
-சீதா ரவி
"ஜானு..."
கடைசி துளசி தளத்தைத் தொடுத்து முடித்த ஜானகி எழுந்தாள் .
"ஏன்மா...?"
"போய் பங்கஜத்தம்மாட்ட கேட்டு தேங்குழல் அச்சு வாங்கிண்டு வாயேன்... நம்மதுல கன கனமா விழறது. குழலோடாம போய் நன்னாவே வராது...."
"தேங்குழல் இல்லைன்னா என்னம்மா, விடேன்... இத்தனை விதம் பண்ணியிருக்கியே..."
''மனசு கேக்கலைடீ ஜானூ... தேங்குழல்னு சொல்றச்சேல்லாம் எனக்கென்னவோ அந்த வேய்ங்குழல் வாய்தான் ஞாபகம் வரது... ஒரு தடவை சோம்நாத்பூர்ல பார்த்த வேணுகோபாலன் விக்கிரகம் அப்படியே அந்தக் குழல்லேருந்து அலை அலையா சங்கீதம் கிளம்பி வர்றாப்பல தத்ரூபம்... கோகுலாஷ்டமியும் அதுவுமா அவனுக்குக் குறை வைக்க வேண்டாம்..."
ஜானு சிரித்துக்கொண்டாள். துளசிமாலைக்குத் தண்ணீர் தெளித்து ஓலைக் கூடையைக் கவிழ்த்து மூடினாள். முன் நெற்றியை மட்டும் வாரிக்கொண்டு கூடத்தை நிறைத்துக் கிடந்த மாக்கோலம் மிதிபடாமல் நுனிக்காலால் நடந்து வெளியேறினாள்.
தெருவில் ஒரு வீடு விடாமல் சின்னப் பாதங்கள் படியேறிக்கொண்டிருந்தன. அக்கறையுடன் அளவெடுத்து வடித்ததுபோல் சில, அவசரமாகப் பல, அகட்டி அகட்டி வைத்து அலட்சியமாக வரையப்பட்ட வேறு சில...
ஸ்ரீமதி மாமி காவியிட்டுக்கொண்டிருந்தாள். மணக்கோலத்தின் ஓரத்தை சிங்காரித்த தாமரை மொட்டுகளைச் சுற்றி ஒரே அகலத்துக்கு அரக்குப் பட்டை. ஜானகி ஒரு நிமிடம் நின்று அதைப் பார்த்தாள்.