

-கிருஷ்ணா
கீழச் சித்திரை வீதியெங்கும் ஜேஜேவென்றிருந்தது. உற்சாகம் கொப்பளிக்கும் மக்கள்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் 'வையாளி' உற்சவத்தைக் காணவே இப் பெருங்கூட்டம். நாளை சித்திரைத் தேர்.
இருபது வருடங்கள்! ஆம், இருபது வருடத்திற்குப் பிறகு நான் மீண்டும் இந்த வையாளியில் கலந்து நிற்கிறேன்.
அனிச்சையாய் என் கண்கள் எதிர் வீட்டை நோக்கின. போன வாரம்தான் ஸ்ரீரங்கத்துக்கு வேலை மாற்றலாகி இந்த வீட்டில் வந்து செட்டிலானோம். அதே வீடு! நான் என் பெற்றோருடன் வசித்த அதே வீடு. அதே எதிர் வீடு!
''என்ன அடிக்கடி எதிர் வீட்டையே பார்க்குது உங்க கண்ணு?"
என் மனைவி காதருகில் வந்து கிசுகிசுத்தாள்.
''மலரும் நினைவுகள்" என்றேன் புன்சிரிப்புடன்.
"ஐயோ, மீண்டும் உங்க சின்ன வயசுப் புராணமா?"
போலியாய் காதைப் பொத்திக்கொண்டாள்.
மீண்டும் என் கண்கள் எதிர் வீட்டில் போய் நிலைத்தன.
சம்யுத்தா!
இந்தப் பெயரை மனசு உச்சரிக்கும்போதே எனக்குள் ஆர்ப்பரிப்பு.
"ஏய். அரைக் கிழவா' என்று கெக்கலித்தது மனதிலிருந்து ஒரு குரல்.
எத்தனை வயதானால் என்ன? வாழ்க்கையில் சிலவற்றை எப்போதுமே மறக்கமுடியாது.
முதல் காதல், முதல் சம்பளம், முதல் முத்தம், தன் குழந்தையின் முதல் ஸ்பரிசம்...
சம்யுக்தையை நான் சந்தித்தது இதேபோன்ற வையாளித் திருவிழா அன்றுதான்.