
-யோகி
திரும்ப சுவரில் இருந்த கடிகாரத்தில் மணி பார்த்தேன். பதினொன்று. இங்கு வந்து அரைமணி நேரத்துக்கு மேலாகிவிட்டது. சம்பந்தப்பட்ட அந்த ஊழியரை இன்னும் காணோம். அலுவலகம் திறக்கும் நேரம் பத்துமணியாம். ஆனால், ஊழியர் எப்போது வரவேண்டும் என்று எவரும் நேரம் பிறப்பிக்கவில்லையோ!
என்னைப் போலவே வரிசையாய் நிறைய பேர். அந்த நீள பெஞ்சில் அமர்ந்து இருந்தனர். சிலர் நின்ற வண்ணம் இருந்தனர். இன்னும் சிலர் அங்கும் இங்கும் உலாத்திக்கொண்டு இருந்தனர். என்னைப் போலவே அவர்களும் - விட்டத்தையும், சுவர்க் கடிகாரத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
பியூனிடம் ஒருவர் - "சார் எப்போ வருவாரு?" என்று கேட்டார்.
"வருவாரு... வருவாரு... வரும்போது பாரு...' என்றார். அரசாங்க அலுவலகத்தில் வேலை கிடைத்துவிட்டால் சாமானியனுக்கும் கர்வம் வந்து விடுமோ என்னவோ. அங்கு வந்து இருந்த ஊழியர்களைப் பார்த்தேன். ஊழியர் ஒருவர் பத்திரிகை புரட்டிக்கொண்டு இருந்தார். இன்னொரு ஊழியர் வேறு ஒரு ஊழியரின் டேபிள் முன் சேரை இழுத்துப்போட்டு சுவாரசியமாய் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.
எல்லோரும் அங்கு நடக்கும் கூத்துக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். எல்லோருக்கும் கோபம் தலைக்கேறியது. ஆனாலும் என்ன செய்வது. பல்லைக் கடித்துக்கொண்டு இருக்க வேண்டும். ஏதாவது பேசினால், வீண்வாதம் ஏற்படும். சம்பந்தப்பட்ட ஊழியர், விடுமுறை என்றாலோ இல்லை வர தாமதமாகும் என்றாலோ வேறு ஊழியர் எவரேனும் அவரது வேலையைச் செய்ய வரலாமே...
ஒரு டீ குடிக்க வெளியே போகலாமா என்று யோசித்தேன். பிறகு போகாமல் உட்கார்ந்துவிட்டேன். நான் இந்தப் பக்கம் எழுந்துபோன சமயம், அந்த அரசு ஊழியர் வந்தவிட்டால் இப்போதே கிட்டத்தட்ட நாற்பது, ஐம்பது பேர். எத்தனை மணிக்கு வேலைக்கு வந்தாலும் ஒரு மணிக்கு சரியாக கவுண்டரை க்ளோஸ் பண்ணி விடுவார்கள், இந்த உழைக்கும் சீமான்கள். பிறகு நாளை திரும்ப லோலோவென்று அலைய வேண்டும்.