது. அனந்தராமன் அதைத்தான் எதிர்பார்த்தான். அப்பாடாவென்றிருந்தது அந்த இரண்டு பேர்வழிகளும் அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கினதும்.

இதையும் படியுங்கள்:
நமது வாழ்வில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 விஷயங்கள்!
ஓவியம்; வேதா

தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும், அனந்தராமனும், அகிலாவும் இறங்கினார்கள்.

"குட்மார்னிங் சார்! என்ன நீங்க இந்த பஸ்ஸிலா வந்தீங்க...?"

''சரியாப் போச்சு! நீங்க நன்னாத்தான் வெளியில பராக்கு பார்த்துண்டு வந்திருக்கீங்க!

"என்ன சார் சொல்றீங்க...?"

பஸ்ஸில் அவள் பக்கத்தில் நின்றுகொண்டு வந்த அந்த இரண்டு பேர்வழிகளைப் பற்றியும், அவளது செயின் போய்விட இருந்ததைப் பற்றியும் சொன்னான் அனந்தராமன்.

"அப்படியா...?" பயத்தில் கண்களைப் பெரிதாக்கிக்கொண்டு, நெஞ்சில் ஒரு கையை வைத்துக்கொண்டு கேட்ட அகிலா, கோதுமை செயினை, அரிசிப்பல்லால் கடித்துக்கொண்டே அனந்தராமனுக்கு 'தேங்க்ஸ்' சொன்னாள்.

“நாட் அட் ஆல்..." பதிலுக்குச் சொல்லிக்கொண்டே ஸ்டைலாகப் பாண்ட் பாக்கெட்டில் கையை விட்ட அனந்து 'ஆ'வென அலறினான்.

“ஏன்... என்னாச்சு...?”  அகிலா திரும்பி அனந்துவைப் பார்த்துக் கேட்டாள்.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு சுயமரியாதை இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள சில வழிகள்!
ஓவியம்; வேதா

வாழ்க்கையில் மிகப் பெரிய தர்ம சங்கடம் நம்மைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் வைத்திருப்பவர்களிடம், நமது பலகீனங்களைச் சொல்வதுதான்...

எனவேதான் அனந்து தனது பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதை மறைத்து, "ஒன்றுமில்லை... ஒன்றுமில்லை மேடம்" என்று வழிந்தான்!"

பின்குறிப்பு:-

கல்கி 17  ஜனவரி  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

logo
Kalki Online
kalkionline.com