
-வெ. நிலாக்கதிர்
நான் அன்னிக்கு மூணாம்போப்பு படிச்சிட்டிருந்தன். அப்பத்தே கதிரேசனும் சுந்தரேசனும் எங்கூருக்கு வந்தாங்க! கதிரேசனும் நானும் ஒரு சோடு! சுந்தரேசன் பள்ளிக்கொடத்திலயே சேத்துல, மூணாம்போப்புல நாந்தா நல்லாப் படிப்பன். நாந்தா மொதலு மார்க்கு வாங்குவன். அப்ப மின்னாடி பலகைல எனக்குப் பக்கத்துல வஞ்சிமுத்து உக்காந்திருப்பான். அவங்கொஞ்சம் குண்டுங்கறதுனால் எனக்குப் பகலைல எடங்காடா இருக்கும். அவ மட்டும் கொஞ்சோ நெருக்கி உக்காந்தான்னா அந்தள்ள இந்தள்ல அசையவே முடியாது. அப்பத்தே கதிரேசன் எங்க வோப்புல கொண்டு வந்து சேத்துனாங்க. எங்க வோப்புக்கு, தங்கவேலு வாத்தியாருதான் பேரெல்லாம் எடுப்பாரு!
அவுருதான் வஞ்சிமுத்தான் பின்னால பசுலைக்கு போகச் சொல்லிட்டு கதிரேசன் என்ர பக்கத்துல உக்கார வெச்சாரு! கதிரேசன் வந்த புதுசுல எனக்குப் புடிக்காது. எப்பவுமே அவன் கம்முனுதா இருப்பான். சிலேட்ட அழிக்கறதுக்கு தண்ணி கொஞ்சோங் கேட்டாக்கூட குடுக்கமாட்டான். நல்லா படிப்பான். வாத்தியாரு கேக்கற கேள்விகளுக்கெல்லாம் நாங்கதா எந்திரிச்சு சொல்லுவம்.