
-யோகி
அக்காவிடம் இருந்து சூட்கேஸை வாங்கிக்கொண்டேன். அப்பா பயணச் செலவுக்கான பணத்தை என்னிடம் கொடுத்தார். அதுபோக இன்னும் கொஞ்சம் பணத்தை அக்காவின் கையில் கொடுத்து, ''ஏதாவது வாங்கிச் சாப்பிடும்மா. ஒண்ணும் சாப்பிடாம அவங்கள குத்தஞ் சொன்னா எப்படி... மாப்பிள்ளை நாலு இடத்துக்குப் போவார் வருவார். உனக்கு வேணும்னா நீதான் கேட்டு வாங்கிக்கணும்'' என்றார்.
அம்மா கண்களை துடைத்துக்கொண்டாள். "முருகேசு... சொன்னது ஞாபகத்துல் இருக்கு...'' என்றார் அப்பா.
''ம். இருக்குப்பா."
"அப்பாக்கு உடம்புக்கு முடியலை... அதான் அக்காவைக் கொண்டு போய் விட்டுட்டு வரச் சொன்னார்ன்னு சொல்லு... அப்பா வரலைன்னு ஒண்ணும் நினைச்சுக்காதீங்க. ஒரு வாரங் கழிச்சு வர்றேன்னு சொன்னார்ன்னு சொல்லு. அக்கா இனி சண்டை பிடிக்கமாட்டா.... அப்பா புத்திமதி சொல்லி அனுப்பி இருக்கார்ன்னு சொல்லு..." என்று அம்மா சொல்லச் சொல்ல அக்கா கண்கலங்கியது வேறு பக்கம் பார்ப்பது மாதிரி கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
"வெளிய போகும்போது என்ன அழுதுக்கிட்டு... குடும்பம்னா நாலும் இருக்கத்தான் செய்யும். அனுசரிச்சுப் போகணும்... புரியுதா..." என்றார் அப்பா.
அக்கா ஒன்றும் பேசவில்லை. "வாடா போகலாம்" என்று என்னை அழைத்தாள். அவளுக்கு யாரையும் பிடிக்கவில்லை என்று தோன்றியது. யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. ஏன் சொல்ல வேண்டும். தன்னை புரிந்துகொள்ளாதவர்களிடம் பேசினாலும் ஒன்றுதான். பேசாவிட்டாலும் ஒன்றுதான்.