சிறுகதை – பாதிப்புகள்!

ஓவியம்; ராமு
ஓவியம்; ராமு

-சோம. வள்ளியப்பன்

சென்னை திருவள்ளுவர் பஸ் நிலையத்தை இந்தக் கோலத்தில் அடிக்கடி பார்க்கமுடியாது. வழக்கமான நெரிசல், டிக்கெட்டுக்கு அலையும் கூட்டமில்லை. பெரும்பாலும் காலியாக இருந்தது. மாலை ஆறு மணியுடன் முடிந்த 'பந்து'க்குப் பிறகு வெளியில் மெதுவாக ஜனப்புழக்கம் ஆரம்பித்திருந்தாலும் வெளியூர்ப் பயணம் அதிகம் பேர் இல்லைதான். நாளை காலை கோயம்புத்தூரில் இருந்தாக வேண்டிய கட்டாயம். ஒரு டெண்டர் ஓப்பனிங்.

"பார்த்துப் போடா, வெட்றாங்க, குத்துறாங்க. இந்த ஒரு நாள் போகாட்டா என்ன? அந்த நெற்றிக் குங்குமத்தை வேற பெரிசா வச்சிண்டு..."

அம்மாவிடம் சமாதானம் சொல்லிவிட்டு வந்தாகி விட்டது. சீட் நெம்பர் இருபத்தி ஐந்து. ஏற்கெனவே ரிசர்வ் பண்ணியிருந்தது இரவு பஸ்சாயிருந்ததால் கான்சல் ஆகவில்லை. பத்து மணிக்குத்தான் பஸ் கிளம்பும் என்றாலும், முன் ஜாக்கிரதையாக ஒன்பதேகாலுக்கு வந்தாகிவிட்டது. வரும் வழியெல்லாம் இருமல். தொண்டை புண்ணாக இருந்தது. டாக்டரிடம் காட்ட முடியவில்லை.

பாபர் மசூதி இடித்ததன் காரணமாக எழுந்த வன்முறைகளின் பாதிப்பு எங்கள் வீட்டருகேயும் உணரப்பட்டது. நமசிவாயம் என்று ஒரு பேப்பர் போடும் பையன். பெயருக்கு ஏற்றாற்போல் நெற்றியில் எப்பொழுதும் திருநீறு. பந்த்தின்போது நடமாடியதால் இன்று காலை வெட்டப்பட்டு விட்டான். பலி.

எங்கள் வீட்டுக்கும் அவன்தான் பேப்பர் போடுவது. மூன்றாண்டுப் பழக்கம். மசூதி இடித்ததற்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்? ஹூம். இவன் ஒரு மதத்தைச் சேர்ந்தவன். அவ்வளவுதான். அது போதுமானதாய் இருந்திருக்கிறது. தந்தையில்லாத குடும்பம். காலேஜில் படித்துக்கொண்டே, பல வேலைகள் செய்து சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். நேற்று வரை இருந்தவன் இன்று இல்லை.

நான் ஏற வேண்டிய கோயம்புத்தூர் பஸ் வந்து நின்றது. வண்டி கிளம்ப இன்னும் அரை மணி நேரமிருக்கிறது. ஒரு கப் பால் சாப்பிட்டு விட்டு வரலாமென்று எழுந்து கடை தேடினேன். மாலை செய்தித்தாள்களின் தலைப்புகள் பல்வேறு மாநிலங்களில் சாவு எண்ணிக்கையையும் கலவரங்களையும் சொல்லிக்கொண்டிருந்தன. நமசிவாயம் மீண்டும் நினைவுக்கு வந்தான். சைக்கிளில் இருந்தபடியே பேப்பரை உள்ளே விட்டெறியாமல் வாசல் வரைக்கும் நடந்து வந்து வைத்துவிட்டுப் போவான். பேப்பர் சரஸ்வதியாம்!

"அய்யோ... அய்யோ... என் செல்லமே, ராசா... இப்படி கிடக்குறியே! கண்ணைத் தொறந்து பார்றா... நாங்கள்ளாம் என்னடா தப்புப் பண்ணோம்.. மடார் மடார்" என்று தலையை அவன் கால்மாட்டில் மோதிக்கொண்டு அவன்  அம்மா... ஹூம்.

