
-நா. நாகராஜன்
சுஜாதாவின் நாவலை திருப்பிக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்றவளை இந்துதான் கட்டாயப்படுத்தி, தன் அண்ணனின் கல்யாண வீடியோவைப் பார்த்துவிட்டுப் போகச்சொன்னாள்.
"இன்னொரு தடவை பார்த்துக்கறேனே இந்து.''
"அப்புறம் சந்தர்ப்பம் அமையாது ரேவதி.''
"நான்தான் மேரேஜ் அட்டெண்ட் பண்ணினேனே...''
"இது... மேரேஜ் வீடியோ மாதிரி இல்லாம, ஒரு படம் பார்க்கிற மாதிரி இருக்கு பாரேன். ஃப்ளவர்ஸ், மழை, கோபுரம், மணிக்கதவு, பறவைன்னு பல ஷாட்ஸை சேர்த்து, ம்யூசிக் வேற ரம்யமா மிக்ஸ் பண்ணி... சூப்பரா வந்திருக்கு..."
பிறகு ரேவதியால் தட்ட முடியவில்லை.
பெரிய ஹாலில் நிறையப் பேர் உட்கார்ந்து இருக்க.... ரேவதியும் அமர்ந்தாள்.
இந்து சொன்னது நிஜம்தான்.
சினிமா பாணியில் நட்சத்திரம் நடுவே பெண், மாப்பிள்ளை முகம் சுற்றியது.
திறக்கும் மணிக்கதவு. வாசல் கோலம்.
நீலவானம்... கோபுரம் நிழல் படம்போல.
பெண்ணின் தலை அலங்காரம் இன்ச் இன்ச்சாக... புடைவை அழகு தனியாக நடுநடுவே க்ளோஸப்பில் ரேவதியின் முகம் தெரிய.
இந்துவின் அம்மா திரும்பிச் சிரித்தாள் .
ஊஞ்சல் ஆடும்போது கேமராவும் ஆடி அசைந்து படமாக்கி இருக்கிறது.
பாதங்களை மட்டும் டைட் க்ளோசப்பில் காட்டி அசத்தி.
இடையிடையே ரேவதியின் முகம் ஃப்ரீஸ் ஆகி இருக்கிறது.
விளம்பரப்படம் போல் -
சிரிக்கும் ரேவதி...
பேசும் ரேவதி...
திரும்பும் ரேவதி...
முகம் சுளிக்கும் ரேவதி.
ஒரு கண் மாதிரி அவளை கவனமாக ரசித்துப் பதிவாக்கி இருக்கிறது.
மற்றவர்களுக்கு யதார்த்தமாக இருக்கலாம்.
அவளுக்கு அநியாயமாகத் தோன்றியது.
அப்பாவிடமே நியாயத்தைப் பட்டென சொல்லும் ரேவதி.
ஆண் என்பதால் அண்ணன் சொல்வதற்கு அடங்கிப் போகவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்று வாதாடும் ரேவதி.