

-ஆர். வெங்கடேஷ்
இந்த மொட்டைமாடி போர்ஷனுக்கு வெளியேதான் டாய்லட். தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் கல்யாணராமன். நல்ல நிலா வெளிச்சம். அவசரமாய் டாய்லட் போய்விட்டு, வெளியே வந்தபோதுதான், மேலேயிருந்த தண்ணீர் டேங்க்மேல் யாரோ உட்கார்ந்திருப்பதுபோல் இருந்தது.
கொஞ்சம் பின்னொதுங்கி, எம்பிப் பார்க்க, யாரோ கண்டிப்பாக உட்கார்ந்திருந்தார்கள்.
"யாருப்பா அது மேல?"
அவர் குரல் அவருக்கே மெதுவாகத்தான் கேட்டது. யாராக இருக்கும்? இந்தப் பாதி ராத்திரியில் இங்கே வந்து உட்காருவானேன்?
இம்முறை கொஞ்சம் குரலுயர்த்திக் கூப்பிட்டார்.
லேசாய் அசைவு தெரிய, "நான்தான் சார்" என்றதொரு குரல், பின்னர் தலை தெரிய, விஜி! வீட்டுக்கார வீட்டுப் பையன்.
"என்னப்பா இங்கே ஒக்காந்திருக்க?"
"சும்மாதான் சார்"
"படுத்துக்கலியாப்பா?"
"போணும் சார்," என்றவன் மீண்டும் வானம் பார்க்கத் திரும்பிவிட்டான். வினோதமான பையன். மிஞ்சிப்போனால் பதினாறு, பதினேழு வயதிருக்கும். நெடுநெடுவென வளர்ந்தவன். இன்னும் அவனுடைய அப்பாவுக்கு, அவன் 'குட்டி'தான். விஜயகுமார் என்று எவரும் அவனை அழைத்ததில்லை. எல்லோருக்கும் சின்னப் பையன். அதுதான் பிரச்னையோ?