
-மதுமிதா
மெலிதான வாசம் அடித்தது. விஸ்வநாதன் நிமிர்ந்தான். சுபத்ரா. புதிதாகப் பூத்த ஒரு பூப்போல இருந்தாள். சடக்கென பார்வையைத் தாழ்த்திக்கொண்டான்.
"விஸ்வநாதன்...!" அவள் குரல் குழைந்தது.
நிமிர்ந்தான்.
மஞ்சள் புடைவை உடுத்தியிருந்தாள். அற்புதமான நிறம். அவள் உடம்புக்கு மிகவும் பாந்தமாயிருந்தது.
விஸ்வநாதன் தலையைக் குலுக்கிக்கொண்டான். சே... என்ன ஆயிற்று?
அவன் தவிப்பை ரசித்தாள்.
"விஸ்வநாதன்...!"
"எஸ்...!"
"உட்காரலாமா...?"
தலையசைத்தான்.
உட்கார்ந்தாள். சின்னப் பெட்டி எடுத்து உறை அகற்றி நீட்டினாள். சாக்லேட் துண்டங்கள்.
"என்ன?"
''என் பிறந்த நாள்...!"
எடுத்துக் கொண்டான்.
"நன்றி...!"
அவன் உதடுகள் முணுமுணுத்தன.
அவள் இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பார்வையில் ஒரு செய்தி இருந்தது. இதுதான் வேதனை. புரிந்து கொண்டதைப் புரியாதது போல பாவனை செய்வது.
"எதாவது பேசுங்க விஸ்வநாதன்?"
அவள் புன்னகையுடன் சொன்னாள்.
யோசித்தான்.
வேண்டாம்.
''எனக்கு நிறைய வேலை இருக்கு...! ''
அவள் முகம் மாறியது. முகத்தில் வேதனை பாய்ந்தது.
அவள் முகமாறுதல் பார்த்து மனசுள் தவித்தான்.
விஸ்வநாதா... வேண்டாம். இளகி விடாதே.ஃபைலை புரட்ட ஆரம்பித்தான்.
அவள் சரக்கென எழுந்துகொண்டாள்.