

-தமயந்தி
பத்து மணிக்குத் தாலி கட்டியாகிவிட்டது. எங்கு போக என்று தெரியவில்லை. லாட்ஜுக்கு வந்து ரூமெடுத்தாகி விட்டது. மகி தாலியை ஏனோ குழந்தையின் தவிப்போடு பிடித்துக்கொண்டிருந்தாள்.
"தாலி ஒரு அடையாளம்தான் தேவா. அது கட்டிட்டிருக்கிறவங்கள்லாம் உண்மையாயிருக் காங்கன்னோ, தாலி கட்டாம இருக்கிறவங்க மோசமானவங்கன்னோ சொல்லிற முடியுமா தேவா?" என்று விவாதித்திருக்கிறாள். இப்போது விவாதங்களுக் கெல்லாம் இடமில்லை. தாலி தேவை - லாட்ஜுக்காவது.
"தேவா..."
"என்ன மகி?''
"பசிக்குது."
"சாப்டலே நீ?"
"ம்ஹூம்." மகேஸ்வரிக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. இந்நேரம் வீட்டில் களேபரம் ஆகியிருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில் போலீஸ் கேஸாகும். தேவராஜ் வீட்டுக்குப் போலீஸ் போகும். ஆள் போகும். பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும். தடிக்கும். நீடிக்கும். கை நீளும். நாக்குகள் சுழலும். சுழலட்டும். ரிஜிஸ்தர் பண்ணிவிட்டால் பயமில்லை. அதுவரை லாட்ஜிலேயே இருக்க வேண்டும். முடிய வேண்டும்.
படுத்திருந்த தேவராஜ் எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டான். அழாதே என்று சொல்லிவிட்டு அசையாது நின்றான். அவனைக் கட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது இறுக்கமாக. மூச்சே வெளிவராத இறுக்கத்தோடு.
"நீ சாப்டியா தேவா?"
ம். அம்மா சாப்டுட்டு வெளியே போடா தேவான்னா."
"ம்ம்."
"உள்ள தாழ் போட்டுக்க."
"சரி."