
-தாமரை
காத்திருந்த கருணாகரனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. எட்டு மணி அப்பாயின்ட்மென்ட்டுக்கு ஏழே முக்காலுக்கே வந்து விட்டார். கிளம்பும்போது உஷா சந்தேகமாய்ப் பார்த்தாள். "ஒருத்தரைப் பார் வேண்டியிருக்கு". முணுமுணுத்து விட்டு பதிலுக்குக் காத்தராமல் வந்துவிட்டார். இந்த விஷயத்தில் உடனடியாக ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். இனியும் பொறுக்கமுடியாது.
அனுமதி கிடைத்து ஹாலைக் கடக்கையில் பிரமித்தார். கச்சிதமான அலுவலக ஒழுங்கில் சுமார் இருபத்தைந்து பேர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். எல்லா மேசைகளிலும் பர்சனல் கம்ப்யூட்டர். ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்திற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?
'கேசவமூர்த்தி' என்ற பெயர்ப் பலகையிட்ட அறைக்குள் நுழைந்தார்.
''உட்காருங்க மிஸ்டர் கருணாகரன்" என்ற கேசவமூர்த்தி கூரிய கண்களுடன் கம்பீரமாக இருந்தார். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற வயோதிகர் என்று சொல்லவே முடியாது.
"சொல்லுங்கள். உங்களுக்கு நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டும்?" சுத்தமான ஆங்கிலம்.
கருணாகரன் சற்றுத் தயங்கினார். பின் ஆங்கிலத்தில், "வந்து... நான் என் தேவையைச் சொல்லதற்கு முன் உங்கள் நிறுவனத்தைப் பற்றி அறிய விரும்புகிறேன். ஏனெனில்..."