
-ஆர்னிகா நாசர்
இன்ஸ்பெக்டர் சித்தாந்த், தனக்குரிய இருக்கையில் அமர்ந்து தன் அலுவலைக் கவனித்துக்கொண்டிருந்தார்.
"எக்ஸ்க்யூஸ் மீ!" சுத்திகரிக்கப்பட்ட குயிலின் குரல்.
சித்தாந்த் நிமிர்ந்தார். அவரின் இருக்கைக்குப் பின் நின்றிருந்த 'ரோபன்' சீழ்க்கை அடித்தது. அதன் கையில் நாலெட்ஜ் பேஸும் வெர்ச்சுவல் ரியாலிட்டி பிளேயரும்.
"சீழ்க்கை அடித்த என் உதவியாளனை மன்னியுங்கள். அது ஒரு இயந்திர மனிதன்... நீங்கள் உட்கார்ந்து, வந்த விஷயத்தைக் கூறலாம். உங்கள் பெயர்?"
''மிஸஸ் பூர்விஷா குரியன்!"
"என்ன பிராப்ளம் உங்களுக்கு?"
"என் கணவரைக் காணவில்லை!"
"எப்போதிலிருந்து?" ரோபன் நாலெஜ் பேஸ் உதவியுடன் வினவியது.
"நேற்று முன்தினம் வேலைக்குப் போனவர் திரும்பவில்லை!"
"என்ன வேலை பார்க்கிறார்?"
"மரியா கல்லூரியில் சமூகவியல் பேராசிரியர்!"
"அவரின் புகைப்படம்?"
"இதோ!" நீட்டினாள் பூர்விஷா. புகைப்படத்தில் 44வயது சோடா புட்டி ஆசாமி சிரித்திருந்தார்.
"ஓகே! உங்கள் முகவரி?"
"இந்தாருங்கள் விசிட்டிங்கார்டு!" பிளாஸ்டிக்கில் நீட்டினாள்.
''மிஸஸ் பூர்விஷா! இந்தப் புகார் படிவத்தைத் பூர்த்தி செய்துகொடுங்கள்..."
தன்னையே உலுக்கும் ரோபனை அவதியாய்த் தவிர்த்தாள் பூர்விஷா.
நொடி தாமதித்து நாக்கை மேல் அன்னத்தில் சொடக்கி 'டொக்' என ஒலி செய்து பேனாமூடியைக் கழற்றினாள். பூர்த்தி செய்ததை சரி பார்த்தாள். பேனாவை மூடினாள். மூடினவள் தொடர்ந்து நான்கு முறை மூடியை இறுக்கி திருப்தியானாள்.
''கண்டுபிடித்து விடுவீர்கள்தானே?"
''பின்னே?"
பூர்விஷா புறப்பட்டாள்.
"சார்! ஒரு விஷயம். நாம இன்று மாலை ஒரு முறை அவள் வீட்டிற்குப் போய்வந்தால் என்ன?"என்றது ரோபன்.