திரும்பி வந்தபொழுது பஸ் கிளம்பத் தயாராக இருந்தது. ஏறி உட்கார்ந்துகொண்டேன். ஜன்னல் ஓரத்து சீட். பக்கத்தில் யார்? காலிதானோ!

இல்லை. இருபத்தாறாம் நம்பர் சீட்டைத் தேடிக்கொண்டு மூன்று இளைஞர்கள் வந்தார்கள். ஒல்லியாய் கையில் ஒரு பிரீப்கேசுடன் இருந்த பையன் அந்த சீட்டில் உட்கார்ந்தான்.

"பார்த்துப் போ சையத்... போய் போன் பண்ணு..." சுற்று முற்றும் பார்வையை ஓட விட்டபடி 'உக்கும்' என்று கனைத்தான் இன்னொருவன்.

அவர்களின் சங்கடத்தைப் புரிந்துகொண்டு நானும் பார்வையை சன்னலுக்கு வெளியே ஓடவிட்டேன். தொண்டையை இருமல் பிடுங்கியது. செருமிக் கொண்டேன்.

இதையும் படியுங்கள்:
உடல் எடையை குறைக்க உதவும் ஐந்து எளிய பானங்கள்!
ஓவியம்; ராமு

சையதை ஏற்றி விட வந்தவர்களும் அதே இனத்தை சேர்ந்தவர்கள்தான். விடை பெற்றுக்கொண்டார்கள்.

பஸ் கிளம்பியது. கண்டக்டர் டிக்கெட்டுகளை சரிபார்த்துக் கொண்டிருக்க சென்னை போக்குவரத்தில் 'திருவள்ளுவர்' திணறியபடி நகர்ந்தார்.

இரண்டு பக்கமும் இளைஞர்கள்தான் தீவிரம். இதுவரை சாவு எண்ணிக்கை அறுநூறாம். முந்நூறு முந்நூறா! சீ... இதென்ன கணக்கு? இரண்டு பக்கமும் சரிபாதியாகவா இருக்கும். இதென்ன வெறும் நம்பரா? நபர்கள் அல்லவா? மகன்கள், அண்ணன்கள், அப்பாக்கள். எல்லாம் உயிர்கள். ஹூம்.

"எங்க எங்க சார்? கோயம்புத்தூரா? ஈரோடா?" அவன்தான். மெதுவாய்த் திரும்பிப்பார்த்தேன். மீசை இன்னும் வரவில்லை. கண்ணாடி போட்டுக்கொண்டு சிவப்பாய், ஒல்லியாய் அடுத்தவீட்டு அய்யங்கார் மகன் சீனுவாசன் மாதிரியே!...

''ஆமாம். கோயம்புத்தூர்தான். நீ...?"  'நீ' என்று கேட்க நினைக்காமலேயே வந்துவிட்டது.

''நானும் கோயம்புத்தூர்தான் சார்..."

பஸ் சடன் பிரேக் போட்டு ஒரு சைக்கிள்காரனுக்கு திட்டும் வாழ்வும் கொடுத்தது.

"சார் எங்க... பாங்குல ஓர்க் பண்ணுறீங்களா?' 'ஏது விடாமப் பேசறான்...' "இல்லை, மெட்ராசில சின்ன பாக்டரி நடத்துறேன்."

நீ என்ன பண்ணுகிறாய் என்று கேட்கவில்லை. கண்டக்டர் வந்து டிக்கெட் வாங்கி பஞ்ச் பண்ணிக் கொடுத்து விட்டுப்போனார். டிசம்பர் குளிர் சில்லென்று வீச... பேசும்பொழுது வாய்க்குள் காற்றுப் போய்... சிரமமாய்... கிச்சென்று கண்ணாடியை இழுத்து மூடினேன்.

ஓவியம்; ராமு
ஓவியம்; ராமு

"நாளைக்கு ஒரு வேலைக்கு இன்டர்வியூ சார். கம்ப்யூட்டர் புரோகிராமர் வேலைக்கு. போயே ஆகணும்." நான் கேட்கவே இல்லை. இவனாக...

