

-இந்திரா செளந்தர்ராஜன்
அற்புதமாக இருக்கிறது ஆகாசம். எப்பொழுதாவது மேகச் சிதறல்களும் அதன் பொன்னிறச் சேர்க்கையும் தாற்காலிகமாக ஓர் ஓவியக் கண்காட்சி நடத்துவதைப் பார்க்கும்போது பிரமிப்பு, திகைப்பு என்பதோடு இயற்கைதான் எத்தனை பெரிய சக்தி என்கிற எண்ணமும் கலவையாகக் கிளர்ந்தெழுந்து விடுகிறது.
பலருக்கு இதை ரசிக்கத் தெரியவில்லை. அதோ மயிலாப்பூர் மாடவீதி மொட்டை மாடியில் நின்றபடி வெங்கடரமணன் பார்க்கும்போது, அது நிதர்சனமாகத் தெரிகிறது.
கையில் சந்தியாவந்தனம் பண்ண எடுத்து வந்திருந்த நீர்ப் பாத்திரம். அந்தப் பாத்திர நீரின் திவலைகளில்கூட ஆகாச ஓவியத்தின் பிம்பங்கள் பட்டுத் தெறிக்கின்றன்.
ஊடாடிக் கலைக்கிறது கீழே அப்பா சைக்கிளை எடுக்கும் சப்தம்.
அப்பாவுக்கு கோவிந்த வெங்கடேச சர்மா என்று சற்று நீளமான பெயர். இந்த வேகயுகத்திற்கு அத்தனை நீளப் பெயரை உச்சரிக்க நேரமில்லாததால் கோந்து சாஸ்திரி என்றாக்கிவிட்டது அவரை. வெங்கடரமணன்கூட இந்தச் சிதைவுக்குள்ளானவன்தான். வெங்க்கி என்றாகிவிட்டான். அம்மா மட்டும் எப்பொழுதும் முழுப் பெயர் சொல்லித்தான் அழைப்பாள். பெயரைச் சுருக்கினால் வாழ்வும் சுருங்கிப்போகும் என்பது அவளது அசட்டு நம்பிக்கைகளில் ஒன்று. சரியான அடுப்படிப் பூனை. ஆகையால் புகை நிமித்தம் உருவாகும் வியாதிகள் சர்வமும் உண்டு. அதில் ஒன்று இருமல், சமயங்களில் கின்னஸில் இடம்பிடிக்குமளவு இருமுவாள். பதறிப்போய் நெஞ்சை வருடி விடுவான் வெங்க்கி.