சிறுகதை; நானும் நகை அணியமாட்டேன்!

Short story; I don't wear jewelry either!
ஓவியம்; நடனம்
Published on

-அகிலா கார்த்திகேயன்

"நானும் இனிமேல் அணியவே மாட்டேன்" என்று என் மனைவி சொன்னாள். அவளைப் பார்த்தேன். காது, மூக்கு, கழுத்து எல்லாம். முளியாக இருந்தன. அத்தனை நகைகளும் மேஜையின் மேல் குவியலாகக் கிடந்தன. நகையைப் பற்றிய அவளுடைய முடிவை நகைப்புக்கிடமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. சொல்லும்போது முகத்தில் புன்னகைகூட இல்லாமல் சீரியஸாகவே சொன்னாள்.

தலைவி பாணியை என் குடும்பத் தலைவியும் பின்பற்றியிருப்பது எனக்கு ஏகப்பட்ட சந்தோஷத்தைக் கொடுத்தாலும், எங்கே அத்தனை நகைகளையும் தானம், தர்மமென்று கொடுத்துத் தொலைத்துவிடுவாளோ என்ற சந்தேகமும் எழாமலில்லை. எதற்கும் நோட்டம் விடலாமென்று ஆரம்பித்தேன்.

"இப்படி காதுலே, மூக்கிலே ஒண்ணுமில்லாம நின்னா நல்லாவா இருக்கும்? கொஞ்சம் யோசனை பண்ணு" என்று கெஞ்சுவதுபோல் கேட்டேன்.

"தீர்மானமா சொல்றேன். இனிமே இதையெல்லாம் போட்டுக்கிறதா இல்லே.'' உறுதியாக பதில் வந்தது.

"பரம்பரை, பரம்பரையா எல்லோரும் போட்டுண்டு வந்த நகைங்களாச்சே!"

''போதும்... பரம்பரை அது இதுன்னு பேசி என் கோபத்தைக் கிளறாதீங்க.'

''இந்த ஒட்டியாணத்தைப் பாரு... கிட்டத்தட்ட ஐம்பது பவுன்லே என்ன ஒரு வேலைப்பாடோட செஞ்சிருக்கு... எல்லாம் அந்தக் காலத்து ஒரிஜினல் 22 கேரட். நீ எப்போ போட்டுட்டு வந்து நின்னாலும் கம்பீரமா ஒரு கெட்அப் கொடுக்கும் தெரியுமா"

"கம்பீரத்தைக் கொண்டுபோய்க் குப்பையிலே போடுங்க.''

"இருபது பவுன் காசு மாலையைப் பாரு... தழையத் தழைய உன் கழுத்து நிறைய இது அலங்கரிக்கிறபோதெல்லாம் அம்மன் வந்து நிக்கறாப்போல இருக்கும்."

இதையும் படியுங்கள்:
ஒரே சிம் கார்டை பல ஆண்டுகளாக பயன்படுத்துபவரா நீங்கள்? அடடா!
Short story; I don't wear jewelry either!

"சுத்த கழுத்தறுப்பா போச்சே உங்ககூட... நான் சொன்னா சொன்னதுதான்."

"இப்படி மூக்குக்கு மேலே கோபம் வருதே... அப்ப இந்த எட்டுக்கல் பேசரி போட்டா எத்தனை எடுப்பா இருக்கும் தெரியுமா"

"எடுப்பு கிடுப்புன்னு கடுப்பு ஏத்தாதீங்க, ஆமாம்.."

"இந்த கல்லு வளையலை உன் வாழைத்தண்டு கைக்குப் போட்டா.."

'இன்னும் அந்த கம்மல், புல்லாக்கு, ராக்கோடி, திருகப்பூனு ஒவ்வொண்ணா அடுக்கிக்கிட்டே போகவேண்டாம்... இனிமே இதையெல்லாம் நான் தொடறதா இல்லே."

'அப்பாடி... இனிமேல் நகைத் தொல்லையில்லை' என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன், "அப்போ இதையெல்லாம் லாக்கர்லே கொண்டு போய் வைச்சுடலாம்னு சொல்றயா?" என்று ஆவலுடன் கேட்டேன்.

"அதானே பார்த்தேன்... உங்களோட அல்ப புத்தி உங்களை விட்டுப் போகுமா என்ன..." என்று அவள் ஆரம்பித்ததும் திடுக்கிட்டேன். நான் பயந்ததுபோலவே தானம் தரலாமென்பாளோ என்னவோ?

"ஒரு கல்யாணம் கார்த்தின்னா அவ அவ ஃபேஷனா லேட்டஸ்ட் டிசைன்லே போட்டுண்டு வந்து பெருமையா பீத்திக்கறா... நான் மட்டும் ஹைதர் அலி காலத்து உங்க பரம்பரை பழசையெல்லாம் லாலி பூலின்னு போட்டுண்டு கர்நாடகமா நிக்க வேண்டியிருக்கு... இதை எல்லாத்தையும் அழிச்சி புது டிசைன்லே வேற நகைகள் பண்ணிக்கறேன்னு நான் கழுதையா கத்தியாச்சி... நீங்க அதைக் காதிலே போட்டுக்கிறதா இல்லே... அதனாலதான் நானும் அதுவரைக்கும் காதிலே, கழுத்திலே போட்டுக்காம் நிக்கறதா முடிவு பண்ணிட்டேன்... நாலு பேர் மானம் போறாமாதிரி கேட்டாத்தான் உங்களுக்குப் புத்தி வரும்" என்றாள்.

 பின்குறிப்பு:-

கல்கி 23.2.1997 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com