
-அமுதகுமார்
ஸ்கூல் பேகை எடுத்து முதுகில் மாட்டிக்கொண்ட நந்துவின் பிஞ்சு மனசுக்குள் ஏக்கம் பரவியது.
பள்ளிக்கூடம் போனதும் சுஜய் வந்து அவனோட பப்லுவைப் பற்றி பீற்றிக்கொள்வானே. வரவர சுஜய்யின் அலட்டல் நந்துவுக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை.
பிறகு என்ன?
எப்பொழுது பார்த்தாலும் சுஜய் அவனோட தங்கச்சிப் பாப்பா பப்லுவின் பெருமையையே பீற்றிக்கொள்கிறானே!
நந்துவின் எண்ணம் வீண் போகவில்லை.
பள்ளியில் இடைவேளை விட்டதும் சுஜய் நந்துவைப் பிடித்துக்கொண்டான்.
"நந்தூ... உனக்கொரு விஷயம் தெரியுமா? எங்க அத்தை வீடு ஆளியாறில் இருக்கிறதா சொன்னேன். ஞாபகம் இருக்கா?"
"ஆமாம். அதுக்கென்ன இப்போ?"
''நேற்றைக்கு எங்க அத்தை வீட்டுக்குப் போயிருந்தோம். ஆளியாறு டேமை சுற்றி பார்த்தோமாக்கும். எங்க பப்லுவையும் தூக்கிட்டு போயிருந்தோமே."
'போச்சுடா! பப்லுவின் பெருமையை ஆரம்பிச்சுட்டானே!'
நந்து பேசாமல் இருந்தாலும் சுஜய் விட்டபாடில்லை.
"ஆளியாறு டேமைச் சுற்றிப் பார்த்தபோது எங்க பப்லுவை போட்டோ எடுத்தோம். இங்கே பாரு எங்க பப்லுவை."
சுஜய் காட்டிய போட்டோக்களில் உண்மையிலேயே பப்லு மிகவும் அழகாக இருந்தாள். கன்னம் இரண்டும் பஞ்சு மிட்டாய் மாதிரி இருந்தது.
"என்னோட சட்டை பேண்ட். சின்னதா போனதைப் போட்டு போட்டோ எடுத்திருக்கோம்."
ஒவ்வொரு போட்டோவாகக் காட்டி சுஜய் மிகவும் அலட்டிக்கொண்டான். நந்துவுக்கு மிகவும் தர்ம சங்கடமாக இருந்தது. பதில் பேசாமல் போட்டோக்களைப் பார்த்தான்.