வேண்டுமென்றே தலையைக் குனிந்துகொண்டு கவனிக்காதவன் மாதிரி கீழே எதையோ தேடினேன். 'இவனுடன் என்ன பேச்சு வேண்டியிருக்கு?' கண்டக்டர் முன்னால் போய்விட்டார். பெரிய விளக்குகள் அணைக்கப்பட்டு நீலக் கலர் டிம் லைட் மட்டும் எரிந்துகொண்டிருந்தது. லாரிகள் ஒன்றுவிடாமல் ஓவர்டேக் செய்தபடி தன் வேலையே கவனமாய் டிரைவர். எனக்கு தொடர் இருமல்.. 'மற்றவர் தூக்கமும் இந்த பஸ்ஸில் இன்று என்னால் கெடுமோ...'

''பழம் எடுத்துக்குங்க சார்..."

கண்ணை விழித்துப் பார்த்தேன். முகத்தருகே ஒரு பிளாஸ்டிக் பையில் பச்சை முத்துக்களாய்ச் சில்லென்ற 'சீட்லெஸ்' திராட்சை.

நமசிவாயத்தின் உடம்பை மாலைதான் பரிசோதனைக்குப் பின் அறுத்துப் பொட்டலமாய்க் கொடுத்தார்கள். அதைப் பார்த்த கஷ்டத்தில் பால் மட்டும் ஒரு தம்ளர் குடித்துவிட்டு வந்தது. இவன் என்னடாவென்றால் ஐஸில் வைத்த திராட்சை..

"இல்லை. தொண்டை கட்டின மாதிரி இருக்கு." முகத்தில் அடித்ததுபோல் சொல்லிவிட்டு கண்ணை இறுக மூடிக்கொண்டேன். கஷ்டப்பட்டு நாளைய டெண்டரைப் பற்றி நினைக்க முயன்றேன்.

திடீரென்று விழித்தபொழுது, எல்லா லைட்டுகளும் எரிந்துகொண்டிருந்தன. பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தது. சேலமா? ஈரோடா? தெரியவில்லை. பக்கத்தில் சையதையும் காணோம். ஓரிருவர் மட்டும் உலகத்தை மறந்த தூக்கத்தில், மணிஇரவு இரண்டு.

எனக்கு தொண்டைக் கமறல் அதிகமாயிருந்தது. வலிக்கவும் செய்தது. மீண்டும் சூடாகப் பால் சாப்பிட்டால் என்ன? கீழே இறங்கினேன், வாடைக் காற்று வதைத்தது. பாலோ நீச்ச நாற்றம். அதன் சூட்டின் இதத்திற்காகக் குடித்துவைத்தேன். மெதுவாக இடம் தேடி சிறுநீரும் கழித்துவிட்டு வந்தபொழுது, டிரைவர் உட்பட அனைவரும் ஏறிக் கிளம்பத் தயாராக, விருவிருவென்று ஏறிப் போய் என் சீட்டில் உட்கார்ந்தேன். மீண்டும் இருமல்.

"எல்லாரும் வந்தாச்சா...?" கண்டக்டர் ஒரு கையால் மேல் கம்பியைப் பிடித்தபடி எட்டி ஒரு நோட்டம் விட்டார்.

'என்ன இவனைக் காணோம். கோயம்புத்தூர் அல்லவா போறதாச் சொன்னான். பெட்டியும் கீழதான் இருக்கு."

“போலாம்ப்பா... ரைட்... ரைட்...” டிரைவர் ஸ்டார்ட் பண்ணினார்.

"ஹலோ... இங்கே ஒருத்தர் வரணும்" நான்தான் அடங்கிய குரலில்.

"என்னது... வண்டி அரை மணியா நிக்குது. இன்னும் வரணுமா...?" கோபமாக கண்டக்டர் அருகில் வந்தார்.

"யாருங்க வரணும்?"

"ஒரு பையன்.''

கண்டக்டர் பேசிக்கொண்டிருந்தாலும், சாப்பிட்ட தென்பில் வெற்றிலை பாக்கை மென்றபடி ஸ்டியரிங்கை ஒடித்துத் திருப்பி ஓட்டினார் டிரைவர். பஸ் ஸ்டாண்ட் வாசலுக்கு வண்டி வந்துவிட்டது.

''வந்தா... அடுத்த வண்டில கோயம்புத்தூர் வருவாருப்பா அவரு மெதுவா..." டிரைவர் பேச்சில் கிண்டல்.

