
-ராஜேஷ்குமார்
தன் பாதங்களில் வீழ்ந்து வணங்கிய அந்த இளம்பெண்ணைப் பரிவோடு பார்த்தார் சத் சங்கரானந்தா சுவாமிகள்.
"சௌபாக்யவதி பவ...! எழுந்திரம்மா...."
எழுந்த அந்தப் பெண்ணுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். துலக்கி வைத்த செப்புப் பாத்திரம் போன்ற புது நிறத்தில் லட்சணமாய் இருந்தாள். அவளுடைய கண்களில் கவலை கனமாய் ஈஷியிருந்தது.
''சுவாமி...! உங்க ஆசீர்வாதம் வேணும்..''
சுவாமிகள் புன்னகைத்தார். "உன்னோட முகத்தைப் பார்த்தா... ஏதோ ஒரு பெரிய கவலை மனசுக்குள்ளே இருக்கிற மாதிரி தெரியுதே..."
"ஆமா... ஸ்வாமி....! கடந்த ஒரு மாச காலமா நான் நிம்மதியில்லாமே தவிச்சுட்டிருக்கேன்... உங்க அருட்பார்வையும் ஆசிர்வாதமும் எனக்குக் கிடைச்சுட்டா... அந்தக் கவலைக்குரிய பிரச்னை காணாமே போயிடும்..." அவள் கைகூப்பி கண்களில் நீர் கோத்தாள்.
"கவலைப்படாதேம்மா...! உன்னோட கவலை எதுவானாலும் சரி. இனிமே காணாமே போயிடும்... இப்படி வந்து என் எதிர்ல உட்கார்ம்மா."
அவள் வந்து உட்கார்ந்தாள்.
சுவாமிகள் தன் அறைவாசலில் நின்றிருந்த சிஷ்யகோடிக்கு கண் ஜாடை காட்டி வெளியே போகும்படி சொல்லிவிட்டு, தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த பிரத்யேகமான விபூதிப் பையை எடுத்தார். மயக்க மருந்து கலந்த அந்த விபூதியில் ஒரு சிட்டிகையை எடுத்து பெண்ணின் நெற்றியில் தீட்டிவிட்டு அவளுடைய நாசிக்குப் பக்கத்தில் கொண்டு போனார்