
-கிருஷ்ணா
கடிதத்தைப் பார்த்ததும் தெரிந்துவிட்டது நளினிக்கு.
அதேதான்!
புத்தி அலட்சியம் காட்டச் சொன்னாலும் மனசு விடவில்லை.
எடு! பிரி!
பிள்ளையார் படம் முன் அட்டையில்.
உள்ளே போகச் சொல்லி மனசு கட்டளையிட, கைகள் அந்த வாழ்த்து அட்டையைப் பிரித்தது.
சற்றும் மாற்றமில்லை. அதே வார்த்தைகள்.
"இனியவளே
என்னுள் உறைபவளே, வந்தனம்!"
கம்ப்யூட்டரின் கைவண்ணத்தில், வெகு அழகாய் டைப் செய்யப்பட்ட வார்த்தைகள்.
ஆடிக்காற்றின் மரங்களின் அசைவாய், பீறிட்ட உணர்ச்சிகளை, கடிவாளம் போட்டு அடக்க முயன்றாள்.
நோ! ஏமாறக்கூடாது! இதுவரை கனவு கண்டு, கனவுப் பூக்கள் கருகியது போதாதா?
'என்னுள் உறைபவளே'
சேச்சே.பொய் சொல்கிறான்.
முகம் தெரியாத அந்த 'அவன்' மேல் கோபம் வந்தது.
ஆறு நாட்களுக்கு முன்புதான் இது ஆரம்பித்தது.
'யாராயிருக்கும்?' என்ற யோசனையில் கடிதத்தைப் பிரித்தாள் முதல் நாள்.
பிள்ளையார் படம்! வலஞ்சுழி! உள்ளே 'இனியவளே..'
மனசுக்குள் ஒரு நொடி ஜலதரங்கச் சத்தம். கண்கள் செருகி, விழித்தன.
விழித்த பார்வை காலண்டரில் பதிய, அதிர்ந்தாள்.
ஏப்ரல் ஒன்று!
எவனோ குரூரமாய் விளையாடுகிறான். மூச்சுக் காற்றில் அக்னி நட்சத்திர வெயில்!