
-ரிஷபன்
"இதுதான் உன்னோட ரூம்' என்று பாலா அடையாளம் காட்டினான்.
கதவைத் திறந்ததும் நெடி குப்பென்று அடித்தது. காற்றுப் போக வசதி இல்லை.
"ஸ்டோர் ரூம் இன்-சார்ஜ்.''
தலையில் கிரீடம் வைக்கப்பட்டது.
"டேய் பாலா..."
அவனது மாமா பின்னாலேயே வந்துவிட்டார்.
"என்னடா இது... முதல்லே அவருக்கு டிபன், காப்பி தருவியா. வந்த உடனே பொறுப்பைத் தலையில கட்டிக்கிட்டு..."
இடைமறித்தேன்.
"நான்தான் விசாரிச்சேன். ஸ்டோர் ரூம் எதுன்னு..."
''வாங்கோ. மூணு நாளும் இங்கேதான் நிக்கப் போறேள். மத்தியானம்தான் சாமான் வேன்ல வருது. ராஜப்பா வந்திருவார்... என்ன மெனுன்னு ஒரு தடவை பார்த்திரலாம்.
கல்யாணம் ஒரு பெரிய வீட்டிலும் வந்து இறங்கிய நாங்கள் இன்னொரு வீட்டிலுமாக ஏற்பாடு. எதிர் வீடே மாமாவினுடையதாம்.
டிபன் சாப்பிடும்போது சொன்னேன். "இதான் எனக்கு ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ், வில்லேஜ்ல மேரேஜ் அட்டெண்ட் பண்றது."
"எனக்கும். தலைசுத்தறது. எது வேணும்னாலும் மூணு கி.மீ. போகணும் டவுனுக்கு. எங்கப்பாவோட பெரிய பிரச்னை. நல்லவேளை தங்கை கல்யாணம் கிராமத்துலன்னு முடிவாச்சு. எவரெஸ்ட்ல வையின்னு சொல்லாம போனாரே..."
"கவலைப்படாதே...." என்றேன்.
"எனக்கென்ன... நீதான் பிராமிஸ் பண்ண மாதிரி கூடவே வந்துட்டியே. கண்ணன், சக்தி எல்லாம் மாப்பிள்ளை அழைப்புக்கே வரதாச் சொன்னாங்க. அவங்களும் வந்தாச்சுன்னா உனக்கும் ஒரு சேஞ்ஜ் கிடைக்கும்."