
-சுப்ரமணியன் ரவிச்சந்திரன்
தாம்பூலம் வாங்கியாயிற்று. சில சில்லறை பர்ச்சேஸ்கள் முடிந்ததும் ஊரைப் பார்க்க சவாரிதான்.
முகுந்தன் தோளைத் தொட்டான். "என்னடா... போக வேண்டியதுதானே! ஏதாவது சில்லுண்டி வேலை வைத்திருப்பாயே?"
''ம்... லஸ்ஸில் செகன்ட்ல் பனியன்... அம்மாவுக்கு ஓடோப்ளர் மாத்திரை... போனதரமே வந்தும் விட்டுப் போன கோல நோட்டு..இத்யாதி, இத்யாதி."
ஒவ்வொரு பயணத்தின் போதும் லிஸ்டும் கூட வரும். முழுலிஸ்டையும் வாங்க வேண்டுமென்ற கட்டாயமோ, வாங்கியதாகச் சரித்திரமோ இல்லை. இன்னும் சொன்னால் லிஸ்டில் இல்லாததையே வாங்க நேரிடும். அடுத்த தடவை என்ற சமாதானம் எதற்கு இருக்கிறது ஐந்தரை பாயிண்ட் டு பாயிண்டைப் பிடித்தால் எட்டு மணி நேரத்துத் தூக்கத்துக்கும் பங்கம் இராது.
"என்ன யோசனை? நார்டன் ஸ்ட்ரீட்ல என் ப்ரண்டைப் பாக்கணும். டக்னு பர்ச்சேஸை முடி."
"அதில்ல முகுந்தா... அஞ்சரை பாய்ண்ட் டு பாய்ண்டைப் பிடிச்சு... "
"கள்ளன் மாதிரி பாதி ராத்திரி போகணும். அழகா செங்கோட்ட பாசஞ்சர்... ஜம்னு காலம்பற காப்பி சாப்பிடப் போகலாம்! முதல்ல பர்ச்சேஸை முடி." இம்முறை லிஸ்டில் உள்ளதே வாங்கப்பட்டது.
முகுந்தனின் நார்டன் தெரு நண்பர் பேச ஆரம்பித்து யாழ்ப்பாணம், ரஜினி என்று ஒரு சவட்டு சவட்டி விட்டார் முகுந்தன், கிருஷ்ணனின் வாயைப் பார்த்த யாசோதையைப் போல இவரது வாயையே பார்த்துக் கொண்டிருந்தான்.