சிறுகதை – பரிசு!

ஓவியம்;கரோ
ஓவியம்;கரோ

-தமிழினியன்

ஜி. டி. எக்ஸ்பிரஸ் புறப்பட இன்னும் ஒன்றரை மணி இருந்தது.

இந்த அவகாசம் போதும்.

கிளோக் ரூமில் லக்கேஜை தள்ளினான். ஓடினான் கன்னாட் பிளேசுக்கு.

ராஜஸ்தான் எம்போரியம்.

கண்ணாடி மணியும், வண்ணக் கற்களும் பதித்த கைப்பை அழகாய் இருந்தது. 'இது ஜெயந்திக்குப் பிடிக்குமோ... என்னவோ?'

என்கிரேவ் டிசைன் செய்யப்பட்ட வளையல்....  ‘ஒப்புக்கொள்வாளா...?’

புடைவை பார்த்தான்.

வழுவழுக்கும் பட்டுத் துணிதான் வித்தியாசமாக இருந்ததே தவிர, 'ஷேட்' எதுவும் ஜெயந்திக்குப் பொருந்துவதாக இல்லை.

நேரம் ஆயிற்று.

ஒன்றும் வாங்காமல் புதுடில்லி ரயில் நிலையம் திரும்பினான்.

'கிராண்ட் டிரங்’ கிழித்துக்கொண்டு ஓடியது.

ம்பெனியைச் சார்ந்த சைட்டுக்கு டியூட்டியில் வந்திருந்தான், நந்த கோபால். ஒரு மாத வேலை. முடிந்தது. இத்தனை நாள். இத்தனை தூரம்.

குடும்பத்தைப் பிரிந்து வந்தவன் வெறும் கையோடு போகலாமா? விக்னேஷக்கு ஜீன்ஸ் செட். டீலக்ஸ் கான்வாஸ் ஷூ.

திவ்யாவுக்குச் சூரிதார், கான்பூர் சப்பல். காஷ்மீர் போர்வை, அப்பாவுக்கு. பனாரஸ், அம்மாவுக்கு. ஆனால், ஜெயந்திக்கு...

நஹி!

ளமனைவியை ஏதேனும் புதுமையாய் வாங்கி அசத்த வேண்டும் என்று நேற்றும் இன்றும் டில்லி முழுக்க அலசி...

கடைசியில் ஒன்றும் கடைத்தேறவில்லையே.

ஜான்சி, போபால், நாக்பூர்... இப்படி ரயில் நின்ற நிலையங்களில் எல்லாம் அங்கிருந்த ஷோகேஸ்களை ஆராய்ந்தான்.

'ஜெயந்தியின் மகிழ்ச்சிக்கு எதை வாங்கலாம்?'

காலை ஏழு மணி, சென்ட்ரல். மாலை மூணேகாலுக்குத்தான் பல்லவன். பாண்டிபஜார் ஓடினான்.

பட்டுப் புடைவை.

நேவி புளூ உடம்பும்,  மரூனில் இள மஞ்சள் இழைந்த பார்டருமாய் அம்சமாய் இருந்தது.

'அடச்சீ... எப்பப் பார் புடைவைதானா...?  உலகத்தில் வேறு பொருளா இல்லை!"

புடைவை கைவிட்டுப் போயிற்று.

கடைக்கு வந்த பெண் ஒருத்தி கார்மேகம்போல் கண்ணாடி அணிந்திருந்தாள்.

ஜெயந்திக்கும் அதுபோல் வாங்கினால் என்ன.

மறுகணமே கண்ணாடி கடைக்குள் நுழைந்தான்.

அவன் ஆசைப்பட்டது போலவே கண்ணாடி கிடைத்தது. விலை 325 ரூபாய்!

'நான் என்ன அடிக்கடி வெளியில் போகிறவளா. சாயந்தரமானால் கோயிலுக்குப் போவேன். அதுக்குக் கண்ணாடி எதுக்கு..?' என்பாளோ.

"வேண்டாம், சார்.''

இதையும் படியுங்கள்:
அன்றாட மருத்துவத்தில் பனங்கற்கண்டின் பயன்கள்!
ஓவியம்;கரோ

ர் வந்து சேர்ந்தான். அவரவர்களுக்கென வாங்கியதை ஜெயந்தியின் கையில் கொடுத்தே, விநியோகம் செய்தான்.

ச்ச்... ஏதோ ஒண்ணு.. ஜெயந்திக்கும் வாங்கி வந்திருக்கலாம். புதுமை… புதுமைன்னு கடைசியில் வெறுமை ஆயிடுச்சு.

"தப்பு பண்ணிட்டேன், ஜெயந்தி" முகம் சுளித்து முகவாயில் சுண்டிக்கொண்டான், நந்தகோபால்.

"என்ன?" விழித்தாள், அவள்.

புதுடில்லியிலிருந்து சென்னையிலிருந்து திருச்சி வரை அவளுக்காக அலைந்ததை விவரித்தான், அவன்.

"அத்தனை நேரமும் என்னைப் பற்றிய நினைவே உங்களுக்குப் பிரதானமாய் இருந்திருக்கிறது. எனக்கு அதுவே பெரிய திருப்திங்க... நீங்க எதுவும் வாங்காதலும் நல்லதாப் போச்சு. எனக்குன்னு வைச்சிருந்த தொகையைக் குடுங்க - குழந்தைங்க டிக்ஷனரி வேணும்னு ஒரு மாசமா கேட்டுக்கிட்டிருக்காங்க. அதை வாங்கிடலாம்...

அவள் தெளிவாய்ப் பேசினாள்.

அவன் புன்னகையுடன் அவளை அணைத்தான்.

பின்குறிப்பு:-

கல்கி 30  மே  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com