
-சத்தியப்பிரியன்
"என்ன செய்யப் போகிறாய்?" என்றான் அருள்மணி என்னைப் பார்த்து. பின்னணிப் பாடகன் அவன். எனக்கும், அவனுக்கும் ஏழு வருஷப் பழக்கம். கோடம்பாக்கத்தில் கிட்டத்தட்ட எல்லா ஸ்டூடியோக்களிலும் ஏறி இறங்கியிருக்கிறோம். திருவல்லிக்கேணியில் உள்ள புறாக்கூண்டு லாட்ஜ் அறை இன்னமும் காலி செய்யப்படாமல் எங்கள் பெயரில்தான் உள்ளது.
"அம்பாசமுத்திரத்துக்கு திரும்பிப் போயிடப் போறேன்."
"போயி என்ன செய்வ? அப்பா கடையில் பலசரக்கு மடிப்பியா?"
"ஆமாம்."
"அதுக்குத்தான் எம்.ஏ. தமிழ் படிச்சியா?"
"எம்.ஏ. தமிழ் படிச்சா பலசரக்கு மடிக்கக் கூடாதுன்னு விதியா?''
"ப்ச். நான் அப்படிச் சொல்லலை. அப்புறம் நீ ஏன் மெட்ராஸ் வரணும். நாயைவிடக் கேவலமா ஒவ்வொரு ப்ரொட்யூசர் காலையும் பிடிச்சு சான்ஸ் கேட்கணும்?"
"என்ன பிரயோஜனம்? ஏழு வருஷமா எனக்கும், என் தமிழுக்கும் அவமானத்தைத் தவிர என்ன கிடைத்தது? ஒரே ஒரு பாட்டு அருள். ஒரே ஒரு பாட்டு. ஊத்திக்கொண்ட ஒரு படத்தில் பாட்டு எழுத ஒரு சான்ஸ் கிடைச்சதைத் தவிர, வேறு என்னால் என்ன சாதிக்க முடிந்தது?'' என்றேன்.
என்னைப் பற்றி ஓரளவு உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் முழுவதும் சொல்லி விடுகிறேன். தமிழ் எனது மூச்சு என்றால் மிகையாகப்படும். பி.எஸ்ஸி., படிக்கும்பொழுது இரண்டாவது மொழியான தமிழில் பல்கலைக் கழகத்தில் முதலாவதாக வந்தேன். மேற்கொண்டு பௌதிகத்தில் பட்டமேற்படிப்பு படிக்க வலிய வந்த சந்தர்ப்பத்தை உதறி விட்டு எம்.ஏ. தமிழில் சேர்ந்தேன். எனக்குள் சரம், சரமாக இசையின் அரூபங்களும், அதை உருவகப்படுத்தும் தமிழ் வரிகளும் ஓடிக்கொண்டே இருப்பதை என்னால் நிறுத்தவே முடியாது. இவ்வளவும் எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் என் புலமை, எனக்குள் இழையும் இசைத் தமிழ் காரணமாக என்னால் சிறப்பாக வந்திருக்க முடியும். எத்தனை ஹார்மோனிய லல்லல்லாக்கள் முன், என் கவிதைப் பூக்கள் உதிர்ந்து வாடி விட்டன. ஏன் என்பது இந்த ஏழு வருடங்களாகப் புரியவில்லை.