வாய் பேசாமல் தூங்கிக்கொண்டும், மென்றுகொண்டும் சக பயணிகள். விஷயம் அவ்வளவுதான் என்பதுபோல கண்டக்டர் முன்னோக்கி நடக்க....

"லக்கேஜெல்லாம் பஸ்லதான் இருக்கு, வந்திடுவார்" நான்.

''எல்லாம் டிரான்ஸ்போர்ட் ஆபீசிலே குடுத்திடுவோம் பத்திரமா.. நாளைக்கு..." சிரிப்புச் சத்தம்.

'இண்டர்வியூ சர்டிபிகேட்டெல்லாம் இந்த பெட்டிலதானே வைத்திருப்பான்...சே...'

பஸ் ஹைவேஸில் இறங்கியது.

''நிறுத்துங்க... ஹோல்டான். என்னய்யா இது அநியாயமா இருக்கு? எல்லாரும் பார்த்துக்கிட்டுச் சும்மா இருக்கீங்க..."

நான் போட்ட சத்தத்தில், கேட்ட கேள்விகளால் மற்றவர்களும் சேர்ந்து கொள்ள எரிச்சலாய் பஸ் நிறுத்தப்பட்டது. நான் ஒரு தொந்தரவாகத் தெரிந்தேன்.

நான் தர்மசங்கடத்தில். இவன் எங்கே போய் விட்டான்? வருவானா, மாட்டானா? இவர்கள் எவ்வளவு நேரம் காத்திருப்பார்கள்?

இதையும் படியுங்கள்:
அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும் சிலருக்கு உடல் எடை குறைவதில்லை.. ஏன் தெரியுமா?
ஓவியம்; ராமு

நான் பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கி நின்றேன். இருப்புக் கொள்ளவில்லை. உடன் கண்டக்டர் நச்சரித்தபடி பெட்டியோடு என்னையும் இறக்கி விட வேண்டுமென்று ஒருவர் சொல்லுவது எனக்கும் கேட்டது. நல்ல 'மனிதர்'கள்.

அதோ... அதோ அவனேதான். ஓடி வந்தான். முன் ஓடிச் சென்று, கையை ஆட்டி அடையாளம் காட்டினேன்.

மூச்சிரைக்க ஓடி வந்தவனை அன்பாய் உள்ளே அழைத்துப் போனேன்.

"எங்கப்பா போன...", "நாங்கள்ளாம் காலாகாலத்தில் ஊர் போய்ச் சேர வேணாமா...?" "இப்படி வர்றவனுவ தனியா டாக்ஸில வரணும்..." பேச்சுக்கள் காதில் ஏறவில்லை.

நிம்மதிப் பெருமூச்சுடன் எங்கள் சீட்டுகளில் உட்கார்ந்தோம். விளக்குகள் அணைக்கப்பட்டன. வண்டி வேகம் பிடித்தது.

'நாம மட்டும் இல்லைன்னா...' என்று அலையத் துவங்கிய மனதை அடக்கினேன். 'பாவம் நாளை இண்டர்வியூ என்றானே. நல்லவேளை...'

"எங்கப்பா போய்ட்ட இவ்வளவு நேரம்?" கமறிய தொண்டையை அடக்கியபடி கேட்டேன்.

"இந்தாங்க. இதை முதல்ல வாயில போட்டுச் சப்புங்க... சொல்றேன்...''

ஒரு பட்டை விக்ஸ்' மாத்திரையும், கூடவே ஸ்டிரெப்சில்ஸ் மாத்திரைகளும் தொண்டை கமறல் அடங்க.

''ஏதுப்பா...இந்த இராத்திரில...?"

'இதைத் தேடித் தேடித்தான் இவ்வளவு நேரமாயிடுச்சு. விடாம இருமிக்கிட்டே இருந்தீங்களா.. மருந்துக் கடையைத் தேடித் தேடி..."

எனக்குத் தொண்டை அடைத்தது. சையதின் கைகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். அவனும் மலங்க மலங்க விழித்தபடி என் கைகளைப் பற்றிக்கொண்டான்.

பஸ் அமைதியாக, சீரான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது.

பின்குறிப்பு:-

கல்கி 03  ஜனவரி  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com