
-கிருஷ்ணா
கேசவனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. கேசவன் என்று வெறுமனே சொல்வதைவிட ஸ்ரீரங்கம் கேசவன் என்றால் சரியாயிருக்கும்.
அவன் பிறந்தது, டிராயர் இல்லாமலும், இருந்தும் அலைந்தது, படித்துக்கொண்டிருப்பது எல்லாமே காவிரி, கொள்ளிடம் நடுவிலுள்ள ஸ்ரீரங்கத்துக்குள்ளேயேதான்.
'நானும், அப்பாவும் அங்கு வருகிறோம்' என்று எழுதி அப்பா சொற்படி கேசவன் என் கடிதத்தை முடித்திருந்தான்.
கேசவன் எனது மாமாவின் சீமந்தபுத்திரன் . கேசவனை நினைத்தால் உடனே எனக்குக் காவிரியின் நினைப்பும் கூடவே வரும்.
சுழித்து ஓடும் காவிரி என்னுள் சலசலத்தாள். வருஷத்துக்கு மூன்று முறை நான் கட்டாயம் ஸ்ரீரங்கம் போய்விடுவேன்.
சித்திரை மாசத்துத் தேர், டிசம்பர் மாசத்து வைகுண்ட ஏகாதசி, முக்கியமாய் ஆடிமாசம்.
ஆடிமாதத்தில் தானே இருகரைகளையும் தொட்டபடி காவிரி ஆறு பெருக்கெடுத்து ஓடும்?
"இப்பத்தான் காலேஜிலே முதல் வருஷம் சேர்ந்திருக்கே. ஆடியாவது, ஆவணியாவது. படிக்கற வேலையைப் பார்."
கடிதம் கண்டதும் அப்பா கறாராய் சொல்லிவிட்டார்.
நான் கவலைப்படவில்லை. அம்மா இருக்கும் தைரியம்தான். பிறந்த ஊர் பெருமையை பேசிப் பேசியே அப்பாவை போரடித்து, 'எக்கேடும் கெட்டுப் போங்கள்' என்று விரக்தியின் உச்சத்தில் தள்ளிவிடுவாள் அம்மா.