
-சிஷ்யா
பால்கனியிலிருந்து பார்த்தபோது சின்ன அழுக்கு உருண்டையாகத் தெரிந்தது.
"இதால பாருங்க." பூர்ணா பைனாகுலர் செட்டை நீட்டினாள். கிரிதர் கண்ணில் அதைப் பொருத்திக் கொண்டான். அழுக்கு உருண்டை அற்புதமாக மாறியது! சணலும் தேங்காய்ப் பஞ்சும் ஒட்டடையும் காய்ந்த புல்லும் கொண்டு கட்டிய குருவி வீடு. அதில் ஒட்டிக்கொண்டு காகிதக் கிழிசல்கள். குவித்த ஒரு கையின் அளவில், வடிவத்தில் இருந்தது. ஒரு பக்கத்தில் துவாரம். அதன் மேல் தொப்பி முனை போல சிறு மூடி. துவாரத்தின் வழியே... கிரிதர் மூச்சைப் பிடித்துக்கொண்டு பார்த்தான். அந்த துவாரத்தின் வழியே ஒரு சின்னஞ்சிறு தலை தெரிந்தது. வீச்சரிவாள் வடிவத்தில், ஆனால் வெறும் ஊசி கனத்தில் அலகு மின்னியது.
"பர்பிள் ஸன் பாட் அதும் பேரு... முட்டை இட்டு அடைகாக்கறது.'" பூர்ணா இலை அசைவதுபோல் மெதுவாகச் சொன்னாள்.
உற்றுப் பார்த்தான் கிரிதர். குருவி கண் மூடி திருப்தியாக உட்கார்ந்திருப்பதாகப்பட்டது. அதற்கென்று ஒரு வீடு, ஒரு குடும்பம் கிடைத்துவிட்ட திருப்தி.
"அதோ பாருங்க... அதுதான் ஆண்!" பூர்ணா மறுபடியும் மூச்சடக்கிக் கிசுகிசுத்தாள் .
அடர்ந்த அந்த செம்பருத்திச் செடியின் மேல் கிளையில் ஒரு அகலமான பட்டுப்பூச்சி போல் ஒளிர்ந்து, பறந்து, படபடத்தது. ஊதா நிறத்து இறக்கைகள் மின்னின. கழுத்துப் பகுதி மஞ்சள் அதனுடன் போட்டி போட்டது. "சிட் சிட் சிட்! சீடு சிட் சிட்...!" என்று ஓயாத புலம்பல் ஒலியும் கூடவே.
பூர்ணா கிரிதரின் தோள் தொட்டு இலேசாகக் கூப்பிட்டாள். "உள்ளே போயிடலாம் வாங்க... அதுங்க ரொம்ப பயந்துடுச்சு, நம்மைப் பார்த்து"
ஒற்றைக் கட்டில் ஓரமாய் ஒதுங்கியிருந்த அவள், பெட்ரூமைக் கடந்து ஹாலுக்கு வந்தார்கள்.
"டீ கொண்டு வரேன்." என்று அம்மா உள்ளே எழுந்து போனார்.
கிரிதர் நெகிழ்ந்து போய்க்கிடந்தான்.
"என்ன மௌனமாயிட்டீங்க..." அவனிடமிருந்த பைனாகுலரை வாங்கி உறையிலிட்டபடி கேட்டாள்.
"எவ்வளவு அற்புதம் பூர்ணா! வெறும் குப்பைகளைக் கொண்டு ஒரு வீடு கட்டியிருக்குப் பார்த்தீங்களா... அதுல இவ்வளவு இணக்கமான ஒரு குடித்தனம். நாம உத்துப் பார்க்கறோம்னதும் அந்த ஆண் குருவிக்கு எத்தனை கோபம்! குரல்ல ஆங்காரத்தை கவனிச்சீங்களா?"
பூர்ணா சிரித்தாள். "புரொடெக்டிவ் இன்ஸ்டிங்ட். காப்பாத்திக்கணும்ங்கற உள்ளுணர்வு. வம்சம் விருத்தியாகணும், நிலைக்கணும், நீடிக்கணும்ங்கறதுக்காக இயற்கை அதும் உடம்போட விதைச்சிருக்குற நியதிகள்."
"மனுஷனுக்கும் இருக்கறதுதானே!"
