
-பொன்னீலன்
டவுன் பஸ்சுக்காகக் காத்து நின்னுக்கிட்டிருக்கான் அந்த இளைஞன். வர்ற பஸ்செல்லாமே நிக்காமப் போயிடுது. பஸ் ஸ்டாப்புல அவ்வளவு கூட்டம்.
ஒல்லியான இளைஞன் அவன். பேண்ட், முழுக்கைச் சட்டை போட்டு, இன் பண்ணியிருக்கான். கழுத்துல தங்கச் சங்கிலி, கையில பிரீப்கேஸ். அடிக்கு ஒருதரம் மணிக்கட்டைத் திருப்பி, கடிகாரத்தைப் பார்க்கிறான். "சை" அவன் உதடு எரிச்சலோட நெளியுது.
கூட்டத்துல நின்னுக்கிட்டிருந்த ஒருத்தன் நகர்ந்து, அவன் முன்னாடி வர்றான். ரெண்டுங்கெட்டான் தோற்றம். முப்பது வயசு இருக்கலாம். தலை கலைஞ்சு, சட்டை கசங்கி பரிதாபமாத் தெரியிறான். கையில கனமான பை வேற.
பையைக் கீழே வெச்சிட்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டுக் காகிதத்த எடுத்து, இளைஞன் கிட்ட நீட்டறான் அவன்.
"இந்த அட்ரஸ் எங்கிருக்குது சார்?"
"அதோ டிராபிக் போலீஸ் நிக்கிறாரு பாரு, அவருக்கு இடதுபுறமாத் திரும்புற ரோட்ல ஒரு நூறு அடி உள்ள போயி, இடது பக்கம் திரும்பி, வலது பக்கம் முதல் சந்துல...."
"நான் வெளியூர் சார். இடம் கண்டு பிடிக்க முடியாம ரொம்ப சிரமப்பட்டுட்டேன். இந்தப் பைல ரேடியோ, டேப்ரிக் கார்டர், கேமரா இப்படி விலையுள்ள
சாமான்கள் நிறைய இருக்கு. தனியாப் போக பயமா இருக்குது சார். கொஞ்சம் வந்து வழிகாமிச்சி விட்டிட்டிங்கன்னா...."
"இல்லப்பா, ரொம்ப அவசரமாப் போகணும் எனக்கு.''