"என்னோட அனுபவத்தை வைச்சு இதுக்கு பதில் சொல்லணும்னா 'இல்லை' 'கிடையாதுங்கறதுதான் விடை"
உள்ளத்துக் கசப்பு சுற்றும் முகத்தில் தெரியாமல் சொன்னாள்.
நெகிழ்ச்சி அடியோடு கலைந்துபோய் அவளை அடிபட்ட பார்வை பார்த்தான்.
"அப்படிப் பார்க்காதீங்க."
"ஏன் பூர்ணா, பழசை நினைச்சுக் கலங்கறீங்க?"
"நீங்கதான் கலங்கிப் போயிருக்கீங்க கிரி... குருஜி அன்னைக்குப் பேசினதுலேர்ந்து கலங்கிப் போயிருக்கீங்க."
குருஜி! - காவி தரித்த சாமியார் இல்லை. பூர்ணா, கிரிதரன், மீனு, தனபால், கண்ணன், கலா, நித்யானந்தம் என்று பதினேழு முதல் இருபத்தேழு வயது வரையிலான பட்டாளத்தோடு, துருத்தி நிற்காமல் பொருந்திய நாற்பத்தைந்து வயது நாராயணன்.
"மாமான்னு கூப்ட்டா பாந்தமாயில்லே. சார்னு சொன்னா கணக்கு வாத்யார் ஞாபகம் வருது..." தனபால் தயங்கியபோது பூர்ணாதான் பெயர் வைத்தாள்.
"குருஜின்னு கூப்பிடலாம்."
நிலைத்து விட்டது.
பெயரோடு துளியும் பொருந்தாத ஜீன்ஸ். எப்போதும் வெள்ளை குர்தா. அதன் பாக்கெட்டில் கைவிட்டபடி சுபாவமாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று சொன்னார்.
"நீங்க இரண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது...."
'தன் அடி மனசைத் தொட்டுப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து பேசுகிறாரோ? கிணற்றுக்குள் பாய்ந்து பிடி மணலை அள்ளி மீண்டும் நீரைக் கிழித்துக்கொண்டு எழும் கிராமத்துச் சிறுவனைப் போல..? - கிரிதர் வியப்பில் வாய் திறவாது இருந்தான். பூர்ணாவின் மர்மப் புன்னகை அவனை வாட்டியது.
"என்ன குருஜி! கிரியை, தியாகி ஆக்கிப் பார்க்கணும்னு ஆசையோ...?"
"பூர்ணா! யோசிக்காம வார்த்தையை விட்டுடாதே. எனக்கு வலிக்காது. உனக்குத்தான் வலிக்கும். இப்போ இல்ல.. அப்புறம்... ரொம்ப நாள் கழிச்சு வருத்தப்படுவே. யோசி. இரண்டு பேரும் யோசிங்க..." சொல்லிவிட்டு எலியட்ஸ் பீச்சில் அவர்களைத் தனியாக விட்டு விட்டு விறுவிறுவென்று போய்விட்டார்.
"நாம தனியா அகப்படணும்னு காத்திருந்தார் போலிருக்கு... போகலாமா..?" பூர்ணா சாலை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தாள்.
ஸ்கூட்டரை நெருங்கி, ஏறி உட்கார்ந்து "வரேன்" என்று இறுக்கமாய்ச் சொன்னவளிடம் 'யோசிக்கறீங்களா பூர்ணா?" என்றான்.
கைனடிக் உறுமல்தான் பதிலாகக் கிடைத்தது.
இன்று அவளே போன் செய்திருந்தாள். "கிரி! வீட்டுக்கு வரீங்களா? தோட்டத்துல குருவி கூடு கட்டியிருக்கு. நீங்க பார்த்தா அசந்துடுவீங்க."
ஞாயிற்றுக்கிழமையின் துவைத்தல், உலர்த்தல், மதியத் தூக்கம் என்ற அட்டவணையை ஒத்திப்போட்டு, அறையைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டான்.
பூட்டிய பிறகு தோன்றியது - 'முகத்தை இன்னொரு முறை கண்ணாடியில் சரி பார்த்துக்கொண்டிருக்கலாமோ?'
சிரிப்பு வந்தது. புன்னகையுடன் மோட்டார் பைக்கைக் கிளப்பிக்கொண்டு வந்து சேர்ந்தான்.
பூர்ணாவும் புன்னகையுடன்தான் வரவேற்றாள். ஆனால் இப்போது... அந்தப் புன்னகையின் சுவடுகூட அந்த முகத்தில் இல்லை. 'எனக்குச் சிரிக்கவே தெரியாது' என்பது போன்றதொரு சிடுசிடுப்பு. 'நீங்கதான் கலங்கிப் போயிருக்கீங்க' என்று சுட்டிக்காட்டுவதில்கூட அனுதாபமற்ற புறக்கணிப்பு.
என்ன சொல்வதென்று புரியாமல் திகைத்தவேளையில் "டீ சாப்டுங்க" பூர்ணாவின் அம்மா டீயை வைத்துவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டார்.
"இத்தனை பேர் இருந்தோமே நம்ம க்ரூப்ல எல்லாரையும் விட்டுட்டு உங்களையும் என்னையும் ஏன் இணைக்க நினைச்சார் குருஜி? யோசிச்சுப் பார்த்தீங்களா கிரி..."
"..................."
"ஏன் நித்யானந்தத்தையும் என்னையும் தொடர்புபடுத்தி அப்படி ஒரு எண்ணம் அவருக்கு வரலை? தனபால் ரொம்ப சின்னவன், சரி. கண்ணனும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாமேன்னு அவருக்கு ஏன் தோணலை.."
"அதையெல்லாம் நான் யோசிக்கலையே பூர்ணா..."
"ஏன்னா, அவங்க எல்லாருக்கும் அப்பா, அம்மா குடும்பம்னு இருக்கு. நீங்க ஒருத்தர்தான் அந்த சங்கிலிகள்லாம் இல்லாதவர். தனிக்கட்டை. ஒரு டைவர்ஸியைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நீங்க யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டாம். எந்தப் போராட்டமும் இல்லை. அப்படியே எனக்கும்... எனக்கும்... சினிமா ஸ்டைல்ல சொல்றதுன்னா எனக்கும் வாழ்க்கை கிடைச்ச மாதிரி இருக்கும்."
கிரிதருக்குச் சகிக்கவில்லை. இரு கைகளை அகல விரித்து முகத்தைக் கவிழ்த்துக்கொண்டான்.
"இப்படி முகத்தை மூடிக்கிறதால உண்மையை இல்லாம பண்ணிட முடியுமா?"
கோபமாய் நிமிர்ந்தான். "பண்ணிட முடியாது. ஒத்துக்கறேன். ஆனால் எல்லாத்தவிட பெரிய உண்மை உங்களோட காம்ப்ளெக்ஸ் தாழ்வு மனப்பான்மை! நான் உங்களை இத்தனை நாளா பூர்ணாவாத்தான் பார்த்தேன் not as a divorcee. குருஜீ இந்த விஷயத்தைப் பேசினபிறகும் எனக்கு அப்படி எண்ணம் வரலை. ஆனா உங்களுக்கு வந்துடுத்து...பழசை நினைச்சுக் கலங்கறீங்க.''
பூர்ணா பதில் பேசவில்லை. நீண்ட இறுக்கத்தை உடைத்து அவன் கேட்டான்:
"சரி பூர்ணா. நான் கேட்கற ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங்க... நம்ம க்ரூப்ல இருந்த எல்லாரையும் விட்டுட்டு என்னை மட்டும் கூப்பிட்டுக் "குருவிக் கூடு பார்க்க வா'ன்னீங்களே... ஏன்? எனக்கு வேற யாருமே இல்லே; நான் தனியாள்ங்கற அனுதாபத்துனாலயா...?"
"கிரி, ப்ளீஸ்...!" பதறிப் போனாள்.
"என்ன... பதிலையே காணும்?"
அவன் முகத்தைப் பார்க்காமல் பதில் சொன்னாள். "நிச்சயமா அனுதாபத்துனால் இல்லை.."
"பின்னே...?"
"யோசிக்கறேன்.." என்றாள் மிக மெதுவாக.
"யோசிங்க. அதோட குருஜி சொன்னதையும் சேர்த்து யோசிங்க. நான் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரேன்."
அவன் மாடிப் படியிறங்கிப் போனபோது அவள் வழியனுப்ப வரவில்லை. செம்பருத்திச் செடியைக் கடக்கையில் "சிட் சிட் சிட்! சீடு சிட் சிட் சிட்!" - வீரியமாகக் குரல் எழுப்பியது குருவி.
பின்குறிப்பு:-
கல்கி 09.02.1